`திருமாவளவனை இதுவரை சந்திக்காதது ஏன்?'- அன்புமணிக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி

`திருமாவளவனை இதுவரை சந்திக்காதது ஏன்?'- அன்புமணிக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி
குரு விருதாம்பிகை

``பாட்டாளி மக்கள் கட்சி அனைவருக்குமான கட்சி என்று கூறியிருக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்படி என்றால் இதுவரை திருமாவளவனை சந்திக்காதது ஏன்?'' என்று கேள்வி எழுப்புகிறார் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை.

இதுகுறித்து இன்று காமதேனுவிடம் பேசிய குரு விருதாம்பிகை, "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதை தவறு என்று கூறவில்லை. இது அரசியல் நாகரிகம். ஆனால், அவர் அப்படி மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக காரணமாக இருந்த 25 வன்னியர் உரிமைப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று இருக்க வேண்டும் அல்லது உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பாட்டாளி மக்கள் கட்சியை ஊர் ஊராக சென்று வளர்த்து, அவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொண்டு வந்து வளர்த்து விட்ட மாவீரன் காடுவெட்டி ஜெ. குருவின் நினைவிடம் அமைந்துள்ள காடுவெட்டி கிராமத்திற்கு சென்று ஆசி பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு அனைத்து அரசியல் தலைவர்களை சந்திப்பதன் மூலம் அவர் வன்னியர்களுக்கான தலைவர் இல்லை என்பதை நிரூபிக்கிறார்.

அவர் தலைவராக பதவியேற்ற பிறகு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்று கூறுகிறார். டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர் அவர்களை பற்றியும் பேசுகிறார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தொல்.திருமாவளவனை மட்டும் இன்னும் ஏன் அரசியல் நாகரிகம் கருதி சந்திக்கவில்லை? பாமக பொதுக்கட்சி என்றால் வன்னியர் சங்கம் என்ற ஒன்றை ஏன் வைத்துள்ளீர்கள். வரும் காலங்களில் வன்னியர் சங்கம் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ள மாட்டாரா? வன்னியர் சங்க மாநாடுகளில் கலந்து கொள்ள மாட்டாரா?

தமிழ்நாட்டில் வன்னியர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவானதே பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் அவரோ, இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் என்று கூறுகிறார். ஒரு லெட்டர் பேடு இயக்கமாக இருந்தாலும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறும் நிலையில், மிகப் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கூறுவதற்கு காரணம் தனியாக தேர்தலில் நிற்க அன்புமணிக்கு திராணி இல்லை.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் மட்டுமே அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

அன்புமணியின் செயல்கள் வன்னியர்களுக்கானதாக இல்லை, மற்றவர்களுக்காகவும் இல்லை. அவரின் ஒரே நோக்கம் பதவி வாங்குவதும் பணத்தை வாங்குவதும்தான். எனவே, இரட்டை நாக்கு உள்ள அவரை நம்பி வன்னிய மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டாம் என்று அவர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்" என்று சொன்னார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in