முற்றும் அதிருப்தி: பாஜகவில் மோடிக்கு மாற்று முகம் யார்?

மோடி - அமித் - யோகி
மோடி - அமித் - யோகி

தற்போதைக்கு பாஜகவின் மகத்தான தலைவர் மோடி என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதிருக்கலாம். ஆனால் அதானியின் அடிசறுக்கல், பிபிசி ஆவணப்படம், ராகுலின் எழுச்சி, கூட்டுசேரும் எதிர்க்கட்சிகள், மருகும் உட்கட்சித் தலைவர்கள் என அதிகரிக்கும் எதிர்ப்பு மற்றும் அதிருப்திகளுக்கு மத்தியில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் முனைப்புக்கு மோடி தொடர்ந்து எடுபடுவாரா? அப்படி மோடி பின்னகர்ந்தால் அவர் இடத்தை நிரப்பப்போவது யார்? அமித் ஷாவா, யோகி ஆதித்யநாத்தா அல்லது இன்னொருவரா? இதுதான் அடுத்து வரும் ஓராண்டுக்கு தேசத்தின் அரசியல் கேள்விகளில் பிரதானமாக நீடிக்க இருக்கிறது.

அதானியின் விமானத்தில் மோடி
அதானியின் விமானத்தில் மோடி

முற்றுகையில் மோடி

ஒன்று மட்டும் நிச்சயம். வளர்ச்சியின் நாயகனாக குஜராத் முதல்வர் பதவியை துறந்து டெல்லி வந்தபோது தென்பட்ட மோடி மீதான எதிர்பார்ப்புகள், அதானி நிறுவன பங்குகள் போல இப்போது வெகுவாய் சரிந்திருக்கின்றன. மோடி முன்னிறுத்திய குஜராத் மாடல் வளர்ச்சி, தேசிய அளவில் ஏனோ எடுபடவில்லை. பெரும்பான்மை மாநிலங்களை பாஜகவே ஆளும்போதும், தேசிய வளர்ச்சி என்பது தட்டிப்போகவே செய்கிறது. பணமதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, சகலத்திலும் ஒற்றைத் தத்துவம் என மோடி தலைமையிலான பாஜக முன்னெடுத்த அதிரடிகள் பலவும் கவைக்கு உதவவில்லை.

இந்த வரிசையில் புதுப்புது அதிர்ச்சிகளாலும் மோடி முகாம் தாக்குண்டு வருகிறது. மோடியோடு சேர்ந்து வளர்ந்த அதானி குழுமம், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகக் காத்திருந்தது போல, அதள பாதாளத்தில் சரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து காபந்து பெற, தேசியத்தின் பெயரில் ஒளிந்துகொள்ள அதானி முயன்றது, பாஜகவையும் சேர்ந்து சேதாரம் செய்திருக்கிறது. ஹர்ஷத் மேத்தாவை காங்கிரஸ் கைவிட்டதுபோல, அதானியை பாஜக உதற வேண்டும் என அதிருப்திகள் மோடியை நெருக்கி வருகின்றன. மோடி சாம்ராஜ்ஜியத்துக்கு அடித்தளமிட்ட அதானியை கைகழுவுவது சாத்தியமில்லை எனும்போது மோடியும் சரிவுக்கு ஆளாகிறார்.

மோடி - பிபிசி ஆவணப்படம்
மோடி - பிபிசி ஆவணப்படம்

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது படிந்திருந்த கறைகளை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கழுவியதாக பாஜகவினர் பெருமிதம் கொண்டிருந்தனர். போதிய சாட்சியங்கள் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் நீதியின் பிடியிலிருந்து தப்பியதாக எதிர்க்கட்சிகளால் அர்ச்சிக்கப்படும் மோடி, பிபிசி ஆவணப்படத்தை முன்வைத்து, சர்வதேச ஊடகங்களிடம் வசமாக சிக்கினார். அதனை மோடிக்கு எதிரான அஸ்திரமாக்கும் காங்கிரஸ், இதுவரை அரசியலில் தடுத்தாடி வந்ததை மாற்றி அடித்தாட ஆரம்பித்திருக்கிறது. பாஜகவினர் சித்தரித்து வந்த ’பப்பு’, தான் அல்ல என்பதை ராகுலும் தனது நடைபயணம் வாயிலாக உறுதி செய்திருக்கிறார். ராகுல் கரத்துக்கு வலு சேர்க்கும் வகையில், மோடி எதிர்ப்பின் கீழ் தேர்தல் கூட்டணிக்காக ஒரே குடையில் சேரவும் பல்வேறு கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

மோடிக்கு மாற்று உண்டா?

