அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்குவதே இலக்கு!

மறுபடியும் கட்சி மாறிய மருத்துவர் சரவணன் அதிரடி பேட்டி
சரவணன்
சரவணன்

பாஜக-வைக் கைகழுவிய முன்னாள் எம்எல்ஏ-வான சரவணன் மீண்டும் திமுகவில் ஐக்கியமாவார் என பலரும் ஆரூடம் சொன்ன நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். மதிமுக, திமுக, பாஜக என பயணித்து இப்போது அதிமுக பக்கம் ஒதுங்கியிருக்கும் சரவணனிடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.

திமுகவில் ஐக்கியமாகலாம் என்றார்களே... திடீர் என அதிமுக பக்கம் வண்டியைத் திருப்பி விட்டீர்களே! என்ன காரணம்?

2023 புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்த புதுவருடத்தில் நல்ல ஒரு அரசியல் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடரவேண்டும் என விரும்பினேன். அதில் எனக்கு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மிகவும் பிடித்து இருந்தது. திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ரேகை தெரிகிறது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்கள் செய்யவில்லை. மாதம் தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் எனச் சொல்லிவிட்டு அதையும் செய்யவில்லை. மாறாக, மின்கட்டணத்தையும் உயர்த்திவிட்டார்கள்.

தாலிக்குத் தங்கம், அம்மா கிளினிக் என முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டார்கள். எத்தனையோ பொருளாதாரச் சிக்கலுக்கு நடுவிலும் இதை அதிமுக செய்துவந்தது. எளிய மனிதராகவும், எளிதில் அணுகக் கூடிய மனிதராகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதுவும் எனக்கு அவர்மேல் ஈர்ப்புவரக் காரணம். என்னைப் பொறுத்தமட்டில் திராவிடச் சிந்தனை கொண்டவன். அதனால் அதிமுகவில் இணைந்தேன். திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டும்தான்!

சரவணன் பாஜகவில் இருந்த தருணத்தில்...
சரவணன் பாஜகவில் இருந்த தருணத்தில்...

பாஜகவில் இருந்து நீங்கள் முதலில் வெளியேறினீர்கள். தொடர்ந்து திருச்சி சூர்யா, காய்த்ரி ரகுராம் என வெளியேறுவோர் பட்டியல் நீள்கிறது. பாஜகவில் என்னதான் நடக்கிறது?

தேசியத்தையும், ஆன்மிகத்தையும் ஒருசேர இணைக்கும் இயக்கம்தான் பாஜக. அது அவர்களின் கட்சிக் கொள்கை. அந்த சிந்தாந்தத்தில் இருப்பவர்கள் அங்கு பயணிப்பது எளிது. நான் தொடக்கத்தில் இருந்தே திராவிட சிந்தனை கொண்டவன். அதனால் என்னால் அங்கு பயணிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் ராணுவ வீரர் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தது. மாவட்ட தலைவராக இருந்ததால் அதற்கு காரணமே இல்லாமல் பொறுப்பேற்கும் அவசியம் இருப்பதால் தான் வருத்தம் தெரிவித்துவிட்டு வந்தேன். அதன்பின்பு பாஜகவில் இருந்து ஒதுங்கினேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திராவிடச் சிந்தனையைச் சுமப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், தேசிய கட்சியான பாஜகவுக்கு அதிமுகதானே தமிழகத்தில் முகவரி கொடுக்கிறது?

பாஜகவின் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம். அதிமுகவினர் இதில் எந்தத் தவறும் செய்யவில்லை. கூட்டணி வைத்திருப்பதைக் குற்றமாகச் சொன்னால் திமுகவும்கூட பாஜகவோடு கூட்டணி வைத்த காலமும் இருந்தது தானே? திமுக செய்யும் இந்து விரோத அபத்தமான அரசியலை, ஆன்மிகத்தைப் பேசும் பாஜகவினர் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

நீங்கள் அதிமுகவில் இணைந்தபோது மதுரை மாவட்ட அதிமுக புள்ளிகள் இல்லையே... அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். அதை இந்த மதுரை மண்ணில் கட்டிக்காத்ததில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் ஆசியோடு தான் அதிமுகவில் இணைந்தேன். நான் சென்னையில் இருந்தேன். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்போது சென்னையில் இருந்தார். இதனால் உடனே இணைந்துவிட்டேன். இந்த மாத இறுதியில் மதுரையில் மிகப்பெரிய இணைப்பு விழாவை நடத்த உள்ளேன். அதில் 50 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க பணிசெய்து வருகிறேன். அதற்கும் இம்மாவட்ட முன்னோடிகளிடம் ஆசி வாங்கிவிட்டேன்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நடிகர், மருத்துவர், அரசியல்வாதி என பல தளங்களில் எப்படி இயங்குகிறீர்கள்?

