பாஜகவை பதறவைக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆன்மிக அரசியல்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், வளர்ச்சி என்ற முழக்கங்களுடன் அரசியல் பயணத்தை தொடங்கிய அர்விந்த் கேஜ்ரிவால், இப்போது ஆன்மிக அரசியலின் பக்கம் வந்து நிற்கிறார். அதனால்தான், ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிடவேண்டும் என தீவிர இந்து அமைப்புகள் கூட வைக்காத கோரிக்கையை முன்வைத்து அதிர்வலைகளை கிளப்பியுள்ளார் கேஜ்ரிவால்.

ஐஐடியில் பொறியியல் படித்து, இந்திய வருவாய்ப்பணி எனப்படும் ஐஆர்எஸ் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று, வருமான வரித்துறை துணை ஆணையராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால், 2006-ல் அரசுப்பணியை துறந்துவிட்டு பரிவர்தன் என்ற அமைப்பு மூலம் பொதுசேவை பணிகளில் இறங்கினார். 2010 முதல் அண்ணா ஹசாரேயின் ஜன் லோக்பால் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற கேஜ்ரிவால். 2012-ல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.

அடுத்த ஆண்டே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் கைப்பற்றினார். அப்போது முதல் இப்போது வரை டெல்லியில் கேஜ்ரிவால் ஆட்சிதான். அவரின் ஆம் ஆத்மி கட்சி இப்போது கூடுதலாக பஞ்சாபிலும் ஆட்சியமைத்துள்ளது. அடுத்ததாக குஜராத்துக்கும் குறிவைக்கிறது. இப்போது இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஒரே கட்சி ஆம் ஆத்மி தான்.

கேஜ்ரிவாலின் ஆன்மிக கணக்கு

தகவல் அரியும் உரிமைச் சட்டம் அமலாக்கல், ஜன் லோக்பால், ஊழலற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம், சாமானியர்களுக்கு தேர்தல் வாய்ப்பு என்பவைதான் ஆம் ஆத்மி எனும் எளிய மக்களுக்கான கட்சியைத் தொடங்கியபோது அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசியல் தாரக மந்திரமாக இருந்தது. ஊழல், லஞ்ச லாவண்யங்களில் திக்கு முக்காடிய இந்திய அரசியல் களத்தில் கேஜ்ரிவாலின் குரல் தனித்து ஒலித்த காரணத்தால்தான், டெல்லி மக்கள் அவருக்கு அரியணையைக் கொடுத்து அழகுபார்த்தனர். டெல்லியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளும், சிறந்த நிர்வாகமும் சேர்ந்து பக்கத்து மாநிலமான பஞ்சாபிலும் ஆம் ஆத்மி அரசு அமைய காரணமானது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

தற்போது டெல்லி உள்ளாட்சி தேர்தல், குஜராத், இமாசல பிரதேச மாநிலத் தேர்தல்களுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடியாக வெளியிட்ட ஒற்றை கோரிக்கைதான் இப்போது இந்தியாவின் பேசுபொருளாகி இருக்கிறது.

“தொடர்ந்து நலிவடைந்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க ரூபாய் நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் படங்களை அச்சிடவேண்டும். இது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவை சரிசெய்யவும் உதவும். நாம் என்னதான் முயற்சி செய்தாலும் கடவுளின் ஆசி இல்லையென்றால் பலன் கிடைக்காது” என்று அதிரடி கிளப்பி இருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடிக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

கேஜ்ரிவாலின் இந்த திடீர் கோரிக்கையை சற்றும் எதிர்பாராத பாஜக, “இது கேஜ்ரிவாலின் அரசியல் நாடகம். வாக்கு வங்கி அரசியல். ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து இந்து விரோத போக்குடன் செயல்பட்டது. இப்போது தேர்தலுக்காக முழுமையாக யு-டர்ன் அடிக்கிறது” என பதறுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் கேஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ளது.

கேஜ்ரிவால் சத் பூஜை பங்கேற்றபோது...
கேஜ்ரிவால் சத் பூஜை பங்கேற்றபோது...

கேஜ்ரிவாலின் மாற்றத்துக்கு காரணம் என்ன?

