தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதிஷ்குமாரை ஏன் அழைக்கவில்லை? பாஜகவுக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

பீகாரில் பாஜக நேற்று நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு கூட்டணி தலைவரான முதல்வர் நிதீஷ் குமாரை ஏன் அழைக்கவில்லை என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் மாநிலம் கயா, புர்னியாவில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் இக்கூட்டங்களில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநிவ முதல்வருமான நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை.

பீகார் மாநிலம், கயாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
பீகார் மாநிலம், கயாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்

இந்நிலையில் பிரச்சார கூட்டங்களில் முதல்வர் பங்கேற்காதது குறித்து, பாஜகவுக்கு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறுகையில், “நிதிஷ்குமார் எங்கே இருக்கிறார்? பாஜக தனது பேரணிகளுக்கு அவரை ஏன் அழைக்கவில்லை? பிரதமரின் எந்த பேரணியிலும் அவரைக் காண முடியவில்லை. முதல்வர் மீது எனக்கு இன்னும் மரியாதை இருக்கிறது. அவரது தற்போதைய கூட்டாளியான பாஜக, இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

நேற்றைய பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், “ஆர்ஜேடி வளர்ச்சிக்கு எதிராக உள்ளது. லாந்தர் விளக்கை (ஆர்ஜேடி சின்னம்) கொண்டு ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியுமா?” என பேசினார். இதற்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “தாமரை வளரும் சேற்றை, ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் ஏற்ற பயன்படுத்த முடியுமா?” என பதில் கேள்வி எழுப்பினார்.

ஆர்ஜேடி, பாஜக
ஆர்ஜேடி, பாஜக

இதேபோல், அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பொய்யை பரப்பி வருகின்றனர் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், “மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்ததும், பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் என கிட்டத்தட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களும் கூறி வருகின்றனர். அவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in