ஜிப்மர் நிர்வாகத்திற்கு இந்த உரிமையை யார் வழங்கியது?- சு.வெங்கடேசன் காட்டம்

ஜிப்மர் நிர்வாகத்திற்கு இந்த உரிமையை யார் வழங்கியது?- சு.வெங்கடேசன் காட்டம்

"ஜிப்மர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அப்பட்டமான சட்ட மீறலாக தெரிகிறது. இந்தியில் மட்டுமே அனைத்து கோப்புகளும் இருக்கும் என்று நாடாளுமன்ற மொழியியல் குழுவிற்கு உறுதியளிக்கிற உரிமையை?" என்று சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரபல உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க, 'ஒரு நிலையம் ஒரு பொருள்' என்ற திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் சுங்கடி சேலை விற்பனையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீபத்தில் பாரம்பரியமிக்க மதுரை சுங்கடி சேலைக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்ந்த ஒன்றிய அரசு முயன்றது. இந்நிலையில், நிதி அமைச்சரை சந்தித்து 5 சதவீதமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து சுங்குடி சேலைக்கு முழுவதும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜிப்மர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அப்பட்டமான சட்ட மீறலாக தெரிகிறது. இந்தியில் மட்டுமே அனைத்து கோப்புகளும் இருக்கும் என்று நாடாளுமன்ற மொழியியல் குழுவிற்கு உறுதியளிக்கிற உரிமையை ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் வழங்கியது என்ற கேள்வி எழுகிறது. ஜிப்மர் நிர்வாகிகளுக்கு இந்த சுற்றறிக்கையை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு எதிராக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் விழிப்புடன் இருக்கும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மொழிகளுக்கான உரிமையை நிலை நிறுத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ச்சியாக விழிப்புணர்வுடன் பணியாற்றுவோம். முதன்முறையாக, ஒன்றிய அமைச்சர் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 2026 அக்டோபரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எழுத்துபூர்வமான வாக்குறுதியை அளித்துள்ளார்.

ஜைக்கா நிதி நிறுவனத்திடம் இருந்து எய்ம்சுக்கான நிதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. ஒன்றிய அரசின் நிதி பங்கிடுதலுக்கும் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் மதுரை எய்ம்ஸ், மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in