’பாரத்’ என பெயர் மாறுகிறதா இந்தியா?

எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்... மறுக்கும் பாஜக!
அமித் ஷா, மோடி, ஜேபி நட்டா
அமித் ஷா, மோடி, ஜேபி நட்டா

ஜி20 மாநாடு அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘பாரத குடியரசுத் தலைவர்’ என்ற குறிப்பிட்டது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதிலிருந்து ‘பாரத்’ என்று மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.

‘பாரத்’ பெயர் மாற்ற விவகாரத்தில், “அரசியலமைப்பு சட்டத்தில் பாரதம், இந்தியா என இரண்டு பெயர்களும் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்படியானால் பாரத் என குறிப்பிடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?” என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆர்எஸ்எஸ்ஸும் நீண்ட காலமாகவே ‘பாரதம்’ என்று பெயர் மாற்றவேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

மத்திய அரசு ‘பாரத்’ பெயர் மாற்ற விவகாரத்தை தற்போது தடாலடியாக கையிலெடுக்கக் காரணம், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா கூட்டணி’ என்று பெயர் வைத்ததுதான் என்ற தீவிரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

“பாஜக தொடக்கம் முதலே ‘டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, நியூ இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருந்தது. நாங்கள் தான் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை நடத்தினோம். பாரத் என்ற பெயருக்கு நாங்களும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயர் வைத்துள்ளதால், அவர்கள் நாட்டின் பெயரையே மாற்றப் பார்க்கிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பிற எதிர்க்கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே இந்தப் பெயர் மாற்ற விவகாரம் குறித்து யூகித்தே வந்தன. அதற்கு வலுசேர்க்கும் வகையில், நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஐபிசி எனப்படும் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாஜக அரசு மூன்று மாசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அவற்றின் பெயர்கள் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா என்பதாக இருந்தன.

மசோதாக்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதிய என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது எதிர்க்கட்சிகளின் சந்தேகத்துக்கு மேலும் வலுசேர்த்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்ததும், ‘பாரத்’ என்ற பெயர் மாற்ற விவகாரத்தை இப்போது விவாதப்பொருளாக்கியுள்ளது பாஜக.

சட்டரீதியான நடைமுறைகள் என்ன?

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ல், "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1 'இந்தியா' மற்றும் 'பாரத்' இரண்டையும் நாட்டின் அதிகாரபூர்வ பெயர்களாக அங்கீகரித்துள்ளது. ஆனாலும் தொடக்கம் முதலே இந்தியா என்ற பெயரே ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இந்தியா என்ற பெயரை மாற்றக் கோரி சில பொது நல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனையுடன் தள்ளுபடி செய்தது. அதன் பின் 2020-ல், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பெயரை மாற்றக் கோரி இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிரதிநிதித்துவ மனுவாக மாற்றி, உரிய முடிவுக்காக மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

ஒருவேளை, தற்போதைய மத்திய பாஜக அரசு 'பாரத்' என்பதை மட்டுமே அதிகாரபூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-வது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பாக 368-வது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தை ஒரு சாதாரண பெரும்பான்மை திருத்தம் (Simple Majority Changes) அல்லது சிறப்பு பெரும்பான்மை திருத்தம் (Special Majority Changes) மூலம் திருத்த அனுமதிக்கிறது.

புதிய மாநிலத்தை அறிவிப்பது அல்லது மாநிலங்களவையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வது போன்ற அரசியலமைப்பின் சில பிரிவுகளை திருத்த, தற்போதுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒரு சாதாரண பெரும்பான்மையுடன் (அதாவது 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள்) வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றலாம்.

பாரத் குடியரசுத் தலைவர்
பாரத் குடியரசுத் தலைவர்

அதேபோன்று, அரசியலமைப்பின் பிரிவு 1-ல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசியலமைப்பின் மிகமுக்கிய மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மை (66 சதவீதம்) தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை. எனவே இந்த அக்னி பரீட்சையில் பாஜக கால்வைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அரசியல் ரீதியாக பலன் தருமா?

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும்போது பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய வலுவான ‘கன்டென்ட்’ தேவை. இதற்காகத்தான் முதலில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பாஜக தீவிரமாக பேசியது. ஆனால், அது மக்களிடம் பெரிய அளவில் எடுபட்டதாக தெரியவில்லை, மேலும், அதற்கான சாத்தியக்கூறுகளும் சிக்கலாகவே இருந்தன.

எனவே, அதை அப்படியே கிடப்பில் வைத்து விட்டு, ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ அழுத்தமாக பேசியது. அதுவும் எடுபடுமா என்ற சந்தேகம் இப்போது பாஜகவுக்கே வந்துவிட்டது. இந்த சூழலில்தான் ‘பாரத்’ என்ற பெயர் மாற்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு கணிசமான ஆதரவுக் குரல்களும் இருப்பதால் உற்சாகத்தில் உள்ளது பாஜக வட்டாரம்.

தாமரையுடன் பிரதமர் மோடி
தாமரையுடன் பிரதமர் மோடி

இப்போது எழுந்திருக்கும் விவாதங்களைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ‘பாரத்’ பெயர் மாற்ற மசோதா ஒருவேளை தாக்கல் செய்யப்படலாம். இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தால், ‘பாரதம்’ என்ற பெயரை எதிர்க்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை வலுப்படுத்தவும் வியூகம் வகுத்துள்ளது பாஜக. எனவே, இப்போது பாஜகவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளில் சில, மசோதாவின் போது நிலைப்பாட்டை மாற்றவும் வாய்ப்புள்ளது.

2014 தேர்தலின் போது மோடி அலை, 2019-ல் புல்வாமா தாக்குதல், சர்ஜிகல் ஸ்டிரைக், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவுக்கு பலம் கூட்டியது. இப்போதும்கூட ராமர் கோயில் திறப்பு, பொது சிவில் சட்டம் போன்ற ஆயுதங்கள் இருந்தாலும், இவையெல்லாம் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’யை வீழ்த்துமா என்ற சந்தேகம் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால் தான் ‘பாரத்’ பெயர் மாற்ற அஸ்திரத்தை இப்போது கையில் எடுத்துள்ளது.

இதனிடையே, “இந்தியா 'பாரத்' என பெயர் மாற்றுப்பட உள்ளது என்பது போல் வெளியாகியுள்ள தகவல்கள் வெறும் வதந்தியே” என்று சொல்லி இருக்கிறார் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அருணாக் தாக்கூர். இருந்த போதும் பாரத் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

‘பாரத்’ பெயர் மாற்றம் பாரதிய ஜனதாவுக்கு பலன் கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in