அமமுக - அதிமுக கூட்டணி பேச்சுக்குப் பின்னால் பாஜக இருக்கிறதா?

டிடிவி தினகரன் இறங்கிவரும் ரகசியம் என்ன?
அமமுக - அதிமுக கூட்டணி பேச்சுக்குப் பின்னால் பாஜக இருக்கிறதா?
கோப்பு படம்

"அதிமுகவை மீட்டெடுப்போம், எடப்பாடி பழனிசாமி எனும் துரோகியின் முகத்திரையைக் கிழித்தெடுப்போம்" என்றெல்லாம் வீரவசனம் பேசிக்கொண்டிருந்த டிடிவி.தினகரன், இப்போது, “திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயார்” என அறிவித்து அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார். தினகரனின் இந்த திடீர் மனமாற்றத்துக்கான காரணம் என்ன?

ஜெயலலிதா காலத்தில் எஃகுக் கோட்டையாக இருந்த அதிமுகவை, இப்போது ஆளுக்கொரு பக்கமாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு பேருமே, நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என மார்தட்டுகிறார்கள்.

இதில், தனியாக அமமுகவை நடத்தும் தினகரன், 2019 மக்களவைத் தேர்தலில் 5.46% வாக்குகளை பெற்றார். உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை பதிவு செய்தது அவரது அமமுக. ஆனால், அந்தக் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது 2021 சட்டப் பேரவைத் தேர்தல்தான். அதில் வெறும் 2.36% வாக்குகளை மட்டுமே அமமுக பெற்றது; டிடிவி.தினகரனால்கூட வெல்ல முடியாமல் போனது. அமமுக ஆரம்பித்தபோது அவருடன் இருந்த முக்கிய தலைகளில், பெரும்பாலானோர் இப்போது திமுக, அதிமுகவில் ஐக்கியமாகி விட்டனர். இனியும் தனித்து களமாடினால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்பதால், தனது அரசியல் வியூகங்களை தற்போது மாற்ற ஆரம்பித்துள்ளார் தினகரன். இதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தமும் சமிக்ஞைகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

“மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதிமுகவுடன் மீண்டும் ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல... அவர்களுக்கும் நல்லதல்ல. எனவே, திமுக எனும் தீயசக்தியை அழிப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்” என இறங்கி வந்திருக்கிறார் தினகரன். ஆனாலும் தினகரனையும் சசிகலாவையும் எக்காரணம் கொண்டும் உள்ளேவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கும் ஜெயக்குமார் போன்றவர்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.

“மக்களாலும், அதிமுகவாலும் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் சசிகலாவும், தினகரனும். அதுபோல தொண்டர்களாலும், பொதுமக்களாலும் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் ஓபிஎஸ். எனவே தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வேண்டுமானால் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கட்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டும். அமமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க 100 சதவீதம் வாய்ப்பே இல்லை” என ஆவேசம் காட்டி இருக்கிறார் ஈபிஎஸ் அணியின் பிரச்சார பீரங்கியான ஜெயக்குமார். இப்படி இருக்கையில், அதிமுக - அமமுக கூட்டணி அமையுமா என்பதுதான் இப்போது ஆகப்பெரும் விவாதமாகியிருக்கிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தினகரன் கூட்டணி குறித்து பேசுவது இது முதன்முறை அல்ல. 2021 தேர்தலுக்கு பின்னரே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாசிட்டீவான அணுகுமுறையோடுதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகவே இருந்தோம். ஆனால், ஒரு சிலரின் சுயநலம், பேராசை காரணமாக அது முடியாமல் போனது” என்று முன்பொருமுறை சொல்லியிருந்தார் டிடிவி.

அதேசமயம். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த தினகரன், இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் தயார் என்று சொல்லியிருக்கிறார். அதிமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார் என்ற தினகரனின் அப்ரோச் கிட்டத்தட்ட பாஜக கொடுத்த யோசனை தான்.

சசிகலாவுடன் தினகரன்...
சசிகலாவுடன் தினகரன்...

