விலகிய பாஜக: சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளுமா அதிமுக?

விலகிய பாஜக:  சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளுமா அதிமுக?

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக உள்விவகாரங்களில் தலையிடத் தொடங்கிய பாஜக, சசிகலா சிறை சென்ற பிறகு ஒட்டுமொத்தமாகவே அந்தக் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 5 ஆண்டுகளாக அதிமுகவை ஆட்டிப்படைத்த பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கேட்ட எண்ணிக்கையில் சீட் கிடைக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது, அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதைப் போன்ற உணர்வோடு இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக எங்களைப் புறக்கணித்துவிட்டார்கள். இனி அப்படி நடக்காது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் அதிமுகவினர். அவர்கள் நினைப்பது போலத்தான் கள நிலவரம் இருக்கிறதா?

கோபம் இன்னும் குறையவில்லை...

“பாஜக எங்கள் கூட்டணியில் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் முதலில் அறிவித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம். அதேநேரத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் அதிமுக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியிருப்பது, அதிமுக இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறது என்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் வாக்குகள் பொதுவாகவே திமுகவுக்குத்தான் அதிகமாக விழும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆளுமை அதில் சின்ன பாதிப்பை ஏற்படுத்தியது. 1999 தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டுச் சேர்ந்தது, இன்னும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய தமிழக அரசியல் சூழல், மீண்டும் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் திமுக பக்கம் குவித்துவிட்டது. எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியிருப்பது அதிமுகவுக்குப் பெரிய அளவில் சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்த்துவிடும் என்று நான் நம்பவில்லை. அதேநேரத்தில், இஸ்லாமிய, கிறிஸ்தவர்களில் எம்ஜிஆர் ரசிகர்கள், பரம்பரை அதிமுகவினராக இருந்தும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக மனவருத்தத்துடன் வாக்களித்தவர்கள் வேண்டுமானால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடும்” என்கிறார் எழுத்தாளரும் அரசியல் பார்வையாளருமான எச்.பீர்முகம்மது.

“அதிமுக மீதான சிறுபான்மையினரின் கோபம் இன்னும் குறையவில்லை. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் மோடியின் சகாவாக அதிமுகவைப் பார்த்த சிறுபான்மையினர், இப்போது இது உள்ளாட்சித் தேர்தல் என்ற புரிதலுடன் வாக்களிப்பார்கள். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலராக உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதைவிட, தங்களது ஜமாத் அல்லது சபைக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கே சிறுபான்மையினர் வாக்களிக்கக்கூடும். அதற்குத் தோதாக ஜமாத் சார்பிலும், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் சார்பிலும் பலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, சிறுபான்மையினர் வாக்குகள் அப்படியே திமுக கூட்டணிக்கு விழுந்துவிடும் என்றும் சொல்லிவிட முடியாது” என்கிறார் அரசியல் விமர்சகர் புதுமடம் ஜாபர் அலி.

இனியும் ஏமாற மாட்டார்கள்

கடந்த தேர்தலின்போது சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்களில் பெரும்பான்மையினர் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, இம்முறை அப்படி நடக்காது என்கிறார். இதுபற்றி அவர் மேலும் நம்மிடம் கூறும்போது, “பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு அதிமுக மீது அதிருப்தி இருந்தது. பாஜகவை சிறுபான்மையினர் தங்களுக்கு எதிரான கட்சியாகவே பார்க்கிறார்கள். ஆனால், அதிமுக மீது அவர்களுக்கு மரியாதை இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்தபோதும்கூட தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் அதிமுக அரசு ஈடுபட்டதில்லை. ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியபோதும்கூட, தமிழ்நாடு அரசு முழுமையாக அந்த மானியத்தை வழங்கியது. சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்த, காவல் துறை முழு அனுமதி வழங்கியது. ஆனால், கோவை வழக்கில் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதாகச் சொல்லி ஆட்சிக்குவந்த திமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடிய சிறைவாசிகளின் குடும்பத்தினரைக் கைது செய்து சிறையில் அடைத்தது திமுக அரசு. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. எனவே, சிறுபான்மையினர் திமுக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தி அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறும். இனியும் சிறுபான்மையினர் ஏமாற மாட்டார்கள்” என்றார்.

