அதிமுக - பாஜக மோதல்: முடிவுக்கு வருகிறதா தேனிலவுக் காலம்?

ஈபிஎஸ், அண்ணாமலை, சி.டி.ரவி
ஈபிஎஸ், அண்ணாமலை, சி.டி.ரவிஉதிரும் தாமரை, துளிரும் இலை - உரசல் பின்னணி

தமிழக பாஜகவிலிருந்து விலகும் நிர்வாகிகளை கூட்டணி கட்சியான அதிமுக இன்முகத்துடன் வரவேற்று அரவணைத்துக் கொள்வது அந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பலரும் பல்வேறு கட்சிகளுக்கு சென்றனர். நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா, வேலூர் கார்த்தியாயினி போன்றவர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போது அதிமுக தலைவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ஆனால் இப்போது, பாஜக மாநில தகவல்தொழில் நுட்ப பிரிவின் தலைவர் உள்ளிட்ட சிலர் அதிமுகவில் இணைந்த விவகாரம் அதிமுக - பாஜக கூட்டணிக்கே குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையே இப்போது நடந்து கொண்டிருக்கும் மோதலுக்குக் காரணம் என்கிறார்கள். இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் ஓபிஎஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் பாரபட்சமில்லாமல் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும். “ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது’’ என்று கொளுத்திப் போட்டார். இடைத் தேர்தல் களத்தில் அதிமுக தங்களை வேண்டா விருந்தாளியாகப் பாவித்த விதமும் அண்ணாமலையை இப்படிப் பேசவைத்தது

ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார்.
ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார்.

அண்ணாமலை இப்படிப் பேசியது ஈபிஎஸ் தரப்பை தகிக்க வைத்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்தவர்கள், பாஜக நிர்வாகிகள் கட்சி மாறி தங்களிடம் வருகிறார்கள் என்றதும் தட்டாமல் ஏற்றுக்கொண்டார்கள். இப்படி தங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதை அண்ணாமலை ரசிக்கவில்லை. ’’ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு’’ என்று நியூட்டனின் மூன்றாம் விதியைச் சொன்ன அவர், அந்த சூட்டோடு ஓபிஎஸ்ஸை தேனியில் அவரது இல்லம் தேடிப் போய்ச் சந்தித்து அம்மா இறப்புக்கு ஆறுதல் சொன்னார்.

ஆறுதல் சொன்னதோடு நிற்கவில்லை, ”ஓபிஎஸ் மீண்டும் வருவார்... மீண்டு வருவார்’’ என ஈபிஎஸ் தரப்பை சீண்டினார். இதெல்லாமும் தமிழகத்தில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. ஒரு காலத்தில் பாஜகவை பற்றி பேசவே பயந்த ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் தற்போது அண்ணாமலையை நேரடியாகத் தாக்கிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சிலர் எதற்கோ பயந்துகொண்டு பேசாமல் மௌனம் காக்கிறார்கள். பதிலுக்கு பாஜகவினரும் போராட்டம் போஸ்டர் கிழிப்பு, ஈபிஎஸ் படம் எரிப்பு என அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல்...
ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல்...

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான தேனிலவுக் காலம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைத் தொடர்பு கொண்டோம். “தற்போது வரை நாங்கள் பாஜக கூட்டணியில் தான் உள்ளோம். எங்கள் தலைவர் புகைப்படத்தை எரிக்கும் அளவுக்கு இங்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. அதிமுகவில் இருந்து சென்ற நயினார் நாகேந்திரன் உட்பட பலரும் எங்கள் தலைமையை விமர்சனம் செய்தார்கள். அதனைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும், பண்பும் எங்களிடம் இருந்தது. ஆனால், பாஜக தலைமைக்கும் அங்கிருக்கும் நிர்வாகிகளுக்கும் அந்தப் பண்பு இல்லை என்பது போலத்தான் உள்ளது.

ஒரு தலைமைக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அம்மாவுக்கு நிகர் அம்மாதான். புரட்சித்தலைவருக்கு நிகர் புரட்சித்தலைவர் தான். பாரதப் பிரதமர் மோடி ஜிக்கு நிகர் மோடி ஜி தான். இந்தத் தலைவர்களின் வழிக்காட்டுதல்களை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களைத் தங்களோடு ஒப்பிடக்கூடாது. மொத்தத்தில் அண்ணாமலை அவர்களுக்கு நிதானம் தேவை’’ என்றார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

கூட்டணி தொடர்வதாக அதிமுக தரப்பில் சொல்கிறார்களே என்று பாஜக நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டியிடம் கேட்டோம். ‘’நாங்களும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். ஆனால், கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரை 420 என்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டும் பேசிய ஒருவரை அதிமுக இன்முகத்தோடு வரவேற்று இணைத்துக்கொள்வதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்.

பாஜக என்ற ஆலமரத்தின் நிழலில் பலன் பெற்றவர்கள் தான் அதிகம். எங்களுக்கு தலைமைப் பண்பு, நிதானம் போன்றவற்றை அதிமுகவினர் சொல்லித்தரத் தேவையில்லை. எங்கள் தலைவரை விமர்சித்தால் நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். பாஜக தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது’’ என்றார் அவர்.

அண்ணாமலையுடன் அமர்பிரசாத் ரெட்டி
அண்ணாமலையுடன் அமர்பிரசாத் ரெட்டி

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த உரசல் விரிசலாக வளர வேண்டும் என ஆளும் திமுகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தலில் தென் மாநிலங்களில் வெற்றிக் கணக்கை உயர்த்த நினைக்கும் பாஜக, தமிழகத்தில் செல்வாக்கான ஒரு பார்ட்னரை அத்தனை எளிதில் உதறித் தள்ளிவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. ஒருவேளை, அத்தகைய முடிவுக்கு அந்தக் கட்சி வருமேயானால், நிச்சயம் அதற்கு நிகரான ‘பி பிளான்’ ஒன்று அவர்கள் கையில் இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in