`காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள்'- வேலுமணிக்கு ஆதரவளிக்கும் உதயகுமார்

`காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள்'- வேலுமணிக்கு ஆதரவளிக்கும் உதயகுமார்

"அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும்" என்று வேலுமணி வீட்டில் நடந்து வரும் சோதனை குறித்து முன்னாள் உதயகுமார் காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறைக்குப் பல விருதுகளைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்தவர் எஸ்.பி.வேலுமணி. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையில் தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும். நிச்சயம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்மீதான குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக எதிர்கொண்டு குற்றமற்றவர் என்று நிரூப்பிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

அதே அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசை உதயகுமார் விமர்சித்துள்ளார். அந்த அறிக்கையில், "மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரம் முல்லைப் பெரியாறு அணை. ஏறத்தாழ 2 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும், ஒரு கோடி விவசாய மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கும் இந்த அணையை மராமத்து பணி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி தர மறுக்கிறது கேரள அரசு. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மாபெரும் சட்டப்போராட்டம் மூலம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தின் அந்த உரிமையை முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பாதுகாத்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

தற்போது கேரள அரசு புதிய அணை கட்ட முயன்றுவருகிறது. ஆனால் தமிழகத்தின் இத்துறையின் மூத்த அமைச்சர் (துரைமுருகன்) தனி அக்கறை செலுத்தவில்லை. முதலமைச்சரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து வாய் திறக்காதது கவலை அளிக்கிறது. எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் தான் இந்த முல்லைப் பெரியாறு. எனவே, விவசாயிகளை காப்பாற்றிடவும் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நிலைநாட்டிடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in