அதிமுக வாக்குசதவீதம் உயரும்...

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்டபோது, “திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்குவந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை மாறிமாறி சுமத்துகிறது அதிமுக. அதில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலை வாக்குறுதியும் இருக்கிறது. அதிமுகவுடன் ஒப்பிட்டால், திமுகவே தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுகிற கட்சி என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. இஸ்லாமியர்களை விடுதலை செய்தால், கோவை மண்டலத்தில் பாஜக அதை மதப்பிரச்சினையாக மாற்றும் என்பதாலேயே திமுக கொஞ்சம் தயங்குகிறது என்பதை இஸ்லாமியர்களும் அறிவார்கள். எனவே, அதுபோன்ற பிரச்சாரங்கள் பெரிதாகப் பலன்தராது. கட்சி சார்பில்லாத ஜனநாயக சக்திகள், மத நல்லிணக்கத்தை விரும்புவோரின் வாக்குகள் திமுகவுக்கே விழும்.

அதேநேரத்தில் இத்தனை காலமாக தேவையே இல்லாமல் பாஜகவை அதிமுக தூக்கிச் சுமக்கிறதே என்ற கோபத்தில், அதிமுகவினர் சிலரே தேர்தல் வேலை பார்க்காமல் சுணங்கியிருந்தார்கள். பாஜக வெளியேறிவிட்டதால், இனி அவர்கள் உற்சாகமாகத் தேர்தல் வேலைகளைப் பார்க்கக்கூடும். அதிமுக சார்ந்த சிறுபான்மையினரும் அக்கட்சிக்கே இனி வாக்களிக்கக்கூடும். எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூடுதலாக 0.5 அல்லது 1 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும்” என்றார்.

பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் கல்வாரி
பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் கல்வாரி

பாஜகவின் நிலை என்ன?

மேற்கு வங்கத் தேர்தலிலும், உத்தரப் பிரதேசத் தேர்தலிலும் இஸ்லாமியர்களையும் தங்கள் வேட்பாளராகக் களமிறக்கிய பாஜக, அதே உத்தியை தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் செயல்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் சார்பில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இஸ்லாமிய, கிறிஸ்தவ வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மதமாற்ற சர்ச்சையை கிளப்புகிறது பாஜக.

இது இந்தத் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளர் கல்வாரியிடம் கேட்டபோது, “தஞ்சை மதமாற்ற விவகாரத்தில் சிறுபான்மையினரை பாஜகவுக்கு எதிராக சிலர் கொம்பு சீவி விடுவது உண்மைதான். ஆனால், மெய்ப்பொருள் காண்பது அறிவு. பாதிக்கப்பட்ட மாணவியும் சரி, அவரது பெற்றோரும் சரி மதமாற்றத்துக்காக அந்த மாணவி துன்புறுத்தப்பட்டதாகவே சொல்லியிருக்கிறார்கள். உண்மையின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும். பாஜக ஒருபோதும் சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கிற கட்சியல்ல. அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும் என்பதால்தான், இந்தத் தேர்தலில்கூட கணிசமான சீட்களை இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சொந்த செல்வாக்கு மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் அளிக்கும் வாக்குகள் எல்லாவற்றையும் கணக்கிட்டால் இம்முறை பாஜகவுக்கு சிறுபான்மையினர் வாக்கு அதிகரிக்கும் என்பதே எங்கள் கணிப்பு. அதிமுகவுக்கும் சிறுபான்மையினர் வாக்கு அதிகரிக்கும். ஆக, திமுகவுக்கு இரட்டை பாதிப்பு ஏற்படும்” என்கிறார்.

யாருடைய கணிப்பு சரி என்பதை, மக்கள்தான் சொல்ல வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in