தேர்தல்: உதகை நகராட்சியில் கணவனுக்குப் போட்டியாக மனைவி மனுத்தாக்கல்

நாம் தமிழர் வேட்பாளர்களான சுயேச்சைகள்
தேர்தல்: உதகை நகராட்சியில் கணவனுக்குப் போட்டியாக மனைவி மனுத்தாக்கல்
திமுக வேட்பாளர்கள்

உதகை நகராட்சியில் இன்று வேட்புமனுத் தாக்கலின்போது, பல சுவாரஸ்சியங்கள் நடந்தேறின. சுயேச்சைகளை நாம் தமிழர் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களாக நிறுத்த, 32-வது வார்டு திமுக வேட்பாளர் செல்வராஜூக்குப் போட்டியாக அவரது மனைவி ஜெயராணி சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. உதகை நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளுக்கு நேற்றுவரை 33 நபர்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இன்று காலை முதலே வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலையிலேயே, நகராட்சி 1-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உமா நித்யசத்யா, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவரது கணவர் நித்ய சத்யா ஏற்கெனவே இதே வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை, அந்தந்த வார்டு உதவி தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்கள் 7-வது வார்டில் நகர்மன்ற தலைவர் முன்னாள் தலைவர் சத்யபாமா, முன்னாள் துணை தலைவர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பின்னர் திமுக வேட்பாளர்கள் அனைவரும் வந்து தத்தமது வார்டுகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தனர். பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலையில், அனைத்து வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அதிமுக வேட்பாளர்கள்
அதிமுக வேட்பாளர்கள்

நாம் தமிழர் வேட்பாளர்களான சுயேச்சைகள்

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், சுயேச்சைகளாக வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தவர்களை, தங்கள் கட்சி சார்பில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யச்சொல்லி வலியுறுத்தினர். 15 பேர் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

கணவனுக்குப் போட்டியாக மனைவி

அரசியல் கட்சிகளில் சீட் மறுக்கப்பட்டால் கட்சியினர் சுயேச்சையாக போட்டியிடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் கணவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவருக்குப் போட்டியாக மனைவி சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32-வது வார்டில் திமுக சார்பில் செல்வராஜ் என்பவர், வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அதே வார்டில் அவரது மனைவி ஜெயராணி சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

வாடகை பாக்கியால்...

நகராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வி.கோபாலகிருஷ்ணன், நகராட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்தி வந்தார். அந்தக் கடைகளுக்கு அவர் ரூ.43 லட்சம் வாடகை பாக்கி நகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில், தான் போட்டியிட்டால் ரூ.43 லட்சம் வாடகை பாக்கி செலுத்த வேண்டிவரும் என்பதால், தனது மகள் கோ.ஸ்ருதி கிருஷ்ணாவுக்கு அதிமுகவில் சீட் பெற்றுள்ளார்.

நேற்று அனைத்துக் கட்சியினரும் வேட்புமனுத்த தாக்கல் செய்வதற்கு திரண்டதால், நகராட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நகராட்சி அலுவலக நுழைவுவாயில் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in