முற்றும் ஆளுநர் - முதல்வர் மோதல்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

முற்றும் ஆளுநர் - முதல்வர் மோதல்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-க்களின் கோஷம், மசோதாக்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலவரையறை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி-யான வில்சனின் தனித் தீர்மானம், கேரளத்தில் சிபிஎம் மாநாட்டில் ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினே கொந்தளித்தது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளுங்கட்சியான திமுக அஸ்திரங்களை ஏவிவருகிறது. இதன் அடுத்த கட்டமாகத் தமிழ்ப் புத்தாண்டையொட்டியும் ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலைத் திறப்பையும் முன்வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது. இதன்மூலம் தமிழக ஆளுநர் - முதல்வர் இடையேயான மோதல் பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. இந்த மோதல் எங்கு போய் முடியும்?

திமுக புறக்கணிப்பு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக சட்டப்பேரவையில் உள்ள கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அன்றே திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மமக ஆகிய கட்சிகள், ‘நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக சட்டப்பேரவையை மதிக்காத ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று கூறி அதிரடித்தன. இதன் மூலம் ஆளுங்கட்சியான திமுக என்ன முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேநீர் விருந்திலும் பாரதியார் சிலைத் திறப்பு விழாவிலும் பங்கேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் சிலைத் திறப்பு கல்வெட்டில் முதல்வர் ஸ்டாலின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதனால், முதல்வரும் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளின் புறக்கணிப்பு அறிவிப்புதான் திமுகவை யோசிக்க வைத்ததாகச் சொல்கிறார்கள் திமுகவில்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு நீட் உள்ளிட்ட சட்டப்பேரவை தீர்மானங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை ஆளுநரிடம் பேசுவது என்றும் ஆளுநர் அளிக்கும் பதிலைப் பொறுத்து நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்தது. அதன் அடிப்படையில்தான் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஏப்ரல் 14 அன்று ஆளுநரைச் சந்தித்தார்கள்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், “நீட் மற்றும் கூட்டுறவுச் சங்க மசோதாக்களுக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும்? எனக் கேட்டோம். அதற்கு ஆளுநர், இந்த மசோதாக்கள் என்னுடைய பரிசீலனையில் இருக்கின்றன என்று பதிலளித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உத்தரவாதத்தையோ கால வரையறையையோ அவர் சொல்லவில்லை. ஆளுநரின் நடவடிக்கை, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வகையிலும் சட்டமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. இந்த சூழலில், ஆளுநர் தரும் தேநீர் விருந்தில் நாங்கள் கலந்துகொள்வது தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்பதால் அதைப் புறக்கணிக்கிறோம்” என்று அதிர வைத்தார்கள்.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பை முதல்வர் அறிவிக்கவில்லை. மாறாக, ஆளுநர் பதில் சாதகமாக இல்லையென்றால், புறக்கணிப்பு தகவலை மீடியாக்களிடம் ராஜ்பவன் வாசலிலேயே சொல்லும்படி அமைச்சர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

கோபத்தில் ஆளுநர்?

மேலோட்டமாகப் பார்த்தால் நீட் தேர்வு மசோதாவை இரண்டாம் முறையாக அனுப்பியும் ஆளுநர் ஆர்.என். ரவி, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததால் ஆளும் திமுகவுக்கு கோபம் என்று தெரியலாம். ஆனால், நீட் தேர்வு மசோதா மட்டுமல்ல, பாரதியார் பல்கலைக்கழக மசோதா, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பொதுத்தமிழை சேர்க்க வகை செய்யும் திருத்த மசோதா, மாநில சட்ட ஆணைய பரிந்துரை மற்றும் சில சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை அரசே நியமிக்க வழிசெய்யும் மசோதாக்கள் என மேலும் 11 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இதில், 3 மசோதக்கள் மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்டவை. எஞ்சிய 8 மசோதாக்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை. ஆனால், அந்த மசோதக்களுக்கும் அனுமதி கோரி காத்திருக்கிறது திமுக அரசு.

“இரண்டாம் முறையாக அனுப்பப்பட்ட நீட் தேர்வு மசோதா, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை அரசியல் ரீதியிலானவை; சிக்கலானவை என்று ஆளுநர் நினைக்கிறார். துணைவேந்தரை நியமிக்கும் விவகாரம் ஆளுநரின் அதிகாரத்தில் கை வைக்கும் முடிவு என்பதாலும் அதில் எளிதாக முடிவெடுக்க முடியாது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக 5 தீர்மானங்களை நிறைவேற்றியது. இது மத்திய அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் பிடிக்கவில்லை. எனவே, தமிழக ஆளுநருக்கு பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

