`அதிமுகவுடன் இணைவது நிச்சயம், அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான்': அடித்துச் சொல்லும் சசிகலா

சசிகலா
சசிகலா

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுகவுடன் இணைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்றும் கூறினார்.

ஆன்மிக பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா ஒரு நாள் பயணமாக இன்று சிவகங்கை வந்தார். சிவகங்கை அரண்மனையினுள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பேரரசி வேலுநாச்சியாரின் வாரிசுதாரர்களான ராணி மதுராந்தகி நாச்சியார் சசிகலாவிற்கு வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் சிவகங்கை பையூர் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேலுநாச்சியார் நினைவிடம் வந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தியதுடன் வீரத்தாய் குயிலியின் நினைவு தூனிற்கும் மாலை அனிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவில் இணைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான், அதுவும் மக்கள் ஆட்சிதான்" என்றார். பின்னர் திமுகவின் ஓராண்டு சாதனை குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திமுகவினர் தான் சாதனை என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், மக்கள் அதுபோல் நினைக்கவில்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால், ஒன்று கூட செய்யவில்லை. சொல்வதெல்லாம் நன்றாக சொல்கிறார்கள். ஆனால், செய்கை என்பது சரியாக இல்லை" என்றார்.

மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதை அமல்படுத்த வேண்டும். அவர்களே தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். ஆட்சிக்கு வந்த பின், கண்டும் காணாததுபோல் இருப்பது எப்படி" என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, மாநில அரசை, மத்திய அரசு நசுக்குவதாக. மாநில அரசு, கூறிவரும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "அம்மா இருக்கும்போதும் வேறு அரசு தான் மத்தியில் இருந்தது. ஆனால், அவர் இதுபோல் குறை கூறியது இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை தீவிரமாக கேட்டு பெற்றுக்கொடுத்தார். அதுபோல், திமுக செய்ய வேண்டும். மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. மக்கள் இவர்களைத் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள். அதை விடுத்து மத்திய அரசை குறை கூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள். இவர்கள் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும்.

வெறுமனே பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறி பேசலாம். ஆனால், ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும். ஆட்சி முடியும் வரை மத்திய அரசை குறைகூறிக்கொண்டே இருப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in