மருத்துவத்துக்குள் சம்ஸ்கிருதம் நுழைவது எதன் அறிகுறி?

மருத்துவத்துக்குள் சம்ஸ்கிருதம் நுழைவது எதன் அறிகுறி?

மருத்துவப்படிப்புக்குள் சம்ஸ்கிருதம் நுழைவதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே எதிர்த்த வரலாறு தமிழகத்துக்கு உண்டு. மேற்கத்திய மருத்துவமுறையான அலோபதியை கற்க சம்ஸ்கிருதம் கட்டாயம் என்று ஒரு காலத்தில் இருந்துவந்தது.

சென்னை மாகாணத்தில் மருத்துவப் படிப்பில் இணைவதற்கு சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாக வேண்டும் என்ற முன்நிபந்தனை இருந்தது. தேவதாசி என்ற விலங்கை அறுத்தெறிந்து நாட்டின் முதல் பெண் மருத்துவர்கள் பட்டியலில் ஒருவராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தலையெடுத்தது தேவதாசி முறை தகர்க்கப்பட்டதால் மட்டுமல்ல; சம்ஸ்கிருதம் மருத்துவ படிப்புக்கு கட்டாயம் என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டதினாலும்தான். சம்ஸ்கிருதம் தெரியாத மாணவர்கள் மருத்துவம் பயில முடியாது என்றிருந்த காலத்தில் அந்த தடை நீதிக்கட்சி ஆட்சியில் நீக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டு கடந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் பூதாகாரமாக வெடித்திருக்கிறது. அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, எம்எல்ஏ-வான புதூர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் என இத்தனை பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் சம்ஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை ஆங்கிலத்தில் ஏற்றது அரங்கேறியது.

வழக்கமாக ஏற்கப்படும் ’இப்போகிரெட்டிக்’ உறுதிமொழிக்கு மாறாக மாணவர்கள் எப்படி சம்ஸ்கிருத உறுதி மொழியை ஏற்றனர், அதை அனுமதித்தது யார் என்ற சர்ச்சை கிளம்பியது. இச்செயலுக்கான உடனடி எதிர்வினையாக ரத்தினவேல் மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார்.

’இப்போகிரெட்டிக்’ உறுதிமொழியை மட்டுமே மருத்துவ மாணவர்கள் எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் உடனடியாக அனுப்பப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாராயணபாபு உள்ளிடோர் அடங்கிய குழுவால் தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரி டீன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையில், மதுரை மருத்துவக் கல்லூரி பேரவையின் மாணவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை. சம்ஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் வாசித்தோம் என்ற ‘புத்திசாலித்தனமான’ விளக்கத்தை கொடுத்தனர். மேலும், தேசிய மருத்துவ கவுன்சில் கடந்த மார்ச் 31 அன்றுதான் மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மகரிஷி சரக் சபத் உறுதிமொழியை பரிந்துரை செய்தது என்றும் தெரிவித்தனர். இந்த உறுதிமொழியைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர் பேரவையே முடிவு செய்தது; இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்தனர். இதை தொடர்ந்து, விசாரணை நீடிக்கப்பட்டது. அதன் முடிவில் ரத்தினவேல் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த காரணத்தினாலும், கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றி உள்ளதாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மீண்டும் அவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்தப்படுவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சர்ச்சை இத்துடன் முற்றுப்பெற்றாலும் அது ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் அடங்கவில்லை. காரணம், ’மகரிஷி சரக் சபத்’ என்பது என்ன? சம்ஸ்கிருதத்தில் உள்ள அந்த உறுதிமொழியை ஏற்கும்படி தேசிய மருத்துவக் கவுன்சில் எதற்காகப் பரிந்துரைத்தது? இத்தனை ஆண்டுகளாக ஏற்ற ’இப்போகிரெட்டிக்’ உறுதிமொழியின் தத்துவம் என்ன? தேசிய மருத்துவக் கவுன்சிலின் இந்த நடவடிக்கையின் பின்புலம் என்ன? போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக இந்த சர்ச்சையின் மூலம் எழுந்துள்ளது.

முதல் கேள்வியை எடுத்துக்கொள்வோம். ’சபத்’ என்றால் சம்ஸ்கிருத மொழியில் உறுதிமொழி. ஒன்று முதல் இரண்டாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ’சரகா சம்ஹித’ என்ற ஆயுர்வேத மருத்துவ நூலில் இடம்பெற்றுள்ள உறுதிமொழியே மகரிஷி சரக் சபத். ஆனால், இதை எழுதியது யாரென்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆயுர்வேத மருத்துவ முறையை பயில வரும் சிஷ்யர்களுக்கு குரு அளிக்கும் போதனை இது. அதில் இடம்பெற்றுள்ள, ‘கணவர் அல்லது உறவினர் முன்னிலையில் இல்லாதபோது பெண் நோயாளிக்கு நான் (ஆண் மருத்துவர்) சிகிச்சை அளிக்க மாட்டேன்’, ‘எனது குருவுக்கு கீழ்ப்படிந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே எனது முழுமுதற் கடமை’ உள்ளிட்ட சில வாசகங்கள் பிற்போக்கான கருத்துகளையும் காலாவதியாகிப்போன சிந்தனை போக்குகளையும் தாங்கி நிற்பதே எதிர்ப்புக்கான முதல் காரணம்.

