சோழமண்டல அதிமுகவின் அடுத்த தளபதி யார்?

டெல்டாவில் சூடுபிடிக்கும் அதிமுகவின் அரசியல் நகர்வுகள்!
சோழமண்டல அதிமுகவின் அடுத்த தளபதி யார்?

தமிழக அரசியல் கட்சிகளுக்கு டெல்டா மாவட்டங்கள் மிக முக்கியமானவை. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களைப்போல ஒட்டுமொத்தமாக ஒருபக்கமே சாயாமல், எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் தெளிவுமிக்கவர்கள் டெல்டாவாசிகள் என்பதுதான் அதற்குக் காரணம். அதனால் திமுகவும் அதிமுகவும் சோழமண்டத்தில் எப்போதுமே வலுவான ஒரு தளகர்த்தரை உருவாக்கி வைத்திருக்கும்.

அந்த வகையில், தற்போது அதிமுகவுக்கு சோழமண்டல தளபதியாக இருந்த ஆர்.வைத்திலிங்கம் ஓபிஎஸ் பக்கம் கரை ஒதுங்கிட்டதால் அடுத்தது யார் என்ற போட்டி அங்கே பேசுபொருளாகி இருக்கிறது. எம்ஜிஆர் காலத்து அதிமுகவில் எஸ்.டி.சோமசுந்தரமும் எஸ்.ஆர்.ராதாவும் துரை.கோவிந்த ராஜனும் சோழமண்டல தளபதிகளாக இருந்தார்கள். மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்த எஸ்.டி.சோமசுந்தரம், 1971-ல் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக நின்று வென்றவர்.

எஸ்.டி.சோமசுந்தரம்
எஸ்.டி.சோமசுந்தரம்

அப்படிப்பட்டவர் எம்ஜிஆர் திமுகவை விட்டுப் பிரிந்தபோது உடன் சென்றார். அந்தப் பிரியத்தில் அடுத்துவந்த 1977 மக்களவைத் தேர்தலிலும் எஸ்டிஎஸ்சையே தஞ்சாவூர் அதிமுக வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைத்தார் எம்ஜிஆர். அந்தக் காலகட்டத்தில் எஸ்டிஎஸ் என்ன சொன்னாலும் கேட்பவராக இருந்தார் எம்ஜிஆர். அதனால், எஸ்டிஎஸ் தயவில் பலபேர் பதவிக்கு வந்தார்கள். எம்ஜிஆர் அமைச்சரவையில் எஸ்டிஎஸ்சுக்கும் முக்கிய இடம் கிடைத்தது. ஆனாலும், ஜெயலலிதாவுக்கு 1984-ல் ராஜ்ய சபா கொடுத்ததில் எம்ஜிஆருடன் முரண்பட்ட எஸ்டிஎஸ், அதிமுகவை விட்டு வெளியேறி நமது கழகம் கண்டார். அது செல்லுபடி ஆகாததால் மீண்டும் எம்ஜிஆர் அழைப்பை ஏற்று அதிமுகவுக்குத் திரும்பிய எஸ்டிஎஸ், ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். இருந்தாலும் அவரால் பழைய செல்வாக்கைப் பெறமுடியவில்லை.

எஸ்.ஆர்.ராதா
எஸ்.ஆர்.ராதா

அதிமுக தொடங்கப்பட்ட போது முதல் உறுப்பினராக எம்ஜிஆர் கையெழுத்திட்ட படிவத்தில் ஆறாவது நபராக கையெழுத்திட்டவர் எஸ்.ஆர்.ராதா. 1977 சட்டப் பேரவைத் தேர்தலில் வென்ற இவருக்கு அமைச்சரவையிலும் இடம் தந்தார் எம்ஜிஆர். அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய ராதாவை எம்எல்சி ஆக்கி அருகிலேயே வைத்துக்கொண்டார் எம்ஜிஆர். சோழமண்டலத்தில் கட்சியைக் காக்கும் தளபதியாக இவரை நம்பிய எம்ஜிஆர், இவருக்கு பலமுறை அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தார். அதனால் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகும் மங்காப் புகழுடன் இருந்தார்.

1989-ல் இவர் தான் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக இருந்தார். ஜா, ஜெ அணிகள் இணைப்புக்குப் பிறகு நடந்த மதுரை கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக நின்று வாகை சூடினார் ராதா. அதன் பிறகு அதிமுக, துதிபாடுகிறவர்களின் முகாமாக மாறிப் போனதால் நாகரிகத்துடன் ஒதுங்கிக் கொண்டார் ராதா.

