முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பேசிய மோடி பிரதமரானதும் மாநிலங்களை மறந்தது ஏன்?

-கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பேசிய மோடி பிரதமரானதும் மாநிலங்களை மறந்தது ஏன்?
மு.க.ஸ்டாலின்

இன்று (பிப்.11) மாலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் காணொலி மூலமாக சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு, குமரி பகுதியில் கோட்டாறு என்ற ஊரில் சுயமரியாதை வாசகசாலை தொடங்கப்பட்டது. வைக்கம் சென்று போராடிய பெரியார், குமரி வட்டாரத்தில் உள்ள சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று தென் எல்லையில் போராட்டம் நடந்தபோது, பேரறிஞர் அண்ணா அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்.

தென் எல்லைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் “நாகர்கோவில் மாவட்டச் செயலாளரான ஜான் அவர்களுக்கு முழு அதிகாரம் தருகிறேன்” என்று பேரறிஞர் அண்ணா அறிவித்தார். தென் எல்லைப் போராட்டத்தை ஆதரிக்க நாகர்கோவிலுக்கே அண்ணா வருகை தந்தார். தொடர் மறியலில் இறங்கியது திமுக. 1954-ம் ஆண்டில் நடந்த மறியலில் 110 திமுகவினர் கைதானார்கள். மரியாதைக்குரிய தலைவர் மார்ஷல் நேசமணி கைதானபோது அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக மாநாட்டில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

சமத்துவத்தைப் போதிக்கும் - மனிதத்தைப் போற்றும் – திருக்குறளை உலகத்துக்குக் கொடையாக வழங்கிய திருவள்ளுவருக்கு, இந்தியத் துணைக்கண்டத்தின் தொடக்கமான குமரிக் கடல் முனையில் 133 அடியில் அழகிய கலைநயத்துடன் கம்பீரமாக சிலைவைத்து, இந்தியத் துணைக்கண்டத்தை திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் கலைஞர். சமத்துவத்தைப் போதித்த வள்ளுவருக்கு ஆதிக்கச் சக்திகள் கறைபூச நினைத்தாலும் அவர்களைத் தன் கருத்துகளால் அம்பலப்படுத்தித் தமிழ்நாட்டின் அரணாய் உயர்ந்து விளங்குகிறார், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் அய்யன் வள்ளுவர்.

கடலோரத்தில் கட்டிடம் கட்டத் தடை இருந்த காரணத்தால் அன்றைய ஒன்றிய அரசுடன் போராடிப் பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர். மார்ஷல் நேசமணியைப் போற்றும் வகையில் நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பில் மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தோழர் ஜீவானந்தத்துக்கு நாகர்கோயிலில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இவை மட்டுமா, இன்னும் எத்தனையோ சாதனைகளை இந்தக் குமரி மாவட்டத்துக்காகச் செய்து தந்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமானால்…

குளச்சல், தேங்காய்ப்பட்டணம் பகுதிகளில் அரசு சார்பில் மீன்பிடி துறைமுகங்கள் 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராக இருந்த நானே அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தேன். ஆரால்வாய்மொழிப் பகுதியில் பொய்கை அணைத் திட்டம் உருவாக்கப்பட்டது.

புத்தேரி மேம்பாலம் அமைத்தோம். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் மையம் அமைத்துத் தந்தோம்.

இப்படி பல்வேறு நலத்திட்டப் பணிகளை குமரி மாவட்டத்தில் செய்து கொடுத்த திமுக ஆட்சி, இப்போது அமைந்த குறுகிய காலத்தில், 21 ஆண்டுகளாகத் திறக்கப்படாத பொய்கை அணை, வேளாண் பாசனத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இணைப்புக் கடல்சார் பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா நடத்திட அனுமதி அளித்து, 85 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் சேர்த்து நகராட்சியாக ஆக்கப்பட்டுள்ளது.

குலசேகரம் - அருமநல்லூர் - நாகர்கோவில் இடையே புதிய பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் இயக்கப்படாமல் இருந்த தென் தாமரைக்குளம் முதல் நாகர்கோவில் வரையிலான பேருந்து இயக்கப்பட்டது.

இப்படி, பல்வேறு பணிகளை இந்தக் குமரி மாவட்டத்துக்குச் செய்தோம் - செய்தும் வருகிறோம்.

மழை - வெள்ளம் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும்பாதிப்பை அடைந்திருந்த நிலையில், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்க விரைவில் நிதி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை நாம் கேட்ட நிவாரண நிதி வரவில்லை. எப்போது முழுவதுமாக வழங்குவார்கள் என்பதும் தெரியவில்லை! மழை வெள்ள நிவாரண நிதி மட்டுமல்ல, நாம் கேட்ட எந்தப் பேரிடர் நிவாரண நிதியையும் இதுவரை முழுதாகத் தரவில்லை.

திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார். இந்தத் தேசத்துக்காகப் போராடிய தலைவர்களுக்கு நாங்கள் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது போல நடிக்க வேண்டாம். நீங்கள் உண்மையிலேயே கவலைப்பட வேண்டியதெல்லாம் – மக்களையும் நாட்டையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட வேண்டும்.

மாநில அரசுகளின் நிதி உரிமையை முழுக்க முழுக்க இவர்களே விழுங்கி ஏப்பம்விடப் பார்க்கிறார்களா? பறிக்கப் பார்க்கிறார்களா? பிறகு, மாநிலங்கள் தங்கள் அரசுகளை எப்படி நடத்துவது? மாநிலங்கள் தங்கள் மக்களை எப்படிப் பாதுகாப்பது?

மாநிலங்களோட உரிமைகளைப் பறிக்க நினைப்பது மூலமாக - எதைச் சாதிக்க நினைக்கிறீர்கள்? நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்துவிட்டுத்தானே இப்போது பிரதமராக ஆகியிருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளைப் பற்றி நீங்களும் பேசினீர்களே!?- இப்போது மறந்துவிட்டீர்களா!

இலங்கைக் கடற்படை தொடர்ந்து தனது அத்துமீறலை நடத்தி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 205 மீன்பிடி படகுகள் அவர்கள் வசம் உள்ளது. இதை ஏலம் விடப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதைத் தடுக்க வேண்டிய கடமை ஒன்றிய பாஜக அரசுக்கு இருக்கிறது. கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் குடிமக்கள்தானே?

இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கண்டிட, தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இதுபோன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாவதைத் தடுத்திட இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான, கொந்தகை – அகரம் - மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை, இன்று காலையில் நான் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தேன்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும். தமிழர்களின் நாகரிகச் சிறப்பை உலகுக்கு அறிவியல்வழி நின்று உணர்த்த வேண்டும். அதற்கான பணிகள்தான் இவை. இதனால்தான், திமுக அரசு என்பது ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமல்ல – ஓர் இனத்தின் ஆட்சி என்று குறிப்பிடுகிறேன்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி கொடுத்த பதில் - காஷ்மீர் வரைக்கும் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

எனவே, சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழியுணர்வு - பொதுவுடைமை ஆகியவை சங்கமித்துள்ள குமரி மக்களிடம், ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்று ஆதரவு கேட்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் - இந்த ஆட்சிக்கும் உங்களது ஆதரவை நீங்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாகக் காட்டுங்கள்; நமது கழக வேட்பாளர்களுக்குப் பேரறிஞர் பெருந்தகை கண்ட வெற்றிச் சின்னமாம் உதயசூரியனிலும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்குகளை வழங்கி மிகப் பெரிய வெற்றியைத் தாரீர் என்று உரிமையோடு கேட்டு,

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

-என்கிற திருக்குறளைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Related Stories

No stories found.