ஏற்கெனவே இது தொடர்பாக மருத்துவத் துறையினர் விமர்சனக் குரலை எழுப்பியதாகவும் அதன் அடிப்படையில் மூலப் பிரதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புது பதிப்பாகவே தற்போதைய ’மகரிஷி சரக் சபத்’ பரிந்துரைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அதிலுள்ள மைய சிந்தனை பழமைவாதத்தையே தூக்கிப்பிடித்து நிற்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பையே எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் சேர்ந்த மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் கடந்த வாரம் வாசித்தனர்.

மறுமுனையில் இதுவரை ஏற்கப்பட்டுவந்த ’இப்போகிரெட்டிக்’ உறுதிமொழியை அலசுவோம். பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பில் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டுவரும் மருத்துவமுறை அலோபதி. இன்று கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் தன்னை விடுவித்துக்கொள்ளத் தடுப்பூசியையும், உயிர்காக்கும் மருந்துகளையும் அறிவியல்பூர்வமாக அளித்துவரும் மருத்துவமுறை அலோபதி. இதை கற்பவர்கள் கிரேக்க மருத்துவர் இப்போக்ரிடஸுக்கு மரியாதை செலுத்தவே ’இப்போகிரெட்டிக்’ உறுதிமொழி ஏற்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட இந்த உறுதிமொழியின் ஒவ்வொரு சொல்லும் மருத்துவர்களுக்கான அறத்தை வலியுறுத்தும் விதத்தில் உள்ளது.

பிற்போக்கு, முற்போக்கு என்பதையெல்லாம் தாண்டி ஆங்கில மருத்துவம் என்ற அழைக்கப்படும் அலோபதி மருத்துவத்தை கற்பிக்கும் மருத்துவக் கல்லூரிக்குள் ஆயுர்வேத மருத்து முறையின் முன்னோடி (யாரோ?) முன்மொழிந்த சிந்தனையை நுழைப்பது முற்றிலும் முரணானது; பொருத்தமற்றது.

அண்மையில் பாஜக தலைமையிலான உத்தராகண்ட் அரசு அனைத்து பள்ளிகளிலும் வேதம், பகவத்கீதை, ராமாயணம் கற்பிக்கப்படும் என்று அறிவித்திருப்பது இங்கு கவனத்துக்குரியது. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்து மத நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தன் சிங் ராவத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதவிர, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோது, ”இந்திய கலாச்சார மற்றும் பாரம்பரிய ஞானத்தை மாணவர்களுக்கு ஊட்டும் நோக்கத்தில் உபநிடதங்களும் இணைக்கப்படும்” என்றார்.

இந்த சம்பவத்துக்கு ஒரு மாதம் முன்பாக குஜராத் கல்வியமைச்சர் ஜித்து வாஹனி, “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்திருக்கும் பகவத்கீதை 6-ம் வகுப்பு தொடங்கி ப்ளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்குப் போதிக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அடுத்த இரு வாரங்கள் கழித்து இமாச்சல் பிரதேச கல்வியமைச்சர் கோவிந்த் சிங் தாகூர், “மூன்றாம் வகுப்பு முதல் சம்ஸ்கிருதத்திலும் இந்தியிலும் கீதை கற்பிக்கப்படும்” என்றார். அதை தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், “கல்லூரி பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு கீதை போதிக்கப்படும்” என்றார். கர்நாடகா அரசும் நீதிபோதனை கல்வியின் ஒரு பகுதியாக கீதை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

இப்படி கடந்த இரண்டு மாதங்கள் பாஜக ஆட்சிபுரியும் ஐந்து மாநிலங்களில் சம்ஸ்கிருதம், இந்தி மொழிகளின் ஊடாக இந்து மதத்தைக் கல்விப்புலத்துக்குள் நுழைக்கும் வேலை அதிதீவிரமாக நடந்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை முகாந்தரமாக வைத்து இந்த செயல்திட்டம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மறுபுறம் பாஜக ஆளுகைக்கு உட்படாத மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்குள் சத்தமில்லாமல் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி போன்ற விவகாரங்கள் திணிக்கப்படுவதை உற்று நோக்க வேண்டிய அவசியத்தை இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in