அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஏன்?

முதல்வருக்கு கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

நீட் தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்த நிலையில், "நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டணத்தை பாஜக புறக்கணிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், திடீரென அதிமுகவும் இன்று புறக்கணித்துவிட்டது. இது நீட் வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், "நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தங்களின் 3.2:2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில் மருத்துவக் கல்வியில் சேருவதற்கான தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடியினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, ஆளுநர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில் இது தொடர்பாக 5.2.2022 அன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

'நீட் தேர்வு ரத்து ' குறித்த அதிமுக கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும், 08.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in