தேசியக் கொடி, இந்துத்துவம்... மாற்றி யோசிக்கும் ராகுல் காந்தி: சறுக்கல்களை மீறி சாதிக்குமா காங்கிரஸ்?

தேசியக் கொடி, இந்துத்துவம்... மாற்றி யோசிக்கும் ராகுல் காந்தி: சறுக்கல்களை மீறி சாதிக்குமா காங்கிரஸ்?

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. 150 நாட்களில், 3,500 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணம் எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் சில குறிப்பிடத்தக்க அரசியல் உத்திகளைக் கையில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி.

பாஜக தனக்கே காப்புரிமை வாங்கியது போல் சொந்தம் கொண்டாடும் இந்துத்துவ வாக்குவங்கி, தேசப்பற்று அஸ்திரம் இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றிற்குப் பதில் கொடுக்கும் வகையிலேயே ராகுலின் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ராகுல் காந்தி
குமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ராகுல் காந்தி

தரிசனங்களும் பின்னணியும்

இந்தப் பயணத்தின்போது கன்னியாகுமரியில் ராகுல் காந்தி முதன்முதலில் சென்ற இடம் விவேகானந்தர் பாறை. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே பாறையின் மீது சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் இந்துத்துவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இன்றும் அந்த நினைவு மண்டபத்தில் காவி கொடி பறக்கிறது. சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில், ‘சகோதர...சகோதரிகளே’ என விளித்து என உலக ஒற்றுமையின் அவசியம் பற்றிப் பேசினாலும், அவர் இந்து மதத்தின் பிரதிநிதியாகவே கலந்துகொண்டு பேசியது கவனிக்கத்தக்கது.

ராகுல் காந்தி விவேகானந்தர் நினைவு இல்லத்திற்குச் சென்றுவிட்டு, திருவள்ளுவர், காந்தி மண்டபங்களுக்குச் சென்றாலும் முதன்முதலில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்றது பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு அவர் கொடுத்திருக்கும் முதல் பதில் என்பதாகப் புரிந்துகொள்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ளும் வகையில் ராகுல் அண்மைக்காலமாகப் பேசி வருகிறார். அதன் அடுத்த பாய்ச்சல்தான் இது என்று காங்கிரஸ்காரர்கள் கருதுகிறார்கள்.

காந்தி மண்டபத்தின் முன்பு நின்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் தேசியக் கொடியை வாங்கிவிட்டு ராகுல் காந்தி தொடங்கிய பயணம் இது! காந்தி மண்டபத்தில் தொடங்கிய பயணம் என்பதான புரிதல் ஒருபக்கம் இருந்தாலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தரிசித்துவிட்டுத் தொடங்கிய பயணம் என்பதாகவும் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

அதேபோல, தேசியக் கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் மீது இருக்கும் பிடிப்பைக் காட்டத்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிலையைப் பார்வையிட்டார் ராகுல் என்கிறார்கள். தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வரும்போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டுவார் பிரதமர் மோடி. 133 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் வள்ளுவர் சிலையையே பார்வையிட்டு கூட்டணியில் இருக்கும் திமுகவிடமும் தன் தோழமையைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி!

தேசியக் கொடி ஏற்றி தொடங்கிய இன்றைய பயணம்
தேசியக் கொடி ஏற்றி தொடங்கிய இன்றைய பயணம்

கொடி அரசியல்!

பாஜக முன்னிறுத்தும் அரசியலில் பிரதானமாக தேசப்பற்று இருக்கும். அண்மையில்கூட நாடு விடுதலை அடைந்து 75-வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். நாட்டின் பெரும்பகுதி மக்கள் அதை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடி ஏற்றியதையும் காங்கிரஸ் கட்சி உன்னிப்பாகக் கவனித்துள்ளது. அதனாலேயே ராகுல் காந்தியின் நடைப் பயணத்தில் தேசியக் கொடி பிரதானமாக இருக்கிறது. நடைப் பயணத்தின் மைய நிகழ்வாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசியக் கொடியைக் கொடுத்துத்தான் பயணத்தைத் தொடங்கிவைத்தார். ராகுலோடு நடப்பவர்களும் காங்கிரஸ் கொடியைவிட அதிகளவில் தேசியக் கொடியைத் தங்கள் கைகளில் பிடித்தவாறே நடக்கின்றனர்.

ஆனாலும் ஒரு அரசியல் கட்சி நடத்தும் நடைப் பயணத்தில் தேசியகொடியை இப்படி இஷடத்திற்கு அனைவரும் பிடித்துச் செல்லலாமா என்னும் விமர்சனமும் எழுகிறது. இன்றைய இரண்டாம் நாள் நடைப் பயணமும்கூட தேசியக் கொடியை ஏற்றிய பின்புதான் தொடங்கியது!

