
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான தமிழக அரசு ஒரு வெளிப்படையான விசாரணையை விரைந்து மேற்கொண்டு, மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்து விடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தரவேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தது மிகவும் வேதனையை அளிக்கிறது. மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து மாணவியின் பெற்றோரும், சக மாணவர்களும் போராடி வரும் சூழ்நிலையில், நேற்று திடீரென்று வன்முறையாக மாறி இருக்கிறது.
இதில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. காவலர்களும் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளார்கள். இந்த சம்பவம் நடந்து இன்றோடு ஆறு நாட்களாகிறது. தமிழக காவல்துறையோ துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவதால், அனைவருக்கும் நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமைதியான வகையில் சென்று கொண்டு இருந்த போராட்டம், நேற்றைக்கு இந்த அளவுக்கு வன்முறையாக மாறியதற்கு, தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம் என்று அனைவரும் கருதுகின்றனர்.
அதேபோன்று, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் குறுக்கீடு ஏதும் இல்லாத வகையில் தமிழக காவல்துறை ஒரு வெளிப்படையான விசாரணையை செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தந்தால் தான், உயிழந்த மாணவியின் பெற்றோருக்கும், சக மாணவ. மாணவியர்களுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமையும்.
ஒரு தவறைச் சுட்டிக்காட்ட, மற்றொரு தவறு செய்யக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. எனவே, அமைதியான முறையில் சட்டப்படி போராடிதான் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழக அரசு, மாணவச் செல்வங்களின் கல்வியும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, ஜெயலலிதா போன்று இன்றைய ஆட்சியாளர்கள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு ஒரு வெளிப்படையான விசாரணையை விரைந்து மேற்கொண்டு, மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்து விடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தரவேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.