துரை.கோவிந்தராஜன்
துரை.கோவிந்தராஜன்

அதிமுக சந்தித்த முதல் பொதுத்தேர்தலிலேயே திருவோணம் தொகுதியில் வெற்றிபெற்றவர் துரை.கோவிந்தராஜன். அடுத்த தேர்தலில் திருவையாறில் வென்றார். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இவர் அரசு கொறடாவாக பணியாற்றினார். அந்த அளவுக்கு எம்ஜிஆர் இவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் டெல்டா மாவட்டங்களில் இவரும் அதிமுகவுக்கு மிக முக்கியமானவராக விளங்கினார். காலப்போக்கில் இவருக்கான முக்கியத்துவமும் குறைந்துபோனது.

அடுத்ததாக வந்தார் அழகு திருநாவுக்கரசு. இவர் அதிமுக மாணவர் அணியிலிருந்தே தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர். ஆனாலும் ஜெயலலிதா காலத்தில் சசிகலாவின் கை ஓங்கி இருந்த நேரத்தில் தான் சசிகலாவின் ஜாதியைச் சேர்ந்த இவருக்கு முக்கியத்துவம் கிடைத்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளராகப் பதவியும் கிடைத்தது.

அழகு திருநாவுக்கரசு
அழகு திருநாவுக்கரசு

1991-ல் ஒரத்தநாட்டில் போட்டியிட்டு வென்ற அழகு திருநாவுக்கரசுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. மாவட்டச் செயலாளர், அமைச்சர் என இரட்டை அதிகாரத்துடன் டெல்டாவின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார் அழகு திருநாவுக்கரசு. ஒருகட்டத்தில் இவருக்கும் முக்கியத்துவம் குறைந்ததால் திமுகவில் இணைந்தார்.

அதன் பிறகு அடையாளம் காட்டப்பட்டவர் தான் ஆர்.வைத்திலிங்கம். சசிகலா குடும்பத்தின் மூலம் தனது செல்வாக்கை படிப்படியாக உயர்த்திக் கொண்டவர் வைத்தி. ‘செட்டில்மென்டில்’ கெட்டிக்காரர் என்பதால் ஜெயலலிதாவிடமும் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. அதனால் தான் கட்சியினர் மீதான புகார்களை விசாரிக்கும் கோர் டீமான நால்வர் அணியிலும் இவரை அங்கமாக்கினார் அம்மா.

2011-ல் ஒரத்தநாடு தொகுதியில் வென்ற வைத்திலிங்கத்தை அமைச்சரவைக்குள்ள்ளும் அழைத்துக் கொண்டார் ஜெயலலிதா. ஆனால், அடுத்த தேர்தலில் வைத்தியால் வாகைசூட முடியவில்லை. அந்த வாட்டத்தைப் போக்க அடுத்த சில நாட்களிலேயே அவரை மாநிலங்களவைக்கு அனுப்பினார் ஜெயலலிதா.

அம்மாவின் தயவு இருந்ததால் சோழமண்டலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வைத்திலிங்கம். ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கட்சியிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதும் வைத்தியின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. சசிகலாவால் அடையாளம் கட்டப்பட்ட வைத்திலிங்கம், தன்னை முழுமையாக ஆதரிப்பதைப் பார்த்து வியந்த எடப்பாடி பழனிசாமி அவருக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்தார். அதனால்தான் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் வந்தார் வைத்தி.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஆனால், ஒருகட்டத்தில் அதிமுகவுக்குள் தங்கமணியும் வேலுமணியும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் போனார் வைத்தி. அதுவும், தனது டெல்டாவுக்குள்ளேயே பெல் பிரதர்ஸ் மூக்கை நுழைத்தது அவரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதன் விளைவாக, அடிக்கடி எடப்பாடியுடன் மல்லுக்கு நின்றார். இதனால், வைத்திலிங்கத்தை சமாளிக்க முன்னாள் அமைச்சர் காமராஜை சத்தமில்லாமல் கொம்பு சீவியது எடப்பாடி தரப்பு. இதனால் வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் பக்கம் ஒதுங்கினார் வைத்தி. தான் எந்தப் பக்கம் போனாலும் தனது ஆதரவாளர்களும் தன் பின்னால் வந்துவிடுவார்கள் என நினைத்தார் வைத்தி. ஆனால், அது நடக்கவில்லை. இதுவரை அவருக்குப் பின்னால் நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது, “ஈபிஎஸ் வாழ்க” என்கிறார்கள். இதனால், அதிமுகவின் சோழமண்டல தளபதி என்ற மகுடத்தைத் தொலைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார் வைத்தி.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