மக்களுக்கு சேவை செய்வதுதான் இலக்கு. மருத்துவத்துறையில் அது சார்ந்த உதவிகளை மக்களுக்குச் செய்கிறேன். அதில் மன நிறைவு கிடைக்கிறது. இதற்காகவே ‘சூர்யா தொண்டு நிறுவனம்’ என்னும் அமைப்பை வைத்திருக்கிறேன். அதன்மூலம் ஏழைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறேன். எல்.கே.ஜி படிக்கும்போதே டாக்டராகி ஏழைகளுக்கு உதவுவேன் எனச் சொன்னவன் நான். எளிய குடும்பத்தில் இருந்து மருத்துவராகும் கனவோடு வந்தவன். அதன் அடுத்தகட்டமாகத் தான் அரசியல் நோக்கி நகர்ந்தேன். இதன்மூலம் அதிகம்பேருக்கு உதவமுடிகிறது. சினிமா ஒரு கனவு உலகம். சினிமாவில் நடிப்பது மிக எளிது. நிஜ வாழ்வில் நேர்மையாளனாக நடப்பதுதான் கஷ்டம். அதைப் பின்பற்றியும் வருகிறேன். அதை மதுரை மக்கள் அறிவார்கள்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் உங்களை இணைக்க விரும்பினார். ஆனால், மதுரை திமுக நிர்வாகிகள் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் என்று சொன்னார்களே?

அதிமுகவில் சேர்ந்ததற்கு வாழ்த்து செய்திதான் அதிகம் வருகிறது. நீங்கள்தான் இப்படிக் கேட்கிறீர்கள். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை நன்கு படித்தவர். அவர், “கட்சியில் சேருங்கள், பேட்டி கொடுங்கள்” என எதுவுமே, எப்போதுமே சொன்னதில்லை. அவரைச் சந்தித்தேன். ஒரு குவளை காபி குடித்தேன். பாஜக மாவட்டத் தலைவராக இருந்ததால், பாஜகவினரின் காலணி வீச்சுச் சம்பவத்துக்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என அவரிடம் விளக்கினேன். அந்தச் சந்திப்பு அவ்வளவுதான்.

டாக்டர் சரவணன்.
டாக்டர் சரவணன்.

மதிமுக, திமுக, பாஜக, இப்போது அதிமுக என மிகக் குறுகிய காலத்தில் இத்தனை கட்சிகள் மாறிவிட்டீர்களே... கூச்சமாக இல்லையா?

நான் இத்தனை கட்சி மாறியதால் யாருக்காவது கஷ்டம், இடைஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா? இல்லைல்ல... ஒவ்வொரு இயக்கமாக மாறி நான்கு குவாரி வைத்து ஒப்பந்தம் எடுத்தார் என்றோ, நில அபகரிப்பு செய்தார் என்றோ எதாவது குற்றச்சாட்டு இந்த டாக்டர் மீது இருக்கிறதா? இல்லவே இல்லை. நான் சுயமரியாதைக்காக கட்சி மாறினேன். மதிமுகவில் இருக்கும் போது சுயமரியாதைக்கு சிறு இழுக்கு வந்ததும்தான் திமுகவுக்கு வந்தேன். நான் சுயநலத்துக்காக எப்போதும் கட்சி மாறியது இல்லை.

சுயமரியாதையோடு பிடித்த இயக்கத்தில் மக்களுக்கு சேவை செய்வது தான் என் மனதுக்குப் பிடித்த விஷயம். இன்று கொள்கை சார்ந்த அரசியலை விட கூட்டணி அரசியல் தான் ஜெயிக்க வைக்கிறது. வெற்றி என்னும் ஒற்றைக்கோட்டை சுற்றியே கூட்டணிக் கணக்குகளும் உள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டத்தில் தான் கட்சிகளே இயங்குகின்றன. அதனோடு ஒப்பிட்டால் அரசியல் வாழ்வில் நான் யாருக்கும் எவ்வித இடைஞ்சலும் செய்யவில்லை. அரசியலில் இருந்து சம்பாதிக்கவும் இல்லை. முடிந்த உதவிகளை எளியவர்களுக்கு செய்வதன் களமாகத் தான் அரசியலைப் பார்க்கிறேன்.

திமுகவில் சேர்ந்த மறு வருஷமே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகொடுத்தார்கள். கடந்த தேர்தலில் பாஜகவில் சேர்ந்த மறுநாளே சீட் கிடைத்தது. அதிமுகவிடமும் சீட்டை உறுதி செய்துவிட்டீர்களா?

எல்லாமே இயற்கையின் போக்கில் நடந்தவைதான். மருத்துவராக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நன்கு அறிமுகம் ஆகியிருக்கிறேன். பாஜகவில் சீட் வாங்கியபோது டெப்பாசிட் போய்விடும். நோட்டோவோடு போட்டி போடும் கட்சி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நான் 52 ஆயிரம் வாக்குகள் வாங்கினேன். அதற்கு தனிப்பட்ட என் செல்வாக்கும் காரணம். அதுதான் எனக்குக் குறுகிய காலத்தில் திமுக, பாஜக சீட் கொடுக்கவும் காரணம்.

அதிமுக ஆட்சியில் திமுக எதிர்கட்சி வரிசையில் இருந்தபோதே இடைத்தேர்தலில் ஜெயித்தேன். அதிமுகவில் இணைந்தபோது தேர்தல் சீட் தொடங்கி எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. புதுவருடம் வரும்போது புதிய தொடக்கமாக அதிமுகவில் இணைந்துள்ளேன். எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்குவதே இலக்கு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in