சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயண தேதி மாற்றம் ஏன்?

சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயண தேதி மாற்றம் ஏன்?

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி எடப்பாடி அணி, ஓ.பி. பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். அதே ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த சமயத்தில் இரு துருவங்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வமும் இணைந்தனர். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவில் இருந்து சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சூழலில் நான்காண்டு சிறைவாசத்திற்குப் பின் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா வெளியே வந்தார். அவர் வருகைக்குப் பின் அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழவும் என அரசியல் விமர்சகர்கள், எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத சசிகலா, அதிமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை சந்திப்பது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஓபிஎஸ் மனைவி இறப்புக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இச்சூழலில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் முன் ஓபிஎஸ் ஆஜராகி ஜெ., மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

ஆரம்பத்தில் சந்தேக புயலை கிளம்பிய ஓபிஎஸ் ஆணையம் முன் அந்தர் பல்டி அடித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் ஜெ., மறைவுக்குப் பின் சசிகலாவுக்கு நேர் எதிராக நின்ற ஓபிஎஸ் தற்போது சசிகலா மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் தெரிவித்தார்.

பதிலுக்கு ஜெ., மரணம் தொடர்பாக ஆணையம் முன் ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு சசிகலா ஆதரவு தெரிவித்துப் பேசினார். இது ஒருபுறம் இருக்க கடந்த மாதம் முதல் சசிகலா ஆன்மீக சுற்றுப் பயணம் என்ற ரீதியில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு சசிகலா ஆன்மிக சுற்றுப் பயணம் வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் ஏப்ரல் 7-ம் தேதிக்கு அவரது சுற்றுப் பயணம் மாற்றப்பட்டது. இந்தப் பயணமும் தற்போது ஏப்ரல் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருச்சிக்கு வான் மார்கமாக வரும் சசிகலா அதன் பின் அங்கிருந்து நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக எடப்பாடிக்கு சாலை மார்கமாக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதனால் சசிகலாவின் ஆன்மிக சுற்றுப் பயணம் இருமுறை மாற்றப்பட்டது என்ற குழப்பம் அதிமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், "சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 8-்ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதன்காரணமாக அவரது சேலம் சுற்றுப்பயணத் தேதி ஏப்ரல் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in