எப்போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்?: அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.எப்போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்?: அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல்வராக நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவசப் பேருந்து திட்டத்துக்காகத்தான். முதல் நிதிநிலை அறிக்கையிலேயே, மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதத்திற்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் புதுமைப் பெண் திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம்.

மகளிருக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை ஒழிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் இலட்சியங்களை அடைவதற்கு தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கையும் விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. அதன் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் இந்த மகளிர் நாள் செய்தியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம். பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in