அதிமுக எங்கே போகிறது அண்ணே?: எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆதங்கம்

எஸ்.ஏ.அசோகன்
எஸ்.ஏ.அசோகன் அதிமுக எங்கே போகிறது அண்ணே?: எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆதங்கம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒற்றுமையாக இருந்தபோது குமரி அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன். கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கரம் ஓங்கிய பின்பு மொத்தமுள்ள 72 மாவட்ட செயலாளர்களில் 67 பேர் அவருக்கு ஆதரவு கொடுத்து பின்னால் சென்றனர்.

ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான எஸ்.ஏ.அசோகன் ஓ.பன்னீர் செல்வம் பக்கமே நின்றார். பழைய அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஓபிஎஸ் பக்கமே இப்போதுவரை நிற்கும் ஐவரில் இவரும் ஒருவர். குமரிமாவட்ட ஆவின் பால்வளத் தலைவராக இருக்கும் எஸ்.ஏ.அசோகன் அண்மைக்காலமாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு நீதிகேட்கும் தன்மையிலும், அதேநேரம் அதிமுகவினர் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுக்கும் நோக்கத்திலும் தொடர்ந்து பேசிவருகிறார்.

ஏற்கெனவே அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மாமாவும், அண்ணன் தளவாய்சுந்தரமும் மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து கட்சியைப் பலப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டை செய்யவில்லை. இப்போது பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதால் என்ன நன்மை? அதிமுக எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆதங்கம் ததும்ப பதிவிட்டுள்ளார்.

அதில், எடப்பாடி பழனிசாமிக்கு நானும் எதிரானவன் அல்ல. அண்ணன் ஓபிஎஸ்சுடன் இணைந்து பயணியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஏ.அசோகன் தன் சமூகவலைதளப் பக்கத்தில் “அண்ணன் எடப்பாடி அவர்களே, நம் அதிமுக எங்கே போய் கொண்டு இருக்கிறது? எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள். நாம் யாரோடு கூட்டணியில் இருக்கிறோம்? இல்லை.. யாரோடு கூட்டணி சேர போகிறோம்?

அண்ணே.. உங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. உங்களின் நான்கு ஆண்டு கால ஆட்சியை ரசித்தவன். எனக்கு வயது 57 தான். ஆனாலும், இயக்கத்தில் உங்களைப் போல நானும் சீனியர். ஆனால், அண்ணன் ஓபிஎஸ்சுக்கு துரோகம் செய்யும் தம்பியும் நான் அல்ல. ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துகொள்ளுங்கள். புரட்சிதலைவர் எம்ஜிஆரோ, புரட்சிதலைவி அம்மாவோ தங்கள் தனித்தன்மையை நிரூபிக்கும்போது பணத்தை வாரி இறைத்ததில்லை. பாசம்தான் அவர்களை அடையாளம் காண்பித்தது. எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியே வந்தபோது அவருக்கு பின்னால் நின்றவர்களும், ஜெயலலிதா துரைமுருகனால் சட்டசபையில் தாக்கப்பட்ட போது உயிரைக் கொடுத்து பின்னால் நின்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரனும்,திருநாவுக்கரசும், பிரின்ஸ் தங்கவேலும் பணத்திற்காக நிற்கவில்லை. பாசத்திற்காக நின்றார்கள்.

அதேநேரம் ஓபிஎஸ்சின் தர்மயுத்தத்தின்போது உண்மையான விசுவாச தம்பிகளான எங்களைப் போன்றவர்களை அவர் அருகே நெருங்கவிடாமல் கருப்புபூனை போல சுற்றி நின்று கே.பி.முனுசாமி சாப்பிடும் சோற்றில் மண்ணை அள்ளிவைத்து துரோகம் செய்தார். இன்று உங்களுக்கு விசுவாசியாக நடிக்கும் அவர் நாளை உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டாரா? தர்மருக்கு கொடுத்த எம்பி பதவி ஜெயகுமாருக்கு கொடுத்து இருந்தால் இன்று ஜெயகுமாரும் வாய்திறக்க மாட்டார். இன்று பாஜக நிர்வாகிகளை நம் பக்கம் சேர்ப்பது சொந்த அண்ணனின் மகனை உன் அப்பாவோடு இருக்காதே, சித்தப்பாவான என்னோடு வா என்று அழைப்பது போல் அல்லவா உள்ளது .அவன் அங்கே இருந்தாலும் நமக்கு தானே ஓட்டு போடுவான். திமுக நிர்வாகியை நம் கட்சியில் சேருங்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரை சேருங்கள். அதை விட்டுவிட்டு இதெல்லாம் என்ன அரசியல்? வீட்டில் ஒய்வு எடுக்கின்ற நேரம் கண்ணை மூடிக்கொண்டு ஐந்து நிமிடம் சிந்தியுங்கள். பணம் கொடுத்து சேர்க்கும் அன்பு ஒருகாலமும் நிரந்தரம் இல்லை. பாசத்தால் வருகிற அன்பே நாம் பாடையில் போகும் வரை கூடவே இருக்கும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்சுக்கு ஒரு ராசி உண்டு அந்த ராசி நம்மை ராஜ்ஜியத்தை ஆளவைக்கும் ”என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in