ஆம் ஆத்மி கட்சியானது முழுக்கவும் ஊழல், லஞ்சம், வெளிப்படையான நிர்வாகம், வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை அரசியல் செய்துவந்தது. மத விவகாரம், சமூகநீதி, இடஒதுக்கீடு, மண்ணின் மக்கள் கோரிக்கை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் பெரும்பாலும் தலையிடாமல் அக்கட்சி தவிர்த்துவிடும். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மீது இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஊழல் மற்றும் லஞ்சத்தை மட்டுமே பூதாகரமான பிரச்சினையாக்கி சமூக நீதி தொடர்பான விஷயங்களை ஆம் ஆத்மி மழுங்கடிக்கிறது, ஆம் ஆத்மியும் மென் ‘இந்துத்துவா’ கட்சிதான் என்ற வாதமும் பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கேஜ்ரிவாலில் ரூபாய் நோட்டு கோரிக்கை கூடுதல் சலசலப்பை உருவாக்கி யிருக்கிறது. ஆனால், “தொடர்ந்து சரியும் பொருளாதாரத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிதியமைச்சர் மற்றும் மோடியை கிண்டலடிக்கும் விதமாகவே, ‘பிளாக் க்யூமர்’ செய்துள்ளார் கேஜ்ரிவால்” என்றும் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மதத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் மோடி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகிய இருவரின் முழக்கமும் ஒன்றாகவே இருக்கும். இருவருமே ’வளர்ச்சி அரசியலை’ முன்வைத்தே ஆட்சியமைத்தார்கள். மோடி எப்படி ‘குஜராத் மாடலை’ முன்வைத்து பிரதமர் ஆனாரோ, அதேபோல ‘டெல்லி மாடலை’ முன்வைத்து இந்திய அரசியலின் முக்கிய சக்தியாக மாற கணக்கு போடுகிறார் கேஜ்ரிவால். இந்த ‘டெல்லி மாடல்’ அஜென்டா இப்போது பஞ்சாபில் வென்றும் விட்டது. எனவே, அடுத்த இலக்கை நோக்கி பாயத் தயாராகிவிட்டார் கேஜ்ரிவால்.

மோடிக்கு இணையாக வளர விரும்பும் கேஜ்ரிவால், தன்னிடம் இல்லாத ஒன்றாக நினைத்தது ‘ஆன்மிக அரசியல்’தான். எனவே, வளர்ச்சியுடன் சேர்த்து ஆன்மிகத்தையும் பேசினால்தான், இனி தேசிய அரசியலில் பாஜகவுக்கு ஈடுகொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

காங்கிரஸ் அல்லது மாநில கட்சிகள் மீது தொடர்ந்து ஊழல் மற்றும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது பாஜக. அத்துடன் கொஞ்சம் வளர்ச்சி, கொஞ்சம் இந்துத்துவா கொள்கைகளை தூவிவிட்டு பரப்புரை செய்தால் எந்த மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பதுதான் பாஜகவின் தேர்தல் ஃபார்முலா. இந்த ஃபார்முலாவைத்தான் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களிலும் பிரயோகிக்க முயற்சிக்கிறது பாஜக.

இந்துத்துவாவை தவிர்த்து, கிட்டத்தட்ட இதே ஃபார்முலாவைத் தான் பஞ்சாபில் முயற்சி செய்து வெற்றிபெற்றது ஆம் ஆத்மி. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்களில் வெறும் வளர்ச்சி முழக்கம் மட்டும் வேலைக்காகாது என்பது கேஜ்ரிவாலுக்குத் தெரியும். அதனால்தான் பாஜகவின் பாணியில் ஆன்மிக அஸ்திரத்தையும் இப்போது வீசியுள்ளார். இதன் மூலம், பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர்களிடம் ‘பாஜகவுக்கும் எங்களுக்கும் வேறுபாடு இல்லை. எனவே, பாஜகவுக்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்’ என்பதுதான் அர்விந்த் கேஜ்ரிவால் சொல்லும் மறைமுகச் செய்தி.

அர்விந்த் கேஜ்ரிவால் கையில் எடுத்துள்ள இந்த புதிய ஆன்மிக வியூகம் பாஜகவை வீழ்த்துமா அல்லது வாக்குகளைப் பிரித்து காங்கிரஸை வீழ்த்துமா அல்லது மொத்தமாக ஆம் ஆத்மியை வீழ்த்துமா என்பது டிசம்பர் 8-ல் குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் வரும்போது தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in