புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? - இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு!

புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்? - இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு!

அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வைத்திருந்த கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் ஈபிஎஸ் தரப்பினரால் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் இன்று அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்து கட்சியை தன் வசம் கைப்பற்றி இருக்கிறார் ஈபிஎஸ். அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் வைத்திருந்த கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது ஈபிஎஸ் தரப்பு. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த கூட்டம், ஓபிஎஸ்ஸின் ஆட்சேப கடிதத்தால் சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சட்டசபையில் அதிமுகவுக்கு மொத்தம் 65 எம்.எல்.ஏக்கள். உள்ளனர். இவர்களில் 62 பேர் தற்போது ஈபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். எனவே இன்றைய இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவின்படி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அடுத்ததாக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது? என்கிற ஆலோசனையும் நடைபெறக் கூடும். கட்சியில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஓரம் கட்டப்படுவதாக சொல்லப்படும் நிலையில், ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே வழங்க ஈபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்து வேற்றுமை ஏற்பட்ட போது ஓபிஎஸ்-க்கு தகுந்த பதிலடி கொடுத்த நத்தம் விசுவநாதன், புரட்சித் தலைமகன் என்ற பட்டத்தை ஈபிஎஸ்க்கு வழங்கிய ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்களில் ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் ஈபிஎஸ் கவலைப்படவில்லை. கட்சியில் எடப்பாடிக்கு சீனியரான செங்கோட்டையனுக்கோ அல்லது அவரைப் போன்ற சீனியர் பெருமக்களுக்கோ எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை அவர் வழங்கவும் வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in