அகில இந்தியக் கட்சி என்பதால் அனைத்து நிர்வாகிகளையும் திருப்திப்படுத்த வேண்டிய பொறுப்பும் ராகுல் காந்திக்கு இருக்கிறது. இதனாலே ஒவ்வொரு 5 கிலோமீட்டர் நடைபயணத்திற்கும் ஒரு எம்எல்ஏ, அல்லது எம்.பி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியுடன் இந்தப் பயணத்தில் 100 பேர் முழு நேரமாக உடன் நடக்கிறார்கள். அவர்களுடன் அந்தந்த பகுதி காங்கிரஸார் உடன் நடக்கின்றனர்.

கன்டெய்னர் அரசியல்!

ராகுல் நடக்கும்போது மாற்றுப்பாதையில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வந்து சேர்கின்றன 58 கன்டெய்னர்கள். இதில் ராகுலுக்கு மட்டும் இரண்டு கன்டெய்னர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடன் நடக்கும் மற்றவர்களுக்கு மீதம் உள்ள 56 கண்டெய்னர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் கேரவன் வாகனங்களுக்கு இணையான வசதிகள் உள்ளன. ஆனால் இந்த இடத்தில்தான் காங்கிரஸ் அரசியல் செய்யக் கோட்டை விட்டுவிட்டது.

ராகுலோடு பயணிப்பவர்களுக்கு மட்டும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட, அனைத்து வசதிகளும் கொண்ட கன்டெய்னர்களை ஒதுக்கிவிட்டு ராகுலை மிக, மிக எளிய காங்கிரஸ் தொண்டர்களின் இல்லங்களிலேயே தங்குவதுபோல் இந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கலாம். ஆனால் கன்டெய்னர் அரசியலில் எளிமையையும், எளிய தொண்டர்களோடு இயல்பாகவே ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தையும் கோட்டை விட்டுள்ளது காங்கிரஸ்!

சினிமாவில் நடித்துவிட்டு கேரவனில் ஏறி அமர்ந்துகொள்ளும் நடிகர்களைப் போலவே இந்த கன்டெய்னர் ஓய்வு அறையும் எளிய தொண்டர்களிடம் இருந்து ராகுலை அந்நியப்படுத்தும் வேலையைக் கனகச்சிதமாக செய்வதாகக் காங்கிரஸார் சிலர் புலம்புகிறார்கள். இந்தப் பயணத்தில் அந்தந்த பகுதிகளில் தங்கும் ராகுல், பெயரளவில்தான் அந்த ஊரில் தங்குகிறார். வசிப்பிடமோ கன்டெய்னரில் தான்!

பேச்சே இல்லை!

இந்தப் பயணத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, இனி காஷ்மீரில் நடைப் பயணம் முடியும்போதுதான் மக்கள் மன்றத்தில் மேடை போட்டுப் பேசவிருக்கிறார். அதுவரை நடந்தே சென்று மக்களிடம் அவர்கள் மனநிலையை, மனதில் இருக்கும் விஷயங்களை கேட்டு மட்டுமே அறிகிறார். வழியில் பொதுக்கூட்ட மேடைகள் என எதுவும் இல்லை. மக்களிடம் தேச ஒற்றுமையின் அவசியம் பற்றிச் சொல்கிறார் அதுவும் தனிப்பட்ட சந்திப்புபோல் நடக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், தமிழகம் போன்ற இந்தி தெரியாத மாநிலங்களில் எளிய மக்களுடனான உரையாடலுக்கு மொழி ஒரு தடையாக இருப்பதையும் உணர முடிந்தது.

காங்கிரஸ் வெற்றிபெறும்போதெல்லாம் நேரு குடும்பத்தின் வெற்றி என்றும், காங்கிரஸ் தோல்வியடையும்போதெல்லாம் நேரு குடும்பத்தின் பிடியிலேயே கட்சி இருப்பதால்தான் தோற்றுப்போனது எனும் விமர்சனமும் அகில இந்திய அளவில் எழுவதுண்டு. ஒருமுறை ராகுல் காந்தியே, பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் தான் மட்டுமே போராட வேண்டியிருப்பதாக வருத்தத்தோடு பதிவு செய்திருந்தார்.

இதோ இப்போதும்கூட ராகுல் என்னும் தனி ஒருவரே பாஜகவுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறார். அந்தந்த மாநிலங்களில் அவரது பயணத்தை நகர்த்திவிடுவதோடு தங்கள் பணிகளைச் செவ்வனே முடித்துவிடுகின்றன வட்டார காங்கிரஸ் கமிட்டிகள்!

இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பாஜகவுக்கு எதிரான அரசியல் யுத்தம் எடுபடுமா, பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் அவரது புதிய உத்திகள் வெற்றி தேடித் தருமா, இந்த நடைப் பயணத்திற்குக் ‘கை’ மேல் பலன் கிடைக்குமா என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் போகப்போகத்தான் விடை தெரியும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in