அனைத்திற்கும் கருணாநிதி பெயர் எதற்கு?

திமுகவும் அதிமுக பாணியில் பயணிப்பதைத் தவிர்க்கலாமே!
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின்...
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின்...

அண்மையில், “சென்னை அண்ணாசாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்” என்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது, திமுக உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அதிமுக, பாஜக உறுப்பினர்களும் அதை வரவேற்றுப் பேசினார். ஆனால் அதேசமயம், கிழக்குக் கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பை எதிரணியில் இருக்கும் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

கருணாநிதி
கருணாநிதி

மே 2-ம் தேதி கிண்டியில் நடைபெற்ற தமிழக நெடுஞ்சாலைத் துறையின் 75-வது ஆண்டு பவளவிழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என்று பெயர் சூட்டப்படும்” என்று அறிவித்தார். இதுதான் அரசியல்வாதிகளைத் தாண்டி பல்வேறு தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

’’கருணாநிதியை போற்றுவதும், புகழ்வதும் தவறில்லைதான், ஆனால் அதற்காக, எல்லாவற்றிற்கும் கருணாநிதி பெயரையே சூட்டவேண்டுமா? இது அதிமுகவின் அணுகுமுறை போல அல்லவா இருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகளை எல்லாம் சரிசெய்வோம் என்று சொன்னவர்கள் இப்படி அவர்கள் பாணியில் அனைத்துக்கும் கருணாநிதியின் பெயரை சூட்டிக் கொண்டே போவது சரிதானா?’’ என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

”அதிமுக ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் அதற்கு பெயர் வைக்க அவர்கள் அதிகம் யோசித்ததில்லை. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமென்ட், அம்மா முகாம் திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா சிறு வணிக கடன் திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா பூங்காக்கள், அம்மா உடற்பயிற்சி நிலையம் என எங்கும் அம்மா எதிலும் அம்மா பெயர்தான் இருந்தது. அன்றைக்கு அவர்களை குற்றம் சொன்ன திமுக இன்றைக்கு அதே தவறை செய்வது எப்படி சரியாகும்?” என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு கடந்த ஓராண்டில் கருணாநிதிக்காக செய்திருக்கும் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகளைப் பார்த்தால் பட்டியல் நீளத்தான் செய்கிறது. சட்டப்பேரவையில் 16-வது நபராக கருணாநிதியின் படத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி, குடியரசு தலைவர் திறந்து வைத்தார். இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ‘டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி’ என பெயர் மாறியது. அத்துடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியானது, ‘கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி’ எனப் பெயர் மாறியது.

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மாதிரி
மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மாதிரி

இந்த மாற்றங்கள் ஒருபக்கமிருக்க, “சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்” என்று அறிவித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “2010 முதல் வழங்கப்படாமலிருக்கும் ’கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ இனி ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் மாதம் 3-ம் தேதி 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின் போது, கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியது. இந்தத் திட்டத்தை கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தான் தொடங்கினார்கள். அரசுப் பேருந்துகளில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானதும் ஜூன் 3-ல் தான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதனிடையே, “சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்" என்ற அறிவிப்பும் வெளியாகி அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன.

அதேபோல், பேரவையில் விதி எண் 110- ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி நினைவிடம் 39 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவுடன் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். கருணாநிதியின் சாதனைகளை எடுத்துரைக்கும் விளக்கப் படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்த அவர், நினைவிடத்திற்கான மாதிரியையும் வெளியிட்டார். லேட்டஸ்டாக, சென்னை அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டவேண்டும் என்று திருவாரூர் நகராட்சியில் சிறப்புத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். “கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்” என அறிவித்திருக்கிறார் காரைக்குடி நகராட்சியின் திமுக சேர்மன் முத்துத்துரை. திருவாரூர் விவகாரத்தில், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆன்மிகச் சிறப்பும் பாரம்பரியப் பெருமையும் மிக்க திருவாரூர் தேரோடும் தெற்குரத வீதிக்கு, கடவுள் மறுப்பாளரான கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியைப் போலவே அனைத்திலும் கருணாநிதியின் பெயரைச்சூட்ட முயல்கிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. எல்லாவற்றிலும் நாங்க வேற மாதிரி என்ற சொல்லிக் கொண்டாலும் பெயர் சூட்டும் விஷயத்தில் நாங்கள் அதேமாதிரிதான் என்று படம் போட்டுக் காட்டுகிறார்கள்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ’’மறைந்த தலைவர்களின் பெயரை வைப்பது தவறில்லை. ஆனால் அதற்காக, எல்லாவற்றிற்கும் அதை வைப்பது தவறில்லையா? இப்படியே போனால் விரைவில் இவர்கள் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என்றுகூட மாற்றுவார்கள். கிழக்கு கடற்கரைச்சாலை என்பது வெள்ளைக்காரர்களின் காலத்திலிருந்து இருக்கிறது. 13 மாவட்டங்களை இணைக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த, எல்லோருக்கும் அறிமுகமான ஒரு அடையாளமான பெயர். தேசிய அளவில் பிரபலமானது. காஷ்மீரில் இருப்பவருக்குக் கூட தெரியும். கிழக்கு கடற்கரை சாலை என்பதே நல்ல அழகான பெயர். அதைப்போய் மாற்றிவிட்டு கருணாநிதி பெயரை வைப்பது எப்படி சரியாக இருக்கும்? சென்னையின் அடையாளமாக மெரினா பீச் இருக்கிறது. அதைப்போய் கருணாநிதி பீச் என்று மாற்றலாமா? இப்ப இதை நான் சொல்லிட்டதால் நாளைக்கு அதையும் கூட மாற்றினாலும் மாற்றுவார்கள்” என்றார் ஜெயக்குமார்.

