'கடமையைச் செய்தவரை எதற்காக பதவியிலிருந்து நீக்க வேண்டும்?': ஆளுநருக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் அறிக்கை

'கடமையைச் செய்தவரை எதற்காக பதவியிலிருந்து நீக்க வேண்டும்?': ஆளுநருக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் அறிக்கை

ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என, திமுக கூட்டணி கட்சிகள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் 'மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும் செயல்' எனக் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு ஆளுங்கட்சியாக இருக்கும் போது தான், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னாரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் மூலம், அன்றைய அதிமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என திமுகவினர் நினைக்க வேண்டாம்.

ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர். எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதி தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கென வகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துகளைச் சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர், பொதுநிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். அதில், திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில், 'கருத்துக்கு கருத்து' என்று, ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், திமுகவுக்கு ஜனநாயக வழியிலான கருத்து பரிமாற்றத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

திமுக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தை மீறும்போது, சட்டம், ஒழுங்கைப் பாதிக்கும் பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதைக் கூட, வாக்கு வங்கி அரசியலுக்காக மறைக்க முயலும்போதும் மாநில அரசைத் தட்டிக்கேட்கும் கடமை பொறுப்பில் ஆளுநர் இருக்கிறார். கடமையைச் செய்தவரை எதற்காக பதவியிலிருந்து நீக்க வேண்டும்? திமுக அரசுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், திமுகவினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம்.

தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநர் மீது வெறுப்பைக் கக்காமல், மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் நலனுக்காக அவருடன் திமுக. அரசு இணைந்து செயல்பட வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, தமிழக மக்களின் விருப்பமும் இதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in