தேசிய அரசியல்: சாதிப்பாரா சறுக்குவாரா சந்திரசேகர் ராவ்?

தேசிய அரசியல்: சாதிப்பாரா சறுக்குவாரா சந்திரசேகர் ராவ்?

'பாரத் ராஷ்டிர சமிதி' எனும் புதிய தேசியக் கட்சியை தொடங்கியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். தேசிய அளவில் ‘தெலங்கானா மாடல்’ ஆட்சியைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் முழங்கி இருக்கிறார் ராவ்.

தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி சினிமாக்களில் இப்போது ‘பான் இந்தியா’ எனப்படும் அனைத்து இந்தியாவுக்குமான படங்கள்தான் ட்ரெண்ட். அதுபோல ஒரு ‘பான் இந்தியா’ கட்சியை ஆரம்பித்துள்ளார் சந்திரசேகர் ராவ். ஆம், ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ என்ற ராவின் மாநில கட்சியானது ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என தேசிய அடையாளத்துக்கு மாறியிருக்கிறது. இதுவரை தெலங்கானா மாநிலத் தலைவராக இருந்த சந்திரசேகர் ராவ் இப்போது தன்னை ஒரு தேசிய தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே பாஜகவை எதிர்த்து வரும் கேசிஆர், தெலங்கானாவில் தன்னை மோடிக்கு இணையான தலைவராக முன்னிறுத்துவதில் மும்மரம் காட்டி வருகிறார். இதுவும் கூட இப்போதைய தேசிய கட்சியின் உதயத்துக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

யார் இந்த சந்திரசேகர் ராவ்?

இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தில்தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கேசிஆர் என அழைக்கப்படும் சந்திரசேகர் ராவ். அதன்பின்னர் என்டிஆரின் அரசியலால் ஈர்க்கப்பட்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 1983-ல் கட்சியில் சேர்ந்ததுமே அவருக்கு சித்திபேட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் தோற்றாலும் அதன்பின்னர் 1985 முதல் 2001 வரை அத்தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார். என்டிஆர் மற்றும் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். இந்த சூழலில்தான் 2001-ம் ஆண்டு தெலங்கானா மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை உருவாக்கினார் ராவ்.

2001 முதல் தெலங்கானா தனி மாநிலம் கேட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் சந்திரசேகர் ராவ். அப்போது காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் அந்த கோரிக்கையை எதிர்த்தன. ஒருவழியாக 2004 ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது தெலங்கானா தனிமாநில கோரிக்கையை ஏற்று சந்திரசேகர் ராவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது இக்கூட்டணி அபார வெற்றியும் பெற்றது, கேசிஆர் மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஆனால், 2006-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தெலங்கானா கோரிக்கை குறித்து வாயே திறக்கவில்லை. அதனால் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகியதுடன் தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார் ராவ்.

2009-ல் தெலங்கானா மாநிலக் கோரிக்கைக்காக கேசிஆர் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அப்போது தெலங்கானா கோரிக்கை குறித்து விவாதிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. அதன்பின்னரும் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு 2013-ல் தான் தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது மத்திய காங்கிரஸ் அரசு. அதன்படி 2014-ல் உதயமான தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர் ராவ். 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மீண்டும் பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தார் கேசிஆர்.

கேசிஆரின் தேசிய கட்சிக்கான தேவை என்ன?

2014-ல் தெலங்கானா பிரிக்கப்பட்டபோது கேசிஆரின் பிரதான எதிரியாக மாநிலத்தில் இருந்தது காங்கிரஸ்தான். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியானது மாநிலத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பின்னடைவை சந்தித்ததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார் ராவ். அதற்கேற்றபடி 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களில் 46.9% வாக்குகளுடன் வென்றது டிஆர்எஸ். 28 சதவீத வாக்குகளுடன் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், 7.1% வாக்குகளுடன் பாஜக 1 இடத்திலும் மட்டுமே வென்றன.

சரி, இனி தெலங்கானாவில் தான் மட்டுமே ராஜா என நினைத்திருந்த கேசிஆரின் கனவு ஒரே வருடத்தில் கலைந்துபோனது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக திடீரென தெலங்கானாவில் விஸ்வரூபம் எடுத்தது. 7.1% வாக்குகளுடன் 2018-ல் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமே வென்ற பாஜக, அடுத்த ஒரே வருடத்தில் 19.45% வாக்குகளுடன் 4 மக்களவைத் தொகுதிகளை வென்றது. அன்று முதல் இன்று வரை கேசிஆரின் தூக்கத்தை கெடுத்து வருவது பாஜகதான்.