எப்படியும் இனி ஓபிஎஸ் கை ஓங்கப்போவதில்லை என்ற முடிவுக்கு அதிமுக தொண்டர்களே வந்துவிட்டதால் சோழமண்டலத்தில் அடுத்ததாக அதிமுகவை வழிநடத்தப் போகும் தளபதி யார் என்ற பேச்சுகள் அலையடிக்க ஆரம்பித்திருக்கின்றன. முன்பு, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தற்போது சத்தமில்லாமல் இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நாட்டாமையாக இருந்தவர் இவர். ஜெயலலிதாவால் மக்களவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டவர். ஆனாலும், சசிகலாவுக்கு ஆகாதவராத ஆன பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு மறுக்கப்பட்டவர். அதன் பிறகு கேட்டதைக் ‘கொடுத்து’ எம்எல்ஏ சீட்டும் அமைச்சர் அந்தஸ்தும் பெற்றவர். இப்போது நாகை மாவட்டச் செயலாளராக மட்டும் நீடிக்கும் மணியன், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்சுக்கு நியாயம் கற்பிக்கிறார். ஆனாலும், அரசியல் நுணுக்கங்களைக் கற்ற அவரை டெல்டாவில் முன்னிறுத்துவதை ஈபிஎஸ் முகாம் விரும்பாது என்கிறார்கள்.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

மணியனை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் அந்த இடத்துக்கு வரக்கூடும் என்கிறார்கள். ஈபிஎஸ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவர் மனம் மகிழும்படி நடந்து கொண்டவர் காமராஜ். டெல்டாவில் விழா நடத்தி, ‘காவிரியின் காவலர்’ என்ற பட்டத்தை ஈபிஎஸ்சுக்குக் கொடுக்க வைத்தவர். ஒரு காலத்தில், திவாகரன் வீட்டுப் பந்தியில் சாம்பார் வாளி தூக்கியவர் என கிண்டலடிக்கப்பட்ட காமராஜ், சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கும் போது திவாகரனையும் கைது செய்ய திட்டம் வகுத்துக் கொடுத்தார். இதையெல்லாம் ஈபிஎஸ் வெகுவாக ரசித்தார்.

வைத்திலிங்கம் தனக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது முதலே அவரை ஒதுக்கிவிட்டு காமராஜை முன்னிலைப்படுத்தத் தொடங்கிவிட்டார் ஈபிஎஸ். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் அதிமுக நிர்வாகிகள் முன்கூட்டியே காமராஜிடம் ஐக்கியமாகிவிட்டார்கள். இப்போது வைத்திலிங்கம் வெளிப்படையாகவே வெளியில் போய்விட்ட நிலையில், அதிமுகவின் அடுத்த சோழமண்டல தளபதி என்ற இடத்தை நோக்கி இன்னும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் காமராஜ்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

டெல்டாவைத் தாண்டி சோழமண்டல அதிமுகவை நிர்வாகம் செய்யும் திறமை படைத்தவராக பார்க்கப்படும் இன்னொரு நபர் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். காமராஜுக்கு நிகராக இவரும் டெல்டா அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி படைத்தவரே. டெல்டாவில் வைத்திலிங்கத்தின் கட்டுப்பாட்டை உடைத்ததிலும் கட்சி நிர்வாகிகளை கலந்து பேசி செய்ய வேண்டியதைச் ‘செய்து’ அவர்களில் பெரும்பகுதியினரை ஈபிஎஸ் பக்கம் திருப்பியதிலும் விஜயபாஸ்கரின் விவேகமான சேவையும் உண்டு. வைத்திக்கும் சேர்த்தே விஜயபாஸ்கர் வலை விரித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. எத்தகைய நெருக்கடி களையும் சமாளிக்கும் வித்தைகள் தெரிந்தவர் என்பதால் விஜயபாஸ்கரையும் முக்கிய தளபதியாகப் பார்க்கிறது ஈபிஎஸ் தரப்பு. அதனால், சோழமண்டல அதிமுகவில் ஒரு பகுதி இவரது கட்டுப்பாட்டுக்குள் போனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

ஆக, ஈபிஎஸ் - ஓபிஎஸ்சின் ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்தை விடவும் டெல்டா அதிமுக யார் கட்டுப்பாட்டில் இனி இயங்கும் என்ற விவாதம் தான் அந்தப் பகுதியில் இப்போது பிரதானமாக இருக்கிறது. சோழமண்டல அதிமுக தளபதியாகும் யோகம் காமராஜுக்கா விஜயபாஸ்கருக்கா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in