திமுக அரசை தட்டிக்கேட்க கூட்டணிக் கட்சிகள் தயங்குவது ஏன்?

திமுக அரசை தட்டிக்கேட்க கூட்டணிக் கட்சிகள் தயங்குவது ஏன்?

அனுசரணையா... அட்ஜஸ்ட்மென்டா?

தமிழகத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டு அதை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஒன்றுகூட இதை எதிர்த்து கருத்துத் தெரிவிக்கவில்லை. இதை மட்டுமல்ல... திமுக அரசின் இப்படியான எந்த ஒரு செயல்பாட்டையும் விமர்சிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குகின்றன.

ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட எதிர்கட்சிகளுக்கு மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிமையுண்டு. ஆனால், கடந்த ஒரு வருட காலமாக திமுக அரசின் சில குளறுபடிகளான அறிவிப்புகள், மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகள் ஏனோ மருந்துக்குக்கூட வாய் திறக்க மறுத்துவருகின்றன.

மிகக் குறைவான சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியது, லாக் - அப் மரணங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, கூட்டுறவு கடன் தள்ளுபடி குளறுபடிகள், தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் என திமுக அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க எத்தனையோ அம்சங்கள் இருந்தும் அதையெல்லாம் யாருக்கோ என விட்டுவிட்டு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டிப்பதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியிலேயே கம்யூனிஸ்ட்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிய வரலாறு உண்டு. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அது இன்னும் வேகமெடுத்தது. ஆனால், இன்றைக்கு எந்த இடத்திலும் செங்கொடி பிடித்து போராட்டக் களத்தில் நிற்கும் சிவப்புத் துண்டு தோழர்களைப் பார்க்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி அதற்கும் ஒருபடி மேலே தான் இருக்கிறது. திமுகவை சங்கடப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் சுதந்திரமாக கருத்துச் சொல்லவே அச்சப்படும் திமுக கூட்டணிக் கட்சிகள், தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பாஜக மீது தைரியமாகப் பாய்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி திமுக அரசுக்கு எதிராக அண்மையில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பாஜக. இதன் நியாயத்தை உரிமையோடு கூட்டணி தோழனுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டிய காங்கிரஸ், “திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்த பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி தனது ராஜவிசுவாசத்தைக் காட்டிக்கொண்டது.

ஆக, திமுகவுக்கு பக்கத்துணையாக இருக்கவே அதன் கூட்டணிக் கட்சிகள் முயற்சிக்கின்றனவே தவிர ஆக்கபூர்வமாக தமிழக அரசை வழிநடத்தும் போக்கில் அவை இல்லை. ஏன் இப்படி என்று கேட்டால் “திமுக கூட்டணிக்குள் குழப்பம் வந்தால் பாஜக உள்ளே வந்துவிடும்” என்று சப்பைக்கட்டுக்கட்டுகின்றன இந்தக் கட்சிகள்.

பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியே தன்னை வளர்த்துக் கொண்ட விசிக, தற்போது பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை பாராமுகமாகவே இருப்பதும் ஆச்சரியமே. இயல்பிலேயே மூர்க்கமான போராட்டக்குணம் படைத்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இவர் நடத்திய போராட்டங்கள் உலகறியும். அவரும்கூட, தடம் மாறும் திமுக அரசின் போக்கு குறித்து கருத்துச் சொல்லத் தயங்குகிறார்.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, எட்டுவழிச் சாலைகளை எதிர்த்தது வரை இப்போதைய திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய போராட்டங்கள் எண்ணில் அடங்கா. ஆனால், அதே அவலங்கள் இன்றைக்கும் தொடரும் நிலையில், அன்றைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்கள் இப்போது குரலெழுப்பத் தயங்குகிறார்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முதன்மையானது முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முகம் கோணாதபடிக்கு அவர்களை அத்தனை இணக்கமாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். எனவே, அந்த இணக்கத்துக்கு பிணக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.

2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வரைக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முகம் வாடிவிடாமல் பங்கீட்டுப் பிரச்சினைகளைப் பேசிமுடித்தார் ஸ்டாலின். இதனால் சொந்தக் கட்சிக்குள் தனக்கு நேர்ந்த சங்கடங்களையும் சகித்துக் கொண்டார். இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இந்தக் கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விரும்புகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பாஜகவை தொட்டு நிற்பதால் அதிமுக பக்கம் சாய்வதற்கும் சாத்தியமில்லாத சூழலில் திமுக கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. அதனால், மனதில் பட்டதை பளிச்செனப் பேசியோ, கருத்துச் சொல்லியோ திமுகவையும் பகைத்துக் கொள்ள இப்போதைக்கு அவர்கள் யாரும் தயாரில்லை. எதையாவது சொல்லி, இருக்கும் இடத்தைப் பகைத்துக் கொள்வதைவிட இப்படியே இருந்து திமுக கூட்டணியில் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதில் பெரும்பாலான கட்சிகளின் பிரதான நோக்கமாக உள்ளது.

அடுத்ததாக, கூட்டணிக் கட்சிகளுக்கு தேவையானதை தட்டாமல் செய்து தருவதும் அக்கட்சிகள் அமைதிகாக்க முக்கிய காரணம் என்கிறார்கள். கூட்டணிக் கட்சியினர் கொண்டு வரும் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவமளிக்குமாறு திமுக அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் திமுக தலைமை அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதன் பலனாக கூட்டணித் தோழர்கள் பல இடங்களில் உரிய பலன்களைப் பெற்று வருவதையும் மறுப்பதற்கில்லை.

கூட்டணிக் கட்சிகளின் அமைதிக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்க, புதிய கல்விக்கொள்கையை உருவாக்க, மத்திய அரசின் திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க என இதுவரை அரசின் சார்பில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குழுக்களை அமைப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும் இதையும் தனக்குச் சாதகமாக திமுக அரசு பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தக் குழுக்களில் கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்லாது எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் இயக்கங்களையும், அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விமர்சகர்களையும் அறிவுஜீவிகளையும் அங்கத்தினர்களாக சேர்த்து வருகிறது திமுக அரசு. இதுவும்கூட எதிர்ப்புகளை வாயடைக்கச் செய்யும் வாகான ஒரு அரசியல் தந்திரமே.

இத்தகைய காரணங்களால், அரசின் தவறுகளைக் கண்டிக்க வேண்டிய குரல்கள் ஓய்ந்துபோய் கிடக்கின்றன. அந்த வகையில் திமுக அரசு மிகவும் சாதுர்யமாகவே செயல்படுகிறது. ஆனால், இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே, ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...’ என்ற குறளை திமுக கூட்டணிக் கட்சிகள் மாத்திரமல்ல... திமுகவும் இந்த நேரத்தில் மனதில் கொள்வது அனைவருக்கும் நல்லது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in