திமுகவில் இணைந்தது ஏன்?- காரணத்தைப் பட்டியலிட்ட பாஜக நிர்வாகி

பாஜகவின் தமிழக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன்
பாஜகவின் தமிழக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன்திமுகவில் இணைந்தது ஏன்?- காரணத்தைப் பட்டியலிட்ட பாஜக நிர்வாகி

அண்ணாமலை மீதான அதிருப்தியில் பாஜகவின் தமிழக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

அதேநேரம் திமுகவில் இணைந்த கையோடு மத்திய பாஜக அரசின் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கியுள்ளார் சிவபாலன். குமரி மாவட்ட பாஜகவில் சிவபாலன் மிகவும் தீவிரமாக இயங்கி வந்தவர் என்பதால் இது பாஜக வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் குமரி மாவட்ட பாஜகவில் முக்கியப்புள்ளிகளில் ஒருவராக வலம் வந்த பாஜக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன் அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து இன்று திமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த சிவபாலன், “திமுக சமூகநீதி, மதச்சார்பின்மை என அனைவருக்குமான பாதையில் பயணிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகுகின்றது. ஜி.எஸ்.டி வருவாயில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகநிதியை ஒதுக்கிவிட்டு தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்குகின்றார்கள். தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசியல் செய்கிறது.

அண்ணாமலை மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதை விட்டுவிட்டு மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படும்வகையில் பேசிவருகிறார். பாஜக தொடர்ந்து சாதி, மதம், மாநிலம் ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும்வகையில் கருத்துகளை வெளியிடுவதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். நான் பாஜகவில் இருபது ஆண்டுகளாக வேலைசெய்து இருக்கிறேன். இளைஞரணியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தேன். அண்ணாமலை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் மெச்சும்படி உள்ளது. அமைச்சர் மனோதங்கராஜின் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால் திமுகவில் இணைந்தேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in