சிக்கும் தேஜஸ்வி சூரியா, அண்ணாமலை; உலுக்கும் திமுக!

இன்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்
அண்ணாமலை - தேஜஸ்வி சூரியா
அண்ணாமலை - தேஜஸ்வி சூரியா

கிளம்பத் தயாரான விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததன் மூலம் சக பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூரியாக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன. தேஜஸ்வியை காங்கிரஸ் கட்சி தாக்க, சம்பவத்தின்போது தேஜஸ்வியுடன் இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக உலுக்க ஆரம்பித்திருக்கிறது.

72 பேர் பயணித்த நேபாள விமான விபத்தின் அதிர்ச்சியில் மக்கள் ஆழ்ந்திருப்பதன் மத்தியில் இந்த தகவல் வெளியானதில் பொதுவெளியின் கண்டனத்தையும் 2 பாஜக பிரமுகர்களும் பெற்று வருகின்றனர். உண்மையை மறைத்தது மற்றும் அதிகாரத்தை செலுத்தி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் இருவரையும் வளைத்து வருகின்றன.

டிசம்பர் 10 அன்று சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இண்டிகோ 6E7339 என்ற விமானம் பறக்கத் தயாராக இருந்தது. ஓடு தளத்தில் நகரத் தொடங்கிய நிலையில், விமானத்தின் அவசரகால உபயோகத்துக்கான கதவை, பயணிகளில் ‘எவரோ’ திறந்ததாக பீதி எழுந்தது. வெளிக்காற்று விமானத்தினுள் நுழைத்ததில் பயணிகள் நிஜத்தில் அதிர்ந்து போனார்கள். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.

விமான நிலைய பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர். விமானத்தின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் கிளம்ப 2 மணி நேரம் தாமதமானது.

இன்டிகோ விமானம்- மாதிரி படம்
இன்டிகோ விமானம்- மாதிரி படம்

பயணிகளில் ஒருவர் விளையாட்டுத்தனமாக எமர்ஜென்சி கதவை திறந்ததே அத்தனைக்கும் காரணம் என தெரியவந்தது. விமான நிலைய அதிகாரிகளின் விசாரணையில், அந்த பயணியிடம் தவறுக்கு வருத்தம் கோரும் கடிதம் பெற்ற பின்னரே அவர் அதே விமானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு அப்பால் அந்த விஐபி மீது நடவடிக்கை ஏதும் பாயவில்லை.

அந்த பயணி யார் என்பதில் விமான நிறுவனம், விமான நிலையம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், காவல்துறை என சகலரும் கமுக்கம் காத்தனர். அது தொடர்பான தகவல் பரிமாறல்களிலும் ’ஒரு பயணி’ என்றே குறிப்பிட்டிருந்தனர். பாஜகவை சேர்ந்த அந்த விஐபி யார் என்று கேள்வி எழுப்பியோர் மத்தியில், டிச.29 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஐயம் கிளப்பினார். இதனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் தலை உருண்டது. ஆனால் அண்ணாமலையும் அமைதி காத்தார்.

தற்போது சுமார் ஒரு மாதத்துக்கும் மேலான இடைவெளியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ), டிச.10 இன்டிகோ சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இன்டிகோ விமானத்தில் உடனிருந்த பயணிகள், எமர்ஜென்சி கதவைத் திறந்த விஐபி குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்ததே இதற்கு காரணம். பாஜகவின் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி எம்பியான தேஜஸ்வி சூரியாவை அனைவரும் குற்றம்சாட்டியதோடு, உடனிருந்த அண்ணாமலை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

திமுகவினர் பரப்பும் மீம்
திமுகவினர் பரப்பும் மீம்

பாஜக விஐபிக்களான இருவரும் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி, இந்த விவகாரத்தில் தேஜஸ்வி சூரியாவுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளில் தப்பியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுக்கின்றன. அதிலும் சமரசமற்ற பொதுவாழ்க்கையில் பயணிப்பதாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் அண்ணாமலையை சுற்றியும் கேள்விகள் அலையடிக்கின்றன. டிஜிசிஏ விசாரணையில் தேஜஸ்வியின் உடனிருந்த அண்ணாமலையும் ஆளாக நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததான இதற்கு முந்தைய சம்பவங்களில், குற்றம் இழைத்தவர் கைது நடவடிக்கைக்கும் ஆளாகி உள்ளார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேஜஸ்வி இந்த விவகாரத்தில் தன் மீதான நடவடிக்கை பாயாமல் பாதுகாப்பு பெற்று வருவதாகவும் காங்கிரச் தாக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் தேஜஸ்வியை காங்கிரஸ் கவனிக்கட்டும் என உடனிருந்த அண்ணாமலையை திமுக குறிவைத்துள்ளது.

இன்டிகோ உட்பட இந்தியாவின் பல்வேறு தனியார் விமானங்கள் தொடர்ச்சியான தடுமாற்றங்களுக்கும், பயணிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் வரையிலான ஆகாய சொதப்பல்களுக்கும் ஆளாகி வருகின்றன. இவற்றின் மத்தியில் டிச.10 இன்டிகோ விவகாரம் பொதுவெளியில் பாஜகவினரை சங்கடத்தில் தள்ளியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in