உயர் கல்வியில் தேசிய கல்வி கொள்கையைப் புகுத்துவது தொடர்பாக தமிழக ஆளுநரை அழைத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். இது திமுகவை உஷ்ணப்படுத்திவிட்டது. மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கையை தமிழகத்திலும் புகுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தமிழக ஆளுநரும் அதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், மாநில அரசோ தமிழகக் கல்வி கொள்கைளை வகுக்க குழு அமைத்து மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் எதிராக காய் நகர்த்துகிறது. உச்சக்கட்டமாக ஆளுநருக்கு எதிராக திமுக எம்பி-க்கள் கோஷம் எழுப்புவது, அவரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வருவது போன்றவவை தனிப்பட்ட முறையில் ஆளுநருக்கு கோபத்தை மூட்டியிருக்கிறது. இப்படி ஆளுங்கட்சி நேரடியாக ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கும் நிலையில், ஆளுநர் தன்னுடைய அதிகாரம் என்ன என்பதை மாநில அரசுக்கு காட்டி வருகிறார். அதன் வெளிப்பாடுதான் இதெல்லாம்” என்கின்றன ஆளுநர் மாளிகை மற்றும் கோட்டை வட்டாரங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் சென்னா ரெட்டி - முதல்வர் ஜெயலலிதா இடையேயான மோதல் பிரசித்திப் பெற்றது. திமுக ஆட்சியைப் பொறுத்தவரை கருணாநிதி ஆட்சியில் ஆளுநருடன் மோதல் என்ற பேச்சு பெரிதாக எழுந்ததில்லை. ஆனால், தற்போதுதான் ஆளுநருடன் நெருடலான உறவை ஆளுங்கட்சியான திமுக எதிர்க்கொண்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியிலேயே ஆளுநர் ஆய்வுக்குச் சென்றது, அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்வது, அரசின் பரிந்துரைக்கு மாறாக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்தது என டீசரைக் காட்டியது ஆளுநர் மாளிகை. இத்தனைக்கும் பாஜகவுடன் இணக்கமாகவும் அனுசரித்தும் சென்ற அதிமுக ஆட்சியிலேயே ஆளுநர் தன் அதிகாரத்தைக் காட்ட முயன்றார். இப்போது பாஜகவை கடுமையாக திமுக எதிர்த்து வரும் சூழலில், ஆளுநரின் செயல்பாடுகளும் ஆளுநர் - மாநில அரசு என்ற அதிகார மோதலுக்கு பாதை அமைத்துக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த மோதல் எங்கே போய் முடியும் என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கிறது.

ஆளுநர் மாற்றப்படலாம்

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாமிடம் பேசினோம். “இந்தியாவில் அரசியல்வாதியாக இருந்து ஆளுநர் ஆவது, அதிகாரியாக இருந்து ஆளுநர் ஆவது, நீதிபதிகளாக இருந்து ஆளுநர் ஆவது என 3 ரகங்கள் உண்டு. உதாரணமாக, ஆளுநர் சென்னா ரெட்டி. அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட மோதல், இப்போது தெலங்கானாவில் தமிழிசையுடன் முதல்வர் பனிப்போர் போன்றவற்றை அவர்கள் ‘நேக்’காகவும் தங்கள் மீது விமர்சனங்கள் எழாதவண்ணமும் கையாள்கிறார்கள். ஆனால், அதிகாரிகளாக இருந்து ஆளுநர் ஆவோருக்கு அந்தப் பயிற்சி கிடையாது. நீதிபதிகளாக இருந்து ஆளுநர் ஆவோர் சட்டத்துக்கு உட்பட்டு சரியாக நடந்துக்கொள்வார்கள். அதிகாரிகளாக இருந்து ஆளுநர் ஆவோருக்கு அந்தப் பிரச்சினை இருப்பதாக பார்க்கிறேன். அரசியல்வாதியாக இருந்து ஆளுநர் ஆவோர் அரசியல்வாதியைப் போலவே விஷயங்களைச் செய்துவிட்டு கடந்துவிடுவார்கள்.

தற்போதைய ஆளுநர் ரவி நாகலாந்தில் இருந்தபோதும் கெட்ட பெயர்தான் இருந்தது. தமிழகத்தில் அதிகார மோதல் என்றால் ஒன்று, ஆளுநரை மாற்ற வேண்டும் அல்லது முதல்வரை மாற்ற வேண்டும். முதல்வருக்கு 5 ஆண்டுகள் பதவி. அதனால், அவரை மாற்ற முடியாது. ஆனால், ஆளுநரை மாற்றலாம். ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. பாஜகவுக்கு 51 சதவீத வாக்குகள் இல்லை. 43 - 44 சதவீத வாக்குகள்தான் உள்ளன. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் அதிகமாக உள்ளனர். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணையலாம். அப்போது மத்திய அரசு எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தைக்கு வரும். அப்போது தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்படலாம்.

மேலும், ஆர்.என். ரவி குடியரசுத் துணை தலைவராக விரும்புகிறார். ஒருவேளை தென்னிந்தியாவைச் சேர்ந்த வெங்கய்ய நாயுடு குடியரசுத் தலைவரானால், வட இந்தியாவைச் சேர்ந்தவருக்கு குடியரசுத் துணை தலைவர் பதவி கிடைக்கும். அதில் 4-5 பேர் போட்டிபோடுகிறார்கள். அதில் ரவியும் ஒருவர். அதனால், ஆளுநர் ரவி தொடர்ந்து தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் நோக்கில் செயல்படுகிறார். மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைவிட ரவி அதிகமாக செயல்படுவதுதான் இங்கே சிக்கல். டி.என்.பி.எஸ்.சி-யில் பொதுத்தமிழை பாடமாக்கும் மசோதாவை நிலுவையில் வைத்திருக்கிறார். இதை அவர் செய்யலாமா? வேண்டுமென்றே இவர் சர்ச்சையை உருவாக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்” என்றார் ஷ்யாம்.

வழக்கமாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தன்று ஆளுநர் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். ஆனால், தமிழ்ப் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்து என்பதே ஆளும் திமுகவுக்கு நெருடலான விஷயம்தான். தை முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு என்பதுதான் திமுகவின் கொள்கை. அப்படியிருக்க, திமுகவை சீண்டும் வகையில்தான் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஆளுநர் தேநீர் விருந்து வைத்தார் என்ற வாதங்களும் முன் வைக்கப்படுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான் ஆளுநர் மாளிகை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரசியல் ரீதியாக ஆளுநர் மாளிகை அடிபடத் தொடங்கி, தற்போது அது ஆளுநர் - முதல்வர் அதிகார மோதலாக வளர்ந்து நிற்கிறது. இது ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் நல்லதல்ல!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in