‘எங்கே எங்கள் எய்ம்ஸ்..?’

மதுரையில் நாளை தொடர் முழக்கப் போராட்டம்
‘எங்கே எங்கள் எய்ம்ஸ்..?’

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை தொடங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ’எங்கே எங்கள் எய்ம்ஸ்’ என்ற தொடர் முழக்க போராட்டம் மதுரையில் நாளை (ஜன.24) நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்தில் மதுரை மக்கள் திரளாக பங்கேற்குமாறு மதுரை எம்பி சு.வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சு.வெங்கடேசன் எம்பி பேசும்போது, “தமிழ்நாட்டு தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வென்றெடுக்க, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நாளை காலை 1்0 மணிக்கு ’எங்கே எங்கள் எய்ம்ஸ்’ தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்ற உள்ளார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட அதே நிலையில் தான் இன்றும் உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவனை ரூ. 1,264 கோடி மதிப்பில் கட்டப்படும் என 2018ல் அறிவித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்தாண்டு மறு மதிப்பீடு செய்து ரூ.1,977 கோடியாக உயர்த்தியது. ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை பிப்.1ல் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் முழு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணி துவங்கும் தேதியை முறைப்படி அறிவிக்க வேண்டும். எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்க ஒன்றிய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை அரசியலின் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு பார்க்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டியுள்ளது. தொடர் அழுத்தம் காரணமாக ரூ.2.50 கோடி மதிப்பில் மருத்துவமனைக்கான நிர்வாகப்பிரிவு கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தொடர் அலட்சிய போக்கால், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர், பட்டம் பெற்று வெளியேறும் 2026-ஆம் ஆண்டில் கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாது.

நிலம் வழங்குவதை தவிர எய்ம்ஸ் பணிக்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவின் அலட்சியம், குறுகிய அரசியல் பார்வையால் தான் பணிகள் தாமதமாகிறது” என்றார்.

கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாநகர் மாவட்டடச் செயலாளர் கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் விஜயராஜன், பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in