மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் எப்போது?

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

பெண்கள், பட்டியல் இனத்தோருக்குக் கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாகவும் இருக்க முடியும். அதை மையமாக வைத்து தேர்தல் அரசியலில் மாற்றுத் திறனாளிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசுப் பணிகள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், அரசியல் மட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத சூழலே நிலவுகிறது. திராவிடக் கட்சிகளில் மாற்றுத் திறனாளிகளில் ஒருவர் கூட மாவட்டச் செயலாளர் இல்லை. மாவட்ட அணிச் செயலாளர்களில் கூட மாற்றுத் திறனாளிகள் யாரும் இல்லை. அண்மையில், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பாரதி என்ற கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியை நியமித்து மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் புரட்சி செய்திருந்தது. பாஜக, காங்கிரஸ் கட்சியிலும் கூட மாற்றுத் திறனாளிகள் யாரும் மாவட்டத் தலைவராக இல்லை.

அரசியல் கட்சிகளும் வழக்கறிஞர் அணி தொடங்கி, விவசாய அணி வரை அமைப்புகளை வைத்திருக்கிறது. ஆனால் உண்மையில் மற்றொருவரின் உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அணி எதுவும் இல்லை. பாஜக ‘சக்‌ஷம்’ என்னும் பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு பிரிவும், மார்க்சிஸ்ட் கட்சி மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பும் வைத்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விசயம். ஆனாலும் தேர்தலில் பிரதானக் கட்சிகள் மாற்றுத் திறனாளிகள் போட்டியிடுவதற்குக் கூட அரசியல் கட்சிகள் வாய்ப்பு அளிப்பதில்லை. நம் தமிழகத்தில் இருக்கும் 234 சட்டப்பேரவை உறுப்பினரில் எவரும் மாற்றுத் திறனாளி இல்லை. ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவமே இல்லாமல் அந்த மக்களின் வலியும், வேதனையும் எப்படி அரசியல் மட்டத்தில் எதிரொலிக்கும்?

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் என பல சமூக நீதி சட்டங்களை இயற்றி வருகிறார். தமிழகத்தில் அந்தவகையில் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டையும் அறிமுகம் செய்துவைத்து, இந்தியாவுக்கே முன்னோடியான மாநிலமாக மாற்ற முடியும். மாற்றுத் திறனாளிகள் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்வது மட்டுமே அந்தச் சமூகத்தின் விடுதலைக்கு பாதையாகும் என்பதே, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in