காங்கிரஸில் இணையவில்லை: பிரசாந்த் கிஷோர் பின்வாங்கியது ஏன்?

காங்கிரஸில் இணையவில்லை: பிரசாந்த் கிஷோர் பின்வாங்கியது ஏன்?

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவாரா என அரசியல் வட்டாரங்களில் உருவாகியிருந்த எதிர்பார்ப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. காங்கிரஸில் தான் இணைவதைவிடவும், கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றம் தேவை என்பதையே வலியுறுத்துவதாகச் சொல்லி பின்வாங்கிவிட்டார் பிரசாந்த் கிஷோர். இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் அலசப்படுகின்றன.

ஐ-பேக் நிறுவனத்துடன் தனக்குத் தற்போது நேரடித் தொடர்பு இல்லை என்கிற ரீதியில் பிரசாந்த் கிஷோர் பேசிவந்தாலும், ஹைதராபாதில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியுடன் ஐ-பேக் ஒப்பந்தம் செய்துகொண்டபோது அவரே நேரடியாகச் சென்றிருந்தது காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தியடையச் செய்துவிட்டது.

கட்சியில் முழு நேரமாகச் செயல்படும் வகையில் செயல் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்றும் அவர் முன்வைத்த யோசனைக்கு ஆதரவு கிட்டவில்லை.

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நாட்டிலேயே மிகச் சிறந்தவர் என்றாலும், அரசியல் தலைவராக பிரசாந்த் கிஷோர் தன்னை இதுவரை நிரூபிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தபோது அரசியல் ரீதியாக அவரால் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்ய முடியவில்லை,

கட்சியில் எந்தப் பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தாலும், காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி வேண்டும் என அவர் கேட்டதாகப் பேசப்பட்டது. சோனியா காந்திக்கு மட்டுமே விளக்கம் அளிக்கும் அளவுக்குத் தனக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் விரும்பியதாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் வியூக வகுப்பாளர் என்பதைத் தாண்டி, கட்சிக்குள் அவரைச் சேர்ப்பது குறித்து காங்கிரஸார் மத்தியில் கருத்து வேறுபாடு அதிகரித்தது. காங்கிரஸ் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திரிணமூல் காங்கிரஸுக்கு மடைமாற்றும் வேலைகளையும் அவர் தொடர்ந்து செய்துவந்தார். அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததை வரவேற்றதையும் காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமல்ல, அமித் ஷா கேட்டுக்கொண்டதால்தான் ஐக்கிய ஜனதா தளத்தில் பிரசாந்த் கிஷோரைச் சேர்த்துக்கொண்டதாக நிதீஷ் குமார் கூறியதையும் பலர் சுட்டிக்காட்டினர். எனவே, பிரசாந்த் கிஷோரின் வருகையின் பின்னணியில் பாஜக இருக்குமோ என்றுகூட சந்தேகித்தனர் சில காங்கிரஸ் தலைவர்கள். சித்தாந்த ரீதியாக பிரசாந்த் கிஷோருக்கு எந்த வியூகமும் இல்லை. கள யதார்த்தங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்ற வகையில் வியூகங்களை உருவாக்குவதுதான் அவரது பாணி. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ராகுல் காந்தி அதிக ஆர்வம் காட்டவில்லை. சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும்தான் ஆர்வத்துடன் இருந்தனர்.

சோனியா காந்தி குடும்பத்தினர் தவிர வேறொருவர் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்பது பிரசாந்த் கிஷோரின் கருத்து. பாஜகவைப் பொறுத்தவரை பிரதமராக மோடி இருக்கும் நிலையில், கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா இருக்கிறார். கட்சிப் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பு என இரண்டும் தனித்தனியாக இருப்பது இரண்டிலும் கவனம் செலுத்த வழிவகுக்கிறது. இதையெல்லாம் முன்வைத்துதான் அப்படி ஒரு பரிந்துரையை பிரசாந்த் கிஷோர் முன்வைத்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை அதில் ஆர்வம் காட்டவில்லை.

கட்சியில் ஒட்டுமொத்தமாக மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பிரசாந்த் கிஷோரின் எண்ணம். ஆனால், காங்கிரஸ் தலைமையும் சரி, இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரி அதை முழு மனதுடன் ஏற்க முன்வரவில்லை. பிரசாந்த் கிஷோர் முன்வைத்த யோசனைகள் தங்களை ஓரங்கட்டிவிடும் எனப் பல மூத்த தலைவர்கள் கருதினர். படிப்படியான மாற்றங்களைச் செய்து பழக்கப்பட்டுவிட்ட காங்கிரஸ் கட்சியில் தடாலடி மாற்றங்களைப் பரிந்துரைக்கும் பிரசாந்த் கிஷோரின் யோசனைகள் பெரிய அளவில் ரசவாதத்தை ஏற்படுத்திவிடவில்லை.

2017 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்குத் தேர்தல் வியூகம் அமைத்துத் தந்தது பிரசாந்த் கிஷோர்தான். ஆனால், அந்தத் தேர்தலில் அக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் அவர் முன்வைத்த பல யோசனைகள் எடுபடவில்லை என்பதுடன், பலவற்றை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் முன்வரவில்லை. எனவே, இந்த முறை தனக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றே அவர் விரும்பினார். அந்தத் தேர்தலில் தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச் சந்திப்புகளில், காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகம் அமைப்பது குறித்துதான் முக்கியமாகப் பேசப்பட்டது. கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவது என்பது இரண்டாம்பட்சம்தான். ஆனால், கட்சியில் அவர் இணைவாரா என்பது குறித்து காங்கிரஸ் ஏற்படுத்திய பரபரப்புதான் எதிர்மறை விளைவுக்கு வித்திட்டிருக்கிறது.

Related Stories

No stories found.