பில்கிஸ் பானு கேட்கும் சுதந்திரத்தை வழங்கப்போவது யார்?

பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு

இந்தியாவில் துயர் நிறைந்த ஒரு பெண்ணின் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஆய்வாளர்கள் விரும்பினால் பில்கிஸ் பானுவின் வாழ்கையை தாராளமாக எழுதலாம்.

“நம் நாட்டின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் தன்மையே நம்மை வழி நடத்தும் சக்தி” என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்த நேரத்தில், பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 14 பேரைக் கொன்ற 11 குற்றவாளிகளுக்கு குஜராத் அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது. சரி, யார் இந்த பில்கிஸ் பானு?

எரியும் சபர்மதி ரயில்.
எரியும் சபர்மதி ரயில்.

கோத்ரா ரயி்ல் எரிப்பு

கடந்த 2002 பிப்ரவரி 27-ல் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் தீப்பிடித்து 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர். இதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. 'குல்பர்க் சொசைட்டி' என்று அழைக்கப்படும் குடியிருப்பு வளாகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி-யான இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் முஸ்லிம்களின் 20 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் முஸ்லிம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

குஜராத் கலவரம்
குஜராத் கலவரம்

இந்த நிலையில், அகமதாபாத் அருகே ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கர்ப்பிணியான பில்கிஸ் பானு தனது குடும்பத்தினர் 17 பேருடன் கலவரக்காரர்கள் கையில் சிக்காமல் தப்பி ஒவ்வொரு ஊராக ஓடினார். அப்படியும் பனிவெல் கிராமத்தில் இரண்டு ஜீப்களில் வந்தவர்களிடம் பானு குடும்பம் சிக்கியது.

அந்தச் சம்பவத்தை இப்படி விவரிக்கிறார் பில்கிஸ் பானு: “அவர்கள் எங்களை வாளாலும், தடியாலும் தாக்கினர். என்னுடைய மடியில் இருந்த எனது மூன்று வயது மகளைப் பறித்த ஒருவன், கல்லில் நன்றாக மோதும்படியாக தரையில் வீசி எறிந்தான்”.


தன் கண்முன் குழந்தைக் கொல்லப்படுவதைத் தடுக்க முயன்ற பானுவின் கை, கால்களில் வெட்டினார்கள் கலவரக்காரர்கள். ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கெஞ்சியும், ஈவு இரக்கமின்றி 12 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரசவித்திருந்த பானுவின் உறவுக்காரப் பெண்ணையும் அந்தக் கும்பல் பலாத்காரம் செய்து கொன்றுபோட்டது. பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவரும் இறந்துவிட்டதாக நினைத்து கலவரக்காரர்கள் போய்விட்டார்கள். அதனால் பானு உயிர் பிழைத்தார். அவருடன் இரண்டு சிறுவர்கள் மட்டுமே கொலைக்கும்பலிடமிருந்து உயிர் தப்பினர்.

பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு

நீதியைத் தேடி நெடிய பயணம்

இச்சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில், தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பில்கிஸ் பானு புகார் செய்தார். ஆனால், ஒருவர் பெயர்கூட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. காவல் துறையினர் சிலரே அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர். ஆனாலும், மாவட்ட நீதிமன்றத்தை பானு நாடினார். போதிய சாட்சியங்கள் இல்லையென்று குஜராத் குற்றவியல் நீதிமன்றம், 2003-ம் ஆண்டு இவ்வழக்கை முடித்து வைத்தது.

இதைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பில்கிஸ் பானு அணுகினார். 2004 ஜூலையில் தன்னுடைய வழக்கிற்கு குஜராத்தில் நீதி கிடைக்காது என்று வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடினார் பானு. இதையடுத்து இவ்வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.யு.சால்வி 2008 ஜனவரி 21-ல் தீர்ப்பளித்தார்.


ஆயுள் தண்டனை


பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட 4 கொடிய குற்றங்களைச் செய்த 11 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார் நீதிபதி. இதை எதிர்த்து 11 பேரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல், முக்கிய குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐயும் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. குற்றவாளிகள் 11 பேர் மீதான ஆயுள் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.

விடுதலையானவர்களுக்கு வரவேற்பு...
விடுதலையானவர்களுக்கு வரவேற்பு...

11 பேர் விடுதலை

இந்நிலையில், இவ்வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்த குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432, 433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, குஜராத் அரசு, பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஏகமனதாக முடிவெடுத்தது. அதன்படி, 11 ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய குஜராத் அரசு, தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை சுதந்திர தினத்தில் விடுதலை செய்தது. ஆட்சியர் சுஜல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 2 பாஜக எம்எல்ஏ-க்களும் இடம் பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது.


பில்கிஸின் கோரிக்கை


குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதுமே பில்கிஸ் பானு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எனது குடும்பத்தையும், என் வாழ்க்கையையும் சீரழித்து, என்னிடமிருந்து எனது 3 வயது மகளைப் பறித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட விடுதலை செய்யப்பட்டனர் என்று கேள்விப்பட்டேன். அது முதல் நான் இன்னும் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். ஒரு பெண்ணுக்கான நீதி இப்படித்தான் முடிவடைய வேண்டுமா? நான் நமது மண்ணின் உச்சபட்சமாக உள்ள நீதிமன்றங்களை நம்பினேன். ஆனால், 11 குற்றவாளிகளின் விடுதலை என்னிடமிருந்து அமைதியைப் பறித்தது மட்டுமில்லாமல், நீதியின் மீதான எனது நம்பிக்கையையும் அசைத்துவிட்டது.

என்னிடம் உள்ள சோகங்களும், நான் வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கானது மட்டுமல்ல... நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கானது. குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுப்பது இதுதான். தயவுசெய்து இந்த விடுதலை உத்தரவை திரும்பப் பெறுங்கள். அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனக்கான உரிமையை, சுதந்திரத்தைத் திருப்பிக் கொடுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள்’ என்று கேட்டிருந்தார்.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

நாட்டிற்கு நல்லதல்ல

பில்கிஸ் பானுவின் குரலுக்கு வலுசேர்ப்பது போல காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் 11 பேர் விடுதலையைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், “பாலியல் வன்முறை செய்து பலரை படுகொலை செய்தவர்களைச் சுதந்திர தின பவளவிழா என்று விடுதலை செய்வது கொடூரமான செயலாகும். இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட யாரும் இப்படி விடுதலைச் செய்யப்படவி்ல்லை. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ளனர். மாவோயிஸ்ட்கள், தமிழ் தேசியவாதிகள் உள்ளிட்டவர்களும் சிறையில் உள்ளனர். அவர்களை எல்லாம் அரசு விடுதலை செய்யவில்லை.

அப்படி இருக்கையில், குஜராத் பாஜக அரசு, படுகொலையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விடுதலை, இந்த நாட்டில் இனி நமக்கு நீதி கிடைக்காது என்ற உணர்வை சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. உலகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது நாடு இந்தியா தான். அவர்கள் மத்தியில், பில்கிஸ் பானு வழக்கின் விடுதலை நமக்கு நீதியும், நியாயமும் கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்கியிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல” என்றார்.

இப்படியான விமர்சனங்களுக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறது குஜராத் அரசு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in