ஆவின் பால் திடீரென உயர்த்தப்பட்டது ஏன்?- குஜராத்தை காரணம் காட்டும் அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம்

ஆவின் பால் திடீரென உயர்த்தப்பட்டது ஏன்?- குஜராத்தை காரணம் காட்டும் அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம்

ஆவின் ஆரஞ்ச் பால் திடீரென உயர்த்தப்பட்டது ஏன்? என்பது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் ஆரஞ்ச் நிற பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆவின் பால் ஏன் உயர்த்தப்பட்டது என்பது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எருமைப்பால் 41 ரூபாயிலிருந்து 44 ரூபாயாக உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முதல்வர் இன்று உயர்த்தி இருக்கிறார். இந்த பால் விலை ஏற்றத்தால் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது வணிக நோக்கத்தோடு செய்யவில்லை. ஆரஞ்சு கலர் பால் மட்டும்தான் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பாலையை 48 ரூபாய்க்கு நாம் விற்பனை செய்தோம். மற்ற மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை பார்த்தால் அவர்கள் 70 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். நாங்கள் 60 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்கிறோம்.

பாஜக ஆளும் குஜராத், கர்நாடகாவில் விற்பனை செய்யப்படும் பாலை விட 10 ரூபாய் குறைவாகத் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். ஆரஞ்சு பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அட்டைதாரர்களுக்கு பழைய விலை தான். அதில் மாற்றமில்லை. அட்டை இல்லாதவர்கள் வணிக ரீதியாக வாங்குபவர்களுக்கு தான் நாங்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். தமிழகத்தில் 48 ரூபாய்க்கு பால் விற்பனை செய்யப்படும் நிலையில் மற்ற மாநிலங்களில் 70 ரூபாய்க்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டுக்கும் வித்தியாசத்தை நீங்க பார்க்க வேண்டும். அதிலும் நாங்கள் 10 ரூபாய் குறைத்து தான் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பாலுக்கு கூட ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு போட்டுவிட்டது. அதன் விளைவால் தான் தற்போது பால் விலை உயர்ந்து இருக்கிறது. நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பால் விலையை குறைத்து இருக்கிறோம். அதன்படி இதுவரை பாலை விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறோம். சாதாரண பால் ஏறக்குறைய 30 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக பச்சை, புளு நிற பால்கள் உயர்த்தப்படவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in