எதிர்க்கட்சிகளுக்கு அப்பால், பாஜகவுக்குள்ளும் அதனை இயக்கும் ஆர்எஸ்எஸ் உடனுமாக அதிருப்திகள் அலையடிக்கின்றன.

ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை பின்தள்ளி, மோடி - அமித் ஷா ஜோடி குஜராத்திலிருந்து டெல்லியில் அமர்ந்தபோது, இதர தலைவர்கள் வாயடைத்துப் போனார்கள். ஆனால் அந்த நிலை இன்றில்லை. வெளியாரைவிட நிதர்சனத்தை நன்குணர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் மத்தியிலும் அதிருப்தி எழுந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத மோடி - அமித் ஷா இணையின் பிடியில் பாஜக லகான் இனியும் நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் அவர்கள் அவ்வப்போது ஆளாகி வருகிறார்கள்.

வழக்கமாக கட்சியை ஆட்டிப்படைக்கும் ஆர்எஸ்எஸ், மோடியின் பிரம்மாண்டத்துக்கு முன்னே முதல் முறையாக அடக்கி வாசிக்க வேண்டியதானது. பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே உரசல் எழும் தருணங்களில் எல்லாம், ஆர்எஸ்எஸ் வசமே ’வீட்டோ பவர்’ இருப்பது வழக்கம். ஆனால், அந்த பிரம்மாஸ்திரம் முதல் முறையாக மோடி வசம் சென்றதை ஆர்எஸ்எஸ் ரசிக்கவில்லை. அதனால்தான் மூன்றாம் முறையும் மோடி பிரதமராவதை விட யோகி ஆதித்யநாத் போன்றவர்களை வளர்த்து விடவே ஆர்எஸ்எஸ் ஆர்வம் காட்டுகிறது.

ஆர்எஸ்எஸ் ஷாகாவில் மோடி
ஆர்எஸ்எஸ் ஷாகாவில் மோடி

ஆனால், அவை அத்தனை சுலபமில்லை என்பதும், மோடிக்கு மாற்று இப்போதைக்கு இல்லை என்பதுமே நடைமுறை உண்மை. வயது முதிர்வு, சுகவீனம் என மோடியே சுயமாக ஒதுங்கிக்கொண்டால் ஒழிய, இன்னொருவருக்கு இப்போதைக்கு இடமில்லை. ஆனால், ஆரோக்கியமான ஓர் அரசியல் இயக்கம், அடுத்தது யார் என்பதை ஆராயாமல் இருக்காது. அந்த வகையில் பாஜக - ஆர்எஸ்எஸ் பரிசீலனையிலும் சிலர் இருக்கின்றனர்.

யோகிக்கு யோகம் எப்படி?

குஜராத்திலிருந்து மோடி வந்ததையும், உத்திரபிரதேசத்திலிருந்து யோகி ஆதித்யநாத்தை டெல்லிக்கு எதிர்பார்ப்பதையும் ஒப்பிடுவது எளிது. மாநிலத்தின் தன்னிகரற்ற தலைவர்கள், வளர்ச்சியின் நாயகர்கள், நாட்டின் உதாரண முதல்வர்கள், பெரும்பான்மைக்கு ஆதரவானவர்கள், எதிரிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குபவர்கள்... என மோடியின் வழி தொட்டே யோகியும் வளர்ந்து நிற்கிறார்.

மக்களவை பெரும்பான்மைக்கு ஆதாரமான 80 எம்பி-க்களை வைத்திருக்கும் மாநிலத்தின் முதல்வராக யோகி, குஜராத் மோடியை முந்தவும் செய்கிறார். இந்துத்துவத்தை தூக்கிப் பிடிப்பதிலும் பெரும்பான்மை மக்களை வசீகரிப்பதிலும் மோடியைக் காட்டிலும் அவரே வீரியம் காட்டுகிறார். அந்தளவில் ஆர்எஸ்எஸ் சாய்ஸின் முதல் பெயராக யோகிக்கே யோகம் அடிக்கிறது.

