பரவிய கூட்டணி சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

பரவிய கூட்டணி சர்ச்சை: முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது, தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரை முதல்வர் ஸ்டானின் புகழ்ந்து பேசினார். இந்த நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

தொடர்ந்து சென்னையில் நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது கூட்டணிக்கு அச்சாரம் என்று பேசப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் வாய்ப்பே இல்லை என்றார். இருந்தாலும் கூட்டணி சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த சர்ச்சைக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கேரள நாளேடான மலையாள மனோரமா நிறுவனத்தின் மாநாட்டில் கானொளி காட்சி மூலம் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாட்டில் கூட்டணியில் இருக்கிறீர்கள். பினராயி விஜயனின் அரசியலையும், ஆட்சியையும் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "எங்களுடைய இரு கட்சிகளுக்கு இருக்கும் உறவு வெறும் தேர்தல் கூட்டணிக்காக அல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி. லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திமுக ஆட்சிக்கு தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சிபிஎம் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது எங்களுக்கு அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன்? நேரடியாகவே எங்களை பார்த்து பிரச்சினைகளை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நானும் சில விஷயங்களை அவர்களோடு கலந்து கொண்டுதான் செய்துக் கொண்டிருக்கிறேன். அதையும் தாண்டி அவர்களுடைய கருத்துகளை அவர்களின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் பத்திரிகைகளில் அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதனை நாங்கள் உடனடியாக சரி செய்கிறோம். ஆக, எங்கள் கொள்கை கூட்டணி ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடரும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in