மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மனைவி துர்கா- முதல்வர் ஸ்டாலின்
மனைவி துர்கா- முதல்வர் ஸ்டாலின்

எனது மனைவி துர்கா கோயிலுக்கு போவது குறித்து குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க. சமூக வலைதள ஐ.டி.பிரிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை செனாய்நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சமூக ஊடகங்கள் மூலமாக மக்களை எளிதில் சென்றடைய முடியும். அவர்களின் 'ரியாக் ஷன்' என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும். அவதூறு பரப்பி, திட்டி ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்து விடுகிறது. நமது கருத்துக்கள் நொடியில் கோடிக்கணக்கான பேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. 'முரசே முழங்கு' நாடக வெற்றி விழா நிகழ்ச்சிக்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி இருக்கும். நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று குறிப்பிட்டிருந்த கல்லூரி சுவற்றில் போய் போஸ்டரை ஒட்டிவிட்டேன். அதனால் என் மீது வழக்கும் போட்டார்கள். அப்போது முதலமைச்சர் மகன் நான். அப்போதைய நமது ஆட்சி அப்படி இருந்தது. இன்றும் அப்படி தான் உள்ளது.

சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். திராவிட இயக்கம் தமிழர்கள் தலை நிமிர்வதற்காக பிறந்த இயக்கமாகும். யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் இல்லை. இன்று சீவிடுவேன், சீவிடுவேன் என்று சொல்கிறார்களே. அதற்காகத்தான் இதை சொல்கிறேன். வலை தளங்கள் ஒருவரை ஒரேநாளில் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும். நெகட்டிவ் பிரச்சாரங்கள் மூலமாக எதிரிகளை வீழ்த்துவதைவிட பாசிட்டிவ் பிரச்சாரங்கள் மூலமாக நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியார் பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அன்று இருந்த தலைவர்கள், இயக்கங்கள், பத்திரிகைகள் என எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் பெரியார். அவர்களின் பெயரையெல்லாம் பட்டியல் போட்டால் பலரை உங்களுக்கு தெரியாது. ஆனால் பெரியார் இன்னும் வாழ்கிறார். வாழ்க வசவாளர்கள் என்று கூறிக்கொண்டே எதிரிகளை வீழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா. கூட்டில் இருக்கிற புழுக்களைப் போல கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான். எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது.

யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் என்று கலைஞர் கூறி உள்ளார். இதெல்லாம் நமக்கான பாடங்கள். அதற்காக யாருக்கும் பதில் சொல்லக்கூடாது. எல்லா விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறை சொல்பவர்கள் எல்லா காலத்துக்கும் இருந்து உள்ளனர். மருந்து கண்டுபிடித்து விட்டால் நோய் கிருமிகள் ஒழிந்து விடுமா என்ன? சமூகத்தை பின்நோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம். நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்னைக்கு சோசியல் மீடியாவும், அவர்கள் கண்ட்ரோலில் உள்ளது. அதனால் பொய் சொல்லவும், அவதூறு பரப்பவும் அவர்கள் தயங்குவது இல்லை. இதற்கு சரியான பதிலை நாம் சொல்ல வேண்டும்.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

பாரதிய ஜனதா கட்சியினர் போல போலியானதாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு இப்போது ஒரே வேலை தான். எனது மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார்னு பார்க்கிறார்கள். அதை போட்டோ எடுத்து கோயிலுக்கு போகிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோயிலுக்கும்தான் அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம். அதனை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை. கோயிலும் பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான போராட்டங்களை நடத்தி கோயில் வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது திராவிட இயக்கம். கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்கு பதில். கோயில்கள் கூடாது என்பது அல்ல. கோயில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது. லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோயிலை பராமரிப்பது மதவெறியை தூண்டி குளிர்காய நினைக்கும் அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அதனால் உண்மைகளை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். இந்தியா முழுவதும் அதனை எடுத்துச் சொல்வோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in