வடக்கு மற்றும் வடகிழக்கில் கொடி நாட்டிவிட்ட பாஜகவின் தற்போதைய இலக்கு தென்மாநிலங்கள்தான். கர்நாடகா, கோவா, மகாராஷ்டிர மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் அடுத்தகட்ட டார்கெட் தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்தான். இதில் எளிதாக விழக்கூடிய விக்கெட்டாக தெலங்கானாவை குறிவைத்துள்ளது பாஜக. இதன் முன்னோட்டமாகத்தான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வென்று கேசிஆருக்கு ஆட்டம் காண்பித்தது பாஜக. தனது மாநிலத்தில் எழுந்துள்ள இந்த அரசியல் நெருக்கடி காரணமாக பாஜகவை தீவிரமாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராவ். அதேசமயம் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியுமே வலுவான நிலையில்தான் உள்ளது. எனவே, இந்த இரு தேசிய கட்சிகளையும் எதிர்க்க தனது கட்சியையும் தேசிய கட்சியாக தெலங்கானா மக்களிடம் முன்னிறுத்தியுள்ளார் கேசிஆர்.

மாநில கட்சிகள் தேசிய கட்சியாக மாற முயற்சிப்பது இது முதன்முறை அல்ல. சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என பல கட்சிகளும் தேசிய கட்சியாக மாற பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. அதிமுக கூட அனைத்திந்திய அண்ணா திமுகவாக தேசிய கனவோடுதான் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

சந்திரசேகர் ராவ் 2009 மக்களவைத் தேர்தலிலேயே மூன்றாவது அணியில் தான் களமிறங்கினார். இந்த கூட்டணியில் சிபிஎம், தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், அதிமுக, ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன. 2019 தேர்தலிலும் மூன்றாவது அணியை அமைக்க முயன்று தோற்றுப்போனார் அவர். இருந்தாலும் 2024 தேர்தலுக்காக விடா முயற்சியுடன் கடந்த சில ஆண்டுகளாகவே மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, குமாரசாமி, பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார்.

சரத்பவாரை சந்தித்த போது...
சரத்பவாரை சந்தித்த போது...

கேசிஆரின் எண்ணம் ஈடேறுமா?

டிஆர்எஸ் கட்சி தெலங்கானாவில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. தவிர அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு சீட் கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா என எந்த மாநிலத்திலும் அக்கட்சிக்கு செல்வாக்கு இல்லை. அப்படி இருக்கையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்பதை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றிவிட்ட உடனேயே அதனால் தேசியக் கட்சி அந்தஸ்துக்கு வந்துவிட முடியாது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு கேசிஆரின் முன்னே இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளது. ஒன்று, காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகள் அணி, மற்றொன்று, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி. பாஜகவை எதிர்க்க இந்த இரண்டில் எந்த ஆயுதத்தை கேசிஆர் எடுக்கப்போகிறார் என்பதில்தான் அவரின் தேசிய அரசியல் வியூகம் மக்களுக்குத் தெரியவரும்.

கேசிஆரின் தேசியக் கட்சி அறிவிப்பை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘பேராசைக் கனவு’ என விமர்சித்துள்ளன. காங்கிரஸுடன் ஏற்கெனவே திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திரிணமூல், சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் காங்கிரஸோடு இணைய பெரிதாக தயக்கம் காட்டாது. அர்விந்த் கேஜ்ரிவால் மட்டுமே காங்கிரஸோடு நெருங்க தயங்குவார். அப்படி இருக்கையில் யாரை இணைத்து கேசிஆர் மூன்றாவது அணி அமைப்பார் என்ற கேள்வியும் எழுகிறது.

2023-ல் தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரதான எதிர்க்கட்சிகளாக உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் எனும் தேசிய கட்சிகளை எதிர்க்கவே, இந்த ‘தேசிய கட்சி’ பரபரப்பை கேசிஆர் உருவாக்குகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவது எல்லாம் அவரின் நோக்கம் இல்லை. 2023-ல் மீண்டும் தெலங்கானா முதல்வராக வேண்டும் என்பதற்கான வியூகமாகவே இந்த தேசிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்ற விமர்சனமும் சந்திரசேகர் ராவ் மீது வைக்கப்படுகிறது.

தேசிய கட்சி அறிவிப்பு என்பது வெறும் சம்பிரதாய பெயர் மாற்றமா அல்லது தேசிய அரசியலுக்கான திசைமாற்றமா என்பது கேசிஆரின் அடுத்தகட்ட நகர்வுகளில்தான் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in