உறுதியாகிவிட்டதா உதயநிதியின் இலாகா?

முதல்வர் அறிவிப்பின் பின்னணியில் தடதடக்கும் செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருக்கும் சில அறிவிப்புகளையும் ஒப்பீடு செய்து, அதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மக்களவைத் தேர்தலில் ஆரம்பித்து, சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் திமுகவால் முன்னிலைப்படுத்த படுகிறார். கடந்த தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் அவரது பிரச்சாரம் நல்ல முறையில் கை கொடுத்தது என்பதை சுட்டிக்காட்டிய இளைஞரணி பிரமுகர்கள் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அப்போது அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஜூன் மாதம் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிகிறது. திமுக அரசு பதவியேற்று ஓராண்டு காலம் முடிவடைகிறது. அதனால் இந்த முறை அமைச்சரவை மாற்றம் உறுதி, அதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது நிச்சயம் என்று உறுதிபடச் சொல்கிறார்கள் உள்வட்ட விவகாரங்களை அறிந்தவர்கள். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதை ஒத்திப்போட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அமைச்சர்களுடன் அரசு விழாவில்  உதயநிதி ஸ்டாலின்...
அமைச்சர்களுடன் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின்...

உதயநிதி அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதிதான் என திமுக தரப்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னாலும், அதிலேயே இன்னொரு தரப்பினர் அதை மறுக்கவும் செய்கிறார்கள். “உதயாவுக்கு இப்போது வயது 44 ஆகிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் நடிப்பில் கவனம் செலுத்திவிட்டு அதன் பிறகு முழுநேர அரசியலுக்கு வந்துவிடலாம். அப்போது அமைச்சர் பதவியை ஏற்பது பற்றி யோசிக்கலாம் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. ஆனாலும் அவரது அம்மா துர்கா ஸ்டாலின், மகனை சீக்கிரமே அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என அவசரம் காட்டுகிறார். அது சம்பந்தமாக வீட்டுக்குள் நடக்கும் பேச்சுகள் வெளியே கசிந்துதான் ‘உதயநிதி அமைச்சராகிறார்’ என்ற செய்திகளாக மாறுகின்றன” என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், உதயநிதி அமைச்சராவது உறுதி என்று சொல்பவர்களோ, அவருக்கு என்ன இலாகா வழங்கப்படும் என அடுத்தகட்ட செய்திக்குப் போய்விட்டார்கள். முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகளை வைத்துப் பார்க்கும்போது உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக்கப்படலாம் என்றே தெரிகிறது. இதற்கேற்ப கடந்த 20-ம் தேதி பேரவையில் 110 விதியின் கீழ் அந்தத் துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர்.


தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள், அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள், ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், வட சென்னையில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்ட மைதானம் என பல அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்று சர்வதேச போட்டிகளைத் தமிழ்நாட்டில் அதிகமாக நடத்தி சர்வதேச கவனத்தை தமிழகம் நோக்கி திருப்பலாம், அதன் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்கலாம் என்றும் முதல்வர் பேரவையில் பேசியிருக்கிறார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் குழுவில் உதயநிதிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. உதயநிதியை மனதில் வைத்தே முதல்வர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு உதயநிதி அமைச்சராக்கப்பட்டு முதல்வர் அறிவித்த திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தினால் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை மற்ற முக்கியமான துறைகள் அளவுக்கு கவனப்படுத்த முடியும். அத்துடன் உலகத்தின் கவனத்தை பெற்றிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உதயநிதி ஸ்டாலினும் முதல்வருக்கு இணையாக வலம் வரமுடியும். அதன் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றும் சிலர் யோசனை சொல்கிறார்களாம்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு இளம் வாக்காளர்களை திமுகவின் பக்கம் திருப்பலாம் எனவும் திட்டமிடப்படுகிறதாம். ஜல்லிக்கட்டு போன்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கிராமப்புறங்களிலும் உதயநிதிக்கு செல்வாக்கு உயரக்கூடும். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு உதயநிதி அமைச்சராகிறார் என்ற செய்தி எங்கோ ஒரு மூலையில் இருந்து பரப்பப்படுகிறது.

“அனைத்துத் துறைகளிலும் தான் முதல்வர் தனிக்கவனம் எடுத்து ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படியிருக்க, உதயநிதியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக்கத்தான் அந்த துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.

வருங்காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் தலைமைப் பொறுப்புக்கு வரவிருப்பவராக கருதப்படும் உதயநிதியை அப்படியெல்லாம் முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர்த்த முதல்வரும் விரும்பமாட்டார்; அவரது மனைவி துர்காவும் அதை ரசிக்கமாட்டார். உள்ளாட்சி துறை அல்லது தொழில்துறை தான் உதயநிதிக்கான திமுக குடும்பத்தின் சாய்ஸாக இருப்பது போல் தெரிகிறது” ஆட்சிக்கு நெருக்கமான அதிகாரிகள் தரப்பில் இப்படியும் இப்படியும் ஒரு தகவல் தடதடக்கிறது.

ஜூனில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in