`எச்.ராஜா மீது பாயாத சட்ட நடவடிக்கை சாட்டை துரைமுருகன் மீது பாய்வதேன்?'- சீமான் ஆவேசம்

`எச்.ராஜா மீது பாயாத சட்ட நடவடிக்கை சாட்டை துரைமுருகன் மீது பாய்வதேன்?'- சீமான் ஆவேசம்

"மதவெறுப்பை விதைத்து சமூக அமைதியைக் குலைக்க முனையும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் மீது ஒருமுறைகூட பாயாத திமுக அரசின் சட்ட நடவடிக்கைகள் சாட்டை துரைமுருகன் மீது மூர்க்கமாகப் பாய்வதேன்?" நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்த் தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு, 170 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், முந்தைய வழக்கில் பெற்ற அவரது பிணையைத் திரும்பப் பெறச் செய்திருக்கும் திமுக அரசின் போக்கு அதிகாரத் திமிரின் உச்சமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல், அவர் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகளைப் புனைந்து, சிறைப்படுத்தி அடக்குமுறையை ஏவிவிடும் கொடுங்கோல் நடவடிக்கைகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையில் அமைந்துள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய நிலையில், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக காணொலி வெளியிட்டதற்காக முறைகேடானப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைத் தொடுத்து கைது செய்த திமுக அரசு, அவர் பிணையில் வந்துவிடக் கூடாதென எண்ணி, குண்டர் தடுப்புச்சட்டத்தைப் பாய்ச்சி, தனது அரசதிகார வலிமை கொண்டு பழிவாங்கல் போக்கைச் செய்து, சனநாயகத்தைச் சாகடித்திருக்கிறது. மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களையும், எதிர்க்கருத்து கொண்டவர்களையும் வழக்குகளின் மூலம் சிறைப்படுத்துவதும், அதிகாரத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்துவதுமான திமுக அரசின் செயல்பாடுகள் முழுமையான மக்கள் விரோதமாகும்.

ஏற்கெனவே, பிணைபெற்றிருந்த வழக்கொன்றில், தமிழக அரசு முறையீடு செய்து, அதனைத் திரும்பப் பெறக்கோரி அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, தம்பி துரைமுருகனின் பிணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ரத்து செய்திருக்கிறது. மதவெறுப்பை விதைத்து சமூக அமைதியைக் குலைக்க முனையும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் மீது ஒருமுறைகூட பாயாத திமுக அரசின் சட்ட நடவடிக்கைகள் சாட்டை துரைமுருகன் மீது மூர்க்கமாகப் பாய்வதேன்?

‘ஒரு அமைச்சர் கூட சாலையில் நடமாட முடியாது’ என ஒட்டுமொத்த அமைச்சரவைக்கே மிரட்டல் விடுத்து, அமைச்சர்களது நடமாடும் உரிமைக்கு எதிராக மன்னார்குடி ஜீயர் ராமானுஜம் பேசியதையும் வெட்கமின்றி கருத்துரிமையென விளித்து, அவரை அனுசரித்து அரவணைக்கும் திமுக அரசுக்கு, தம்பி துரைமுருகன் பாக்ஸ்கான் தொழிலாளர்களின் துயரத்தைப் பேசியது எப்படி சமூக அமைதிக்குக் கேடுவிளைவிப்பதாகத் தெரிகிறது?

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபட வந்த பெண்ணை சாதிவெறியோடு பேசி, அவமதித்து வெளியே துரத்திய தில்லை தீட்சிதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தும், 20 பேரில் ஒருவரைக்கூட கைதுசெய்ய துப்பற்ற திமுக அரசு, ஓராண்டு ஆட்சியில் அடுத்தடுத்து மூன்று முறை தம்பி துரைமுருகனை சிறைப்படுத்தியது எதற்காக? எதன்பொருட்டு? இதுதான் சனநாயகத்தைப் பேணுகிற லட்சணமா? இதுதான் சமூக நீதி ஆட்சியின் வெளித்தோற்றமா? வெட்கக்கேடு!

அரசதிகாரத்தின் கொடுங்கரங்களால் குரல்வளை நெரிக்கப்பட்டு சிறையிலுள்ள அன்புத்தம்பி சாட்டை துரைமுருகனை நேரில் சந்தித்துப் பேசினேன். தன் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடைத்து, விரைவில் சிறைமீண்டு வருவார் தம்பி துரைமுருகன். அதற்கான சட்டப்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முனைப்போடு செய்து வருகிறது. அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தம்பி துரைமுருகனுக்கு உற்றதுணையாகவும், உளவியல் பலமாகவும் நானும், நாம் தமிழர் கட்சியின் உறவுகளும் இறுதிவரை நிற்போமென உறுதிகூறுகிறேன்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றுக்கருத்து கொண்டோர், விமர்சிப்பவர்கள் மீது ஆளும் அரசு கொடும் வழக்குகள் தாக்கல் செய்து, சிறைப்படுத்தி வருவதென்பது கருத்துரிமைக்கெதிரான போர் மட்டுமல்ல; அக்கருத்துரிமையை நமக்கு வழங்கி வருகிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே நடத்தப்படுகிற கோரத்தாக்குதலுமாகும். இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதும், துணிந்துப் போராட வேண்டியதும் சனநாயகப் பற்றாளர்களின் தார்மிகக் கடமையாகும்.

ஆகவே, ஊழலும், அநீதிகளும் நிரம்பப்பெற்ற கொடுங்கோல் திமுக ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்கும், எத்தனை அடக்குமுறை வந்தாலும் அதனைத் துணிந்து எதிர்கொள்வதற்கும் லட்சக்கணக்கான தமிழின இளம் தலைமுறையினர் தயாராகி வருகிறார்கள் எனப் பேரறிவிப்பு செய்து, அன்புத்தம்பி சாட்டை துரைமுருகனை கொடும் வழக்குகளிலிருந்து விடுவித்து, வெகுவிரைவில் சிறைமீட்போமென உறுதியளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in