3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை: காரணம் என்ன?

3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை: காரணம் என்ன?

இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கரோனா ஏற்படுத்திய தாக்கத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மாதச்சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து அன்றாடக் கூலிகளாக அவர்கள் மாறி வருகின்றனர். உடல் உழைப்பு சார்ந்த முறைசாராத் தொழில்களில் 90 சதவீதம் பேர் சமூக பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்து வருகின்றனர். தமிழக வேலைவாய்ப்பகங்களில் வேலைக்காக சுமார் 71.55 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மை காரணமாக 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் , நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வேலையின்மை காரணமாக 9,140 பேரும், கடன் தொல்லை காரணமாக 16,091 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார். வேலையின்மைக்கும், இந்தத் தற்கொலைகளுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் காரணம் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எஸ்.பாலா
எஸ்.பாலா

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா நம்மிடம் பேசினார். “இந்தியாவின் பிரதான பிரச்சினையே வேலையின்மைதான். இதனைத் தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

நூறு நாள் வேலைத்திட்டத்திற்குக் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. ஆனால், அந்த நிதியை வெட்டிச் சுருக்கியுள்ளது. 2021-2022-ம் ஆண்டுக்கான நூறு நாள் திட்டத்திற்கு 98 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, 2022-2023-ம் ஆண்டுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் கிராமப்புற மக்களும் வேலையிழப்பார்கள். இதன் காரணமாக, அங்கும் தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கும்.

பொதுத்துறை முதலீடு அதிகரித்தால்தான், வேலைவாய்ப்பு பெருகும். ஆனால், பொதுத்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவளிப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால்தான் வேலை கிடைக்காத விரக்தியில் இத்தனை பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என்று குற்றம்சாட்டினார் பாலா.

ஆர்.ஸ்ரீனிவாசன்
ஆர்.ஸ்ரீனிவாசன்

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, “கரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டன. ஆனால், 130 கோடி பேர் உள்ள இந்தியாவில் பட்டினிச்சாவு நடக்கவில்லை. அனைவருக்கும் ரேஷனில் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க மோடி தலைமையிலான அரசு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை முக்கியமான பிரச்சினைதான். அதற்காகத்தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும், மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ளீடாக வேலைவாய்ப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் விரக்தி அடைய வேண்டாம். மோடியின் புதிய இந்தியாவில் அனைவருக்குமான வேலைவாய்ப்பை உருவாக்க திட்டங்கள் இருக்கின்றன. எனவே, மத்திய அரசு மீது, இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.