யோகி - மோடி
யோகி - மோடி

ஆனால், பன்மைத்துவம் வாய்ந்த தேசத்தின் பிரதமராக தீவிர சனாதனம் பேசும் ஒரு துறவியை முன்னிறுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அவலாகும் என்ற தயக்கமும் நிலவுகிறது. மேலும், வட இந்திய அளவுக்கு தெற்கே யோகிக்கு ஆதரவில்லை என்பதும் கண்கூடு. பிரதமர் வேட்பாளர் ரேஸில் யோகி தவிர்க்க இயலாது இருந்தாலும் இன்னும் இரண்டொரு மக்களவை தேர்தல்களுக்கு அவர் காத்திருக்க நேரிடும். மற்றுமொரு முக்கிய உட்கட்சி காரணியாக, அமித் ஷாவை தாண்டி பீடத்தில் அமரும் அளவுக்கு யோகிக்கு ஒளிவட்டமும் கூடவில்லை. அந்த வகையில் யோகியை, அமித் ஷா பின் தள்ளுகிறார்.

சாணக்கியரின் கணக்குகள்

காந்தி நகர் தொடங்கி டெல்லி வரை மோடி எட்டியிருக்கும் உயரங்கள் அனைத்திலும் அமித் ஷாவுக்கு பங்குண்டு. அமித் ஷா இன்றி மோடி இல்லை. ஆட்சியிலும் கட்சியிலும் மோடிக்கு அடுத்ததாக நம்பர் 2 இடத்தில் வீற்றிருக்கும் அமித் ஷா, மோடியின் இடத்தை நிரப்புவதுதானே முறையாக இருக்கும்!

உட்கட்சி பஞ்சாயத்துகள் தொடங்கி, மாற்றுக் கட்சிகளை உடைப்பது வரை அமித் ஷா போட்டுத்தரும் திட்டமே பாஜகவில் புளூ பிரின்டாக செல்லுபடியாகிறது. தேர்தலுக்கான வியூகங்கள், வாக்குறுதிகள், கூட்டணி பேரங்கள் என சகலத்திலும் அவரே நீக்கமற நிறைந்திருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையில் ’அமித்’ என்ற வார்த்தையை மோடி மூச்சாகவே சுவாசித்து வருகிறார். மோடிக்கு இணையாக வளர்ச்சி கண்டபோதும், அமித் ஷாக்கு உள்ளும் தனியாவர்த்தன தாகம் உண்டு. ஆனால், அதனை மோடி அனுமதிக்காத சோகமும் புதைந்திருக்கிறது.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

2016-ல் குஜராத் முதல்வர் பதவியை ஆனந்தி பென் படேல் ராஜினாமா செய்தபோது, அங்கே அமர ஆசைப்பட்டார் அமித் ஷா. வியூக விற்பன்னருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். அதற்கேற்ப காய் நகர்த்தி குஜராத்துக்கு நகர முயன்றவரை மோடி தடுத்தார். கட்சியின் உயர் நிர்வாகக் கூட்டத்தில் ’அமித் தவிர்த்து எவரை வேண்டுனாலும் நியமிக்கலாம்’ என மோடி அதிரடித்தார். குஜராத்தின் முதல்வராக அமர வேண்டும், கிரிக்கெட்டே கதியென்று இருக்கும் மகனை அரசியலிலும் வளர்த்து விட வேண்டும் என்று அமித் ஷாவுக்கு அந்தரங்கமாய் திட்டங்கள் இருந்தன.

ஆனால், அவரது அனுசரணை இன்றி மோடிக்கு டெல்லியில் எதுவும் செல்லாது என்பதால் தியாகியானார் அமித் ஷா. அப்படி குஜராத் முதல்வர் நாற்காலியை இழந்த வடுவோடு வலம் வரும் அமித் ஷா, டெல்லி பிரதமர் நாற்காலி தகையும் எனில் வேண்டாம் என்றா சொல்லப்போகிறார். அதற்கு அடிபோடும் வகையிலும் ஆதரவான சமூக ஊடக படைகள், சாதனைகளை விதந்தோதும் புத்தகங்கள் என்றெல்லாம் ஆர்வம் காட்டவும் ஆரம்பித்தார்.

ஆனால், சிறந்த நிர்வாகி, ராஜதந்திரி என்பதற்கு அப்பால் மோடி அளவுக்கு வசீகரமோ, மக்கள் கூட்டத்தை திரட்டும் வல்லமையோ அமித் ஷாவுக்கு இல்லாதது பெரும் குறையாகவே நீடிக்கிறது. ஓய்வை விரும்பும் மோடி ஒருவேளை, தன்னுடைய பிரதிநிதியாக அமித் ஷாவை அமர்த்த விரும்பலாம். ஆனால், அதற்கும் இன்னும் காலம் கனியவில்லை. அதுவரை மோடிக்கான அரசியல் தேரின் சாரதியாகவே அமித் ஷா பயணப்பட்டாக வேண்டும்.

