மு.க.அழகிரி மீது அவதூறு வழக்கு தொடராதது ஏன்?- டி.ஆர்.பாலுக்கு அண்ணாமலை கேள்வி!

அண்ணாமலை
அண்ணாமலை

''2014-ம் ஆண்டு மு.க.அழகிரி செய்தியாளர் சந்திப்பின் போது டி.ஆர்.பாலு எவ்வளவு ஊழல் செய்துள்ளார், சேதுசமுத்திரம் திட்டத்தின் வாயிலாக எவ்வளவு சம்பாதிக்க இருக்கிறார் என்பது எனக்கு தெரியும் என கூறியிருந்தார். அவர் மீது ஏன் டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தொடுக்கவில்லை'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை பாஜக சார்பாக திமுக ஃபைல்ஸ் வெளியிட்டது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அண்ணாமலை நேரில் ஆஜராகினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டிய நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளேன்.

திமுக ஃபைல்ஸ்1 வெளியிட்டது ஆளுங்கட்சியில் பல பேருக்கு கோபத்தை மூட்டியுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்கள். பாஜகவின் ஊழல் எதிர்ப்பிற்கான போராட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. வாய் பேச்சு, அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளேன்.

நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள சத்திய பிரமாணத்தில் அவர் ஏகப்பட்ட பொய்களைக் கூறியுள்ளார். 2004 முதல் 2009 வரை ஊழல் அதிகமாக செய்ததால் தான் 2009 கேபினேட்டில் அவருக்கு இடமில்லாமல் போனது. 2014-ம் ஆண்டு மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர் சந்திப்பின் போது டி.ஆர்.பாலு எவ்வளவு ஊழல் செய்துள்ளார், சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முயற்சி செய்தார் என்பதெல்லாம் தெளிவாக கூறினார். அவர் மீது ஏன் எந்தவிதமான அவதூறு வழக்கையும் இவர் தொடுக்கவில்லை.

10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து எப்படி வந்தது என கேள்வி எழுப்பியிருந்தோம். டி.ஆர்.பாலு தாக்கல் செய்துள்ள சத்திய பிரமாணத்தில் எல்லாவற்றையும் மறைத்து நீதிமன்றத்தையே அவமதித்துள்ளனர். பல பொய்களை அதில் கூறியுள்ளார். வரும் காலத்தில் திமுக ஃபைல்ஸ் சொல்லப்பட்டக் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிப்பேன்.

தமிழகத்தில் மூன்றாம் தலைமுறைக்கும் முதல் தலைமுறைக்கும் சண்டை நடக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் முதல் தலைமுறை சொந்தங்கள் எங்களோடு இணைய வேண்டும். திமுக ஃபைல்ஸ் பாகம் 2 பாத யாத்திரைக்கு முன்பாக வெளியிடப்படும். திமுக அமைச்சர்கள் அனைவரும் பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்குகின்றனர். திமுக ஃபைல்ஸ் பாகம் 2 ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in