``இன்னும் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்படும்'' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கடந்த சட்டசபை தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், முக்கியமானதாக மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தது. அண்மையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் எனவும் நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும் என்றும் நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், மகளிர் மேம்பாட்டிற்காக நாமக்கல் கவிஞர் பெயரில் கலைஞர் உருவாக்கிய மகளிர் அரசு கலை கல்லூரியில், தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நாமக்கல் கவிஞரின் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதையடுத்து, நாமக்கல்லில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார்" என்று கூறினார்.