யோகி எனும் 'புல்டோசர் பாபா'!

அதிரடி நடவடிக்கைகளால் அசத்தும் உத்தர பிரதேச முதல்வர்
யோகி எனும் 'புல்டோசர் பாபா'!

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை அதிவிரைவு நடவடிக்கையாக அவர் மீட்டு வருகிறார். சட்டவிதிமுறைகள் அனுமதித்தாலும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் அரசுகள் இப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் இதை யோகி முன்னெடுப்பது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

அலகாபாத்தைச் சேர்ந்த அரசியல்வாதி அத்தீக் அகமது (59). கொலை, ஆட்கடத்தல், மிரட்டல், மதநல்லிணக்கம் குலைப்பு உள்ளிட்ட வழக்குகளால் அத்தீக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுயேச்சை எம்எல்ஏ-வாக இருந்த அவர், பின்னர் அப்னா தளம்(சோனுலால்) உள்ளிட்ட கட்சிகளில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தார். தற்போது பாஜக கூட்டணியில் உள்ள அப்னா தளம் கட்சியின் தலைவராக 1999 முதல் 2003 வரையில் அத்தீக் இருந்தார். 2004 மக்களவைக்கும் சமாஜ்வாதியில் எம்.பியானார். இவர் வென்றது முன்னாள் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பூல்பூர் தொகுதி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலும் இருந்த அத்தீக், சிறையில் இருந்தபடியே தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார்.

தற்போது தனது சிறை வாழ்க்கையிலும் பல அத்துமீறல்களால் அத்தீக், குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது சட்டவிரோத சொத்துக்கள் மீது முதன்முறையாக முதல்வர் யோகி நடவடிக்கை எடுத்தார். இதில் ஒன்றாக அத்தீக்கிடம் இருந்த அலகாபாத்தின் முக்கியப் பகுதியான லுக்கர்கன்சில் 1,731 சதுர மீட்டர் அளவிலான நிலமும் மீட்கப்பட்டது. இதில், பிரதமர் குடியிருப்புப் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கான அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் உள்ளன. இங்கு 76 குடியிருப்புகளுக்காக முதல்வர் யோகி உத்தர பிரதேசத் தேர்தலுக்கு முன்பாக அடிக்கல் நாட்டியிருந்தார். இவை இன்னும் ஆறு மாதங்களில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

விகாஸ் துபே மீது முதல் நடவடிக்கை

இதுபோன்ற நடவடிக்கை, முதன்முறையாக கடந்த 2020 ஜூலையில் யோகியால் எடுக்கப்பட்டது. இதில், கான்பூரின் பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான விகாஸ் துபேவிடம் இருந்த சட்டவிரோத நிலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விகாஸ் துபே தன்னைக் கைது செய்யவந்த கான்பூர் போலீஸ் படையின் மீது துப்பாக்கி குண்டுகள் பொழிந்தவர். இதனால், டிஎஸ்பி, ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிறகு தப்பிய விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, தப்பி ஓடியதாக என்கவுன்டர் செய்யப்பட்டார்.

இதையடுத்து கான்பூரில் அவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டன. இதில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் முதல்வர் யோகி உத்தரவின் பேரில் புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பொதுமக்களிடம் இருந்தும் பலத்த வரவேற்பு கிடைத்தது. இப்படி பல குற்றவாளிகளுக்குக் குறிவைக்கப்பட்டது. தப்பி ஓடிய பாலியல் குற்றவாளிகளின் வீடுகள் முன்பாகவும் புல்டோசர்களை நிறுத்தி அவர்கள் சரணடையும்படி மிரட்டப்பட்டனர்.

சமாஜ்வாதியின் மூத்த தலைவர் ஆஸம்கான் எம்.பி, உபியின் முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரி, முன்னாள் எம்.பி-யான அத்தீக் அகமது என ஐம்பதிற்கும் மேலானோர் மீது இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதாக முதல்வர் யோகி மீது புகார்கள் எழுந்தன. இதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது நோக்கில் குறியாக இருந்தார் முதல்வர் யோகி. இதன் பலனாக, துறவியான முதல்வர் யோகியை பாஜகவினர், ‘புல்டோசர் பாபா’ எனும் பெயரில் முன்னிறுத்தினர். தேர்தல் வரையிலும் சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்கள் குற்றவியல் அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டன. இந்த புல்டோசர்களை தேர்தல் சமயத்தில் டாட்டூவாகவும் தம் கைகளில் பலர் முத்திரையிட்டுக கொண்டனர். யோகியின் அதிரடி நடவடிக்கைகள் தேர்தல் வெற்றிக்கும் துணைபுரிந்தன.

யோகி பாணியில் ம.பி முதல்வர்

யோகி பாணியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அவரை ‘புல்டோசர் மாமா’ என பாஜகவினர் அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in