காங்கிரஸ், விசிக கேட்கும் பதவிகளைத் தருமா திமுக?

எதிர்பார்ப்பில் கூட்டணிக் கட்சியினர்
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளன. திமுக கூட்டணி 21 மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும், 489 பேரூராட்சிகளில் 435 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இதன் காரணமாக மேயர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் கனவுடன் திமுகவினர் பலர் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களுக்கு வேண்டிய அமைச்சர்கள் மூலம் பதவிகளைப் பெற காய்களை நகர்த்தி வருகின்றனர். இதன் காரணமாக சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர், கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி, திண்டுக்கல், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் என 21 மாநகராட்சிகளில் மேயராக வரப்போகிறவர்கள் யார் என்ற கேள்வி இப்போது திமுக கூட்டணியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஏனெனில், மேயர், துணைமேயர் என பதவிகளை தங்கள் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். ஆவடி, தாம்பரம், திருச்சி, கோவை , கன்னியாகுமரி, சிவகாசி மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளைத் தங்கள் கட்சியினருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தவிர திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பதவிகளைக் கேட்டதாகத் தெரிகிறது.

திருமாவளவன்
திருமாவளவன்
கார்த்திகேயன்
கார்த்திகேயன்

உள்ளாட்சி பதவியில் உங்கள் கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் கேட்கப்பட்டுள்ளதா என்று மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சியில் பெரிய பதவிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யாரும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி இருக்கிறார். ஆனால், எங்கள் கட்சியை வளர்க்க மதுரை மாநகராட்சியில் பதவிகளில் பிரதிநிதித்துவம் கேட்டுள்ளோம். எங்களுக்கு போட்டியிட திமுக கூட்டணியில் 9 இடங்கள் வழங்கப்பட்டன. இதில் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 வார்டுகளில் 4 வார்டுகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான். மாநகராட்சி பெண் மேயருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், துணைமேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். வழங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

மாலின்
மாலின்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைச்செயலாளர் மாலின் கூறுகையில், “கடலூர் சிவகாசி, சென்னை, சேலம் ஆகிய இடங்களில் துணை மேயர் பதவிகளைக் கேட்டுள்ளோம். 60-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் விடுதலைச்சிறுத்தைகள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, துணைத்தலைவர் பதவி 10 இடங்களைக் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை வடமாவட்டங்களில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததாகக் கூறினார்கள். ஆனால், முதல் முறையாக சிவகாசி மாநகராட்சி தேர்தலில் பொது வார்டிலும், தனி வார்டிலும் விடுதலைச்சிறுத்தைகள் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, எங்கள் கட்சிக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எங்கள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக நீதியைக் கடைப்பிடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இக்கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், 21 மேயர் பதவிகளையும் தங்கள் கட்சியினருக்கே வழங்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தப் பதவியில் இல்லாமல் கட்சி வளர்த்த தங்களுக்கு தான் மேயர், துணை மேயர் பதவிகள் மட்டுமின்றி மண்டலத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வருகிற 4-ம் தேதி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்பி ஆகியோர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு பரிந்துரைப்பவர்கள் தான் மேயர், துணைமேயர் உள்ளிட்ட ஊராட்சி பதவிகளில் அமர முடியும்.


எனவே, மாநகராட்சி மேயர், துணைமேயர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திமுகவினரும், தங்களுக்கும் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கூட்டணி கட்சியினரும் மார்ச் 4-ம் தேதிக்காகக் காத்திருக்கின்றனர்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in