பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? - குறிவைத்து தாக்கும் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? - குறிவைத்து தாக்கும் கேஜ்ரிவால்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது போலீஸார் கைது நடவடிக்கை எடுத்த நிலையில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி அதேபோன்ற போஸ்டர்கள் இன்று ஒட்டப்பட்டுள்ளன.

டெல்லி நகரில் ‘மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று’ என்ற வாசகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் செவ்வாய்க்கிழமையன்று ஒட்டப்பட்டன. இது தொடர்பாக 36 வழக்குகள பதிவு செய்யப்பட்டு, அச்சகத்தின் உரிமையாளர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், கேஜ்ரிவால் நேர்மையற்ற, ஊழல் சர்வாதிகாரி என்றும், "அர்விந்த் கேஜ்ரிவாலை அகற்று, டெல்லியைக் காப்பாற்று" என்ற முழக்கங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த சுவரொட்டிகள் பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவால் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தன்னை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை தான் பார்த்ததாகவும், ஜனநாயகத்தில் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்ட அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் கேஜ்ரிவால் கூறினார். அவர், “அப்படிப்பட்ட போஸ்டர்களால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நேற்று அச்சக உரிமையாளரையும், போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த ஆறு ஏழைகளையும் ஏன் கைது செய்தார்கள் என்பது புரியவில்லை. இது பிரதமருக்குப் பயமாக இருப்பதைக் காட்டுகிறது. இவ்வளவு சக்திவாய்ந்த பிரதமர் இதை கையாள்வது நன்றாக இல்லை. போஸ்டர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை யார் வேண்டுமானாலும் ஒட்டலாம். பிரதமர் ஏன் இவ்வளவு பயந்துபோனவராக இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து, பாஜக - ஆம் ஆத்மி கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் சமீபத்திய வடிவமாக போஸ்டர் யுத்தம் மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in