
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிஜாம்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநிலச் செயலகத்தின் குவிமாடங்களை இடித்துத் தள்ளுவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமார் அறிவித்தார்.
தெலங்கானாவின் குக்கட்பல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய போயின்பள்ளியில் கட்சியின் தெரு முனை கூட்டத்தில் உரையாற்றிய பண்டி சஞ்சய் குமார், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தின் குவிமாடங்கள் உட்பட நிஜாமின் கலாச்சார சின்னங்களை அழிப்போம். கட்டுமானங்களில் இந்திய மற்றும் தெலங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வோம்," என்று கூறினார். மேலும் முதலமைச்சர் கேசிஆர், ஓவைசிகளை திருப்திப்படுத்துவதற்காக தலைமை செயலகத்தை தாஜ்மஹால் போன்ற சமாதியாக மாற்றினார் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களா பிரஜா தர்பாராகவும் மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், சாலை விரிவாக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வழிபாட்டுத் தலங்களை அரசு இடிக்கும் என்று முதல்வர் கூறியது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் குமார், முடிந்தால் ஹைதராபாத்தில் பழைய சாலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள மசூதிகளை இடித்துத் தள்ளுங்கள் என்று சந்திரசேகர் ராவுக்கு சவால் விடுத்தார். மாநிலத்தில் பாஜகவுக்கு அமோக வரவேற்பு இருப்பதாகக் கூறிய பண்டி சஞ்சய், பாரத ராஷ்டிர சமிதியின் அராஜக ஆட்சியையும், மோடி அரசின் வெற்றிக் கதைகளையும் மக்களுக்கு விளக்கும் நோக்கில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார்.