என்.எல்.சி-க்காக தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது ஏன்?- அன்புமணி கேள்வி

அன்புமணி
அன்புமணி என்.எல்.சி-க்காக தமிழக அரசு விளம்பரம் வெளியிட்டது ஏன்?- அன்புமணி கேள்வி

என்.எல்.சி-க்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலப் பறிப்பு சர்ச்சை தொடர்பான என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக (RO No.56/IPRO/Cuddalore/2023) வெளியிட்டிருக்கிறார். என்.எல்.சியின் விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு; கண்டிக்கத்தக்கது.

என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை. என்.எல்.சி-யின் போக்கில் மாற்றமும் இல்லை. மக்களை மதிக்காத என்.எல்.சி-க்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாகத்தான் மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும். ஆனால், மக்கள் விரோத நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தருவது நியாயமற்றது.

என்.எல்.சியின் விளக்கத்தை அதுதான் விளம்பரமாக அளித்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்திற்கென மக்கள் தொடர்பு பிரிவு இருக்கும் நிலையில், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் மக்கள் வரிப் பணத்தில் விளம்பரம் வெளியிடச் செய்ய கடலூர் ஆட்சியர் என்.எல்.சியின் விளம்பர முகவர் அல்ல.

டெல்லி அரசு விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததற்காக அம்மாநிலத்தின் ஆளும் கட்சியிடமிருந்து ரூ.163.62 கோடியை வசூலிக்க டெல்லி அரசின் குழு ஆணையிட்டது. என்.எல்.சி விவகாரத்திலும் அது தான் நடந்துள்ளது; டெல்லி நடவடிக்கை கடலூருக்கும் பொருந்தும்.

என்.எல்.சி-க்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in