`அந்த அழுகுரல்களை ஏன் கேட்க மறுக்கிறது?'- உயர்நீதிமன்றத்துக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி

`அந்த அழுகுரல்களை ஏன் கேட்க மறுக்கிறது?'- உயர்நீதிமன்றத்துக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் சாதாரண மக்கள் வாழ்விடத்தை இடிக்க உத்தரவிடும் உயர் நீதிமன்றம், சாஸ்திரா பல்கலைக்கழக விவகாரத்தில் மட்டும் மென்மை காட்டுவது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், `தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கடுமைகாட்டுகிறது.

ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிப்பதால் கண்ணீரும் கம்பலையுமாக அலைகிற காட்சிகள் மனிதநேயம் உள்ள அனைவரையும் உலுக்கி எடுக்கின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த அழுகுரல்களை கேட்கவோ அல்லது அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என உத்தரவிடவோ கூட மறுக்கிறது.

இவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளும் நீதிமன்றம் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வழக்கில் செய்வது என்ன? அரசுக்கு சொந்தமான 31 ஏக்க நிலங்களை ஆக்கிரமித்து கல்லூரி கட்டிடங்களை கட்டியுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறது. அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளது.

உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவை அமலாக்க சொல்லியிருக்க வேண்டும், மாறாக சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் வரை வழக்கு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கடுமையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் மென்மையும் கடைப்பிடிக்கும் இந்த பாரபட்சம் ஏனோ?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in