“உங்கள் ஆட்சியில் எல்லாவற்றிற்கும் அம்மா பெயர் வைக்கப்படவில்லையா... அதைப்பார்த்துத்தானே இவர்களும் அதையே தொடர்கிறார்கள்?” என்று அவரைக் கேட்டதற்கு, “அம்மா பெயர் வைத்தோம் என்றால் அது புதிய திட்டங்களுக்கு வைத்தோம். இருக்கும் பெயரை மாற்றிவிட்டு அம்மா பெயரை வைக்கவில்லையே. அதுபோல புதிதாக நல்ல திட்டத்தைக் கொண்டுவந்து விட்டு அதற்கு அவர் பெயரை வைத்துவிட்டுப் போங்கள். அதற்குப் பதிலாக சாலையின் பெயரை மாற்றுவது, ஆலையின் பெயரை மாற்றுவதெல்லாம் என்ன வேலை? இதையெல்லாம் விட்டு விட்டு மக்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

சூர்யா வெற்றிகொண்டான்
சூர்யா வெற்றிகொண்டான்

இது தொடர்பாக திமுகவின் தலைமைக்கழக வழக்கறிஞரும், செய்தித் தொடர்பாளருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பேசினோம். ‘’கருணாநிதி நாடு என்று பெயர் சூட்டலாம் என்று சொன்னதற்காக ஜெயக்குமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கொள்கிறேன். இது கலைஞரால் கண்ணியம் பெற்றதும், கலைஞரால் பேறுபெற்றதுமான மாநிலம். அதற்காக அவர்கள் செய்ததுபோல உப்பு முதல் சிமென்ட் வரை எல்லாவற்றிற்கும் அவர் பெயரைச் சூட்டவில்லை. அவரது மறைவின்போது அவரது ஆசையான கடற்கரை ஓரத்தில் அண்ணாவின் பக்கத்தில் சிறிது இடம் கேட்டதற்கு கொடுக்க மறுத்தார்கள். கடற்கரையில் அண்ணாவுக்கு பக்கத்தில்தான் இறுதித்துயில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதும், நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் என்று அவர் சொன்னதும் உங்களுக் கெல்லாம் நினைவில் இருக்கும், அப்படி கடல் என்று சொன்னால் கலைஞர் நியாபகம் வருவது இயல்புதான். அதனால்தான் கடல்சார்ந்த அந்த சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது.

ஏன், ஈ.சி.ஆர் சாலை என்பது நன்றாகத்தானே இருக்கிறது என்பவர்கள் முழுப்பெயரை சொல்லாவிட்டால் கே.கே.ஆர் சாலை என்று சொல்லிவிட்டுப் போங்கள். அதிலென்ன பிரச்சினை இருக்கிறது. அடுத்ததாக, கல்வி நிலையங்களுக்கு அவர் பெயரை சூட்டுவதில் அந்தந்த பகுதி மக்களின், மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள் இருக்கிறது. அதன்படியே கல்லூரிகளுக்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நூலகம், விருது இவைகளுக்கும் இலக்கியத்துக்காகவும், தமிழுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய அவரது பெயரை வைப்பதில் எந்த தவறும் இல்லை. இதையெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அரசியல்வாதிகள் சிலர்தான் வயிற்றெரிச்சல்படுகிறார்கள்” என்று சொன்னார் அவர்.

விமர்சனங்களை வரவேற்று சரிசெய்து கொள்வதுதான் நல்ல ஆட்சியாளர்களின் பண்பு. அந்த வகையில், தொட்டதுக்கெல்லாம் கருணாநிதி பெயரை தூக்கிப்பிடிக்க வேண்டுமா என்று அடிமட்டத்திலிருந்து வரும் விமர்சங்களை பற்றியும் ஆட்சியாளர்கள் யோசித்தால் நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in