2024 மக்களவைத் தேர்தலில் தென்மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் வியூகம். அதற்காக தமிழகத்தில் குறைந்தது 10 தொகுதிகளிலாவது வென்று காட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு உடைந்து கிடக்கும் அதிமுகவுடன் மட்டும் கூட்டணி வைத்தால் வேலைக்கு ஆகாது என்றும் நினைக்கிறது பாஜக. ஏனென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை பதம் பார்த்தது அமமுக வாக்குகள். எனவே, 2024 தேர்தலில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ், சசிகலா என அதிமுகவின் அனைத்து சக்திகளையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டுவர திட்டமிடுகிறது பாஜக. அந்த திசையில் தான் தினகரனின் இந்தப் பேச்சும் அமைந்துள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ அதிமுக ஒன்றாக இருப்பது அல்லது பிரிந்திருப்பது எல்லாமே பாஜகவின் கையில்தான் உள்ளது. வைத்திலிங்கம் போன்றோர், ‘அதிமுகவை ஒற்றுமைப்படுத்த பாஜக தலையிட வேண்டும்’ என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என அதிமுக பிரிந்து கிடந்தால் அந்த வெற்றி சாத்தியமாகாது என்பதும் பாஜகவுக்குத் தெரியும்.

2021 தேர்தலிலேயே, ‘எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்தியுங்கள்’ என ஈபிஎஸ்ஸிடம் அமித்ஷா வலியுறுத்தினார். அதை அவர் கேட்கவில்லை. சமீபத்திய சந்திப்பில்கூட அமித்ஷா ஈபிஎஸ்ஸிடம் இதனை நினைவுபடுத்தியதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் அந்த சந்திப்புக்குப் பிறகு ஈபிஎஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். கூட்டணி என்று சொல்லி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதிமுகவுடன் கைகோத்தால் காலப்போக்கில் அவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள் என்பதுதான் ஈபிஎஸ்ஸின் ஒரே அச்சமாக உள்ளது.

ப்ரியன்
ப்ரியன்

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் அனைவரையும் ஒன்றாக வரச்சொல்லி பாஜக வலியுறுத்தும். ஒருவேளை, இவர்கள் ஒத்துவரவில்லை என்றால் மஹாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்திருப்பதைப் போல அதிமுக சின்னத்தையும் முடக்க வாய்ப்புள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை என்பதால் பாஜக அப்போது தீவிரம் காட்டவில்லை. ஆனால், 2024 தேர்தலை அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள். ஒருவேளை, யாரையும் சேர்க்கமாட்டேன் என்று ஈபிஎஸ் விடாப்பிடியாக இருந்தால், இரட்டை இலையை முடக்கிவிட்டு அவரை கழட்டிவிடவும் தயங்கமாட்டார்கள். எனவே, தற்போதைய தினகரனின் கூட்டணி குறித்த பேச்சுக்கு பின்னால் பாஜகவின் ஆலோசனைகள் இருக்கலாம் என்பதே உண்மை.

அதிமுகவுடன் அமமுக, ஓபிஎஸ், சசிகலா என எல்லோரும் இணைந்து தேர்தலைச் சந்தித்தால் அது ஒருங்கிணைந்த அதிமுகவுக்கான தொடக்கப் பாதையாக அமையும். ஆனால், பாஜகவின் வற்புறுத்தால் மட்டுமே இந்தக் கூட்டணி அமைந்தால், ஒருவருக்கொருவர் உள்ளடி வேலை பார்த்து மொத்தமாக தோல்விதான் ஏற்படும். திறந்தமனதுடன் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக திமுகவுக்கு கடும் போட்டியை இவர்கள் ஏற்படுத்துவார்கள், கணிசமான இடங்களில் வெற்றியும் கிடைக்கும்.

எனவே, பாஜகவின் அழுத்தம் காரணமாக இவர்கள் இணைவதை விடவும், அவர்களே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள். தினகரனின் கூட்டணி அழைப்பை ஜெயக்குமார் போன்றோர் உதாசீனப்படுத்துவதையும் அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை” என்றார்.

ஓபிஎஸ், மோடி, ஈபிஎஸ்
ஓபிஎஸ், மோடி, ஈபிஎஸ்

ஒரு கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் அதே கட்சியுடன் கூட்டணி வைப்பதெல்லாம் அரசியலுக்குப் புதிது இல்லை. திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுக இப்போது திமுக கூட்டணியில் உள்ளது. காங்கிரஸை எதிர்த்து உருவான தேசியவாத காங்கிரஸ் இப்போது அதன் கூட்டணி கட்சியாக உள்ளது. எனவே, அதிமுக, அமமுக கூட்டணி என்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை. மேலே இருப்பவர்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதே நிதர்சனம்.

என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in