பிரதமர் கனவில் முதல்வர்கள்

மோடி இடத்தை நிரப்புவதில் யோகி ஆதித்யநாத் - அமித் ஷாவுக்கு பின்னரே இதர தலைகள் பாஜகவில் தட்டுப்படுகிறார்கள். அவர்களில் இலவு காத்த கிளிகளான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி போன்றோர் தாமாக ஒதுங்கி நிற்கின்றனர். கட்சி மாறப்போகிறார் என்று வதந்தி கிளம்பும் அளவுக்கு விரக்தியில் ஆழ்ந்திருந்தார் நிதின் கட்கரி. இந்த டெல்லி தலைகளுக்கு அப்பால், யோகி போலவே மாநிலங்கள் மத்தியிலிருந்தே பிரதமர் நாற்காலியை நப்பாசையுடன் நோக்கும் புதிய தலைகள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

ஹிமந்த பிஸ்வா சர்மா - தேவேந்திர ஃபட்நவிஸ்
ஹிமந்த பிஸ்வா சர்மா - தேவேந்திர ஃபட்நவிஸ்

மகாராஷ்டிர தற்போதைய துணை முதல்வரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்நவிஸ், அசாம் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் அந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோடி, யோகி என பிரதமர் நாற்காலிக்கு தகுதியானவர்களை, முதல்வர் நாற்காலிகளில் இருந்து சலித்தெடுக்கும் பாஜகவின் உத்தி இனி கட்சியில் நிரந்தரமாகலாம்.

’மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி’ என்ற டபுள் இஞ்சின் சூத்திரம் போலவே, முதல்வர்கள் முயன்றால் பிரதமராகலாம் என்ற முன்னுதாரணமும் பாஜகவின் பிராந்திய வளர்ச்சியை இன்னும் வலுவாக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டு அண்ணாமலை போன்று மாநில அளவில் வளரும் இளம் தலைவர்கள் இன்னும் உத்வேகம் பெறுவார்கள்.

தேவேந்திர ஃபட்நவிஸ் ஏற்கனவே மோடி - அமித் ஷா குட் புக்கில் இடம் பிடித்திருக்கிறார். பாஜகவை எள்ளி நகையாடிய உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியை உடைத்து, ஆட்சியை பிடித்ததில் ஃபட்நவிஸ் புகழ் டெல்லி வரை பரவியிருக்கிறது. காங்கிரஸில் இருந்து வந்தபோதும், அசாம் முதல்வரான சர்மாவின் அரசியல் வசீகரமும், ஆளுமைத் திறனும் டெல்லியை கவனிக்க வைத்திருக்கிறது. இதனால் தேசிய அளவிலான உத்திவகுப்புகளில் இந்த இரு முதல்வர்களையும் கட்சித் தலைமை மறக்காது கலந்தாலோசித்து வருகிறது.

யோகி - அமித் - மோடி
யோகி - அமித் - மோடி

முடிவு மக்கள் கையில்

9 மாநில தேர்தல்களின் முடிவையொட்டியே, மூன்றாம் முறையாகவும் பிரதமர் வேட்பாளராக தான் நிற்பதா வேண்டாமா என்பதை மோடியே முடிவு செய்யும் வகையிலே தற்போதைய பாஜக நிலவரம் நீடிக்கிறது. இன்னும் இரண்டு தேர்தலுக்கு சுறுசுறுப்புடன் அரசியல் பணியாற்றும் அளவுக்கு அரசியல் ஆர்வமும், உடலுறுதியும் மோடிக்கு வாய்த்திருப்பதாக பாஜகவினர் புகழ்வதை புறக்கணிக்க முடியாது. மோடி இன்றி இப்போதைக்கு தேர்தலை எதிர்கொள்வதும், பாஜகவின் பத்தாண்டு சாதனைகளை பறைசாற்ற உதவாது.

எனவே, வழக்கம் போல அமித் ஷா உதவியுடன் மாநிலத் தேர்தல்களை முழுமூச்சுடன் எதிர்கொள்ளத் தயாராகிறார் மோடி. பட்ஜெட் அறிவிப்புகளே அதற்கு கட்டியமும் கூறி இருக்கின்றன.

இனி, எதிர் முகாம்களின் அரசியல் நகர்வுகளிலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் 9 மாநில மக்களின் தீர்ப்பிலும், 2024 மக்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் தீர்மானிக்கப்பட இருக்கிறார். அது மோடியாக அமையவே தற்போது வரையிலான நிலவரம் சொல்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in