‘அடுத்த குடியரசுத் தலைவர் நீங்களா?’ - தமிழிசை பதில்

‘அடுத்த குடியரசுத் தலைவர் நீங்களா?’ - தமிழிசை பதில்

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவரிடம் நிருபர்களிடம் பேசிய அவர், "உலகில் கரோனா இல்லாத நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா இருக்கிறது. அதற்குக் காரணம் 180 கோடி தடுப்பூசி போட்டதுதான். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புதான் இந்தச் சாதனைக்குக் காரணம். இருந்தபோதிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்" என்றார்.

தெலங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில்லாமலேயே சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியிருப்பது பற்றி கேட்டபோது, “அதனை நான் பெரிதுபடுத்தவில்லை.. மக்களுக்காக அதை விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றார்.

“5 மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நேரத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி, ‘ஒரே நாடு... ஒரே தேர்தல்’ திட்டத்துக்குத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளாரே?" என்று கேட்டதற்கு, “இதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் ஒரு சாதாரண குடிமகள், அவ்வளவுதான்” என்றார்.

“குடியரசுத் தலைவர் பதவிக்கும் உங்களுடைய பெயர் பரீசிலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே?" என்ற கேள்விக்கும், அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “மார்ச் 27-ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் விமான சேவை தொடங்க இருக்கிறது. புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம் என்று நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டோம். அதை நிறைவேற்றிய பிரதமருக்கும், விமானப் போக்குவரத் துறை அமைச்சருக்கும் நன்றி. இது புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கும் உதவுவதுடன், புதுச்சேரியையொட்டி உள்ள கடலூர், நாகை, திருவாரூர் மக்களுக்கும் உதவிகரமாக அமையும்" என்றார்.

பெங்களூரு - ஹைதராபாத் நகருக்கு இடையே பறக்கும் முதல் விமானத்தில் தான் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.