நிவாரண நிதி எப்போது? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

நிவாரண நிதி எப்போது? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் வந்த பிறகு முடிவு செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், “கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் இன்று ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு முன்பாகவே அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், ரகுபதி, மெய்யநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அங்குப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார்கள். அப்பகுதிகளில் நிவாரணம் கொடுப்பதற்கு அரசின் வரையறை இருந்தாலும், முதல்வர் அங்குப் பார்வையிட்டு வருவதால் அவர் வந்த பிறகுதான் அதற்கு முடிவு தெரியும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருந்தால் 4800 ரூபாய், குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் 5000 ரூபாய், பகுதியளவு இடிந்திருந்தால் 4100 ரூபாய், கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் 95,000 ரூபாய் இது தற்போதைய அரசின் வரையறையாக உள்ளது.

முதல்வர் பார்வையிட்டு வந்த பிறகு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டிய பணிகளைச் செய்ய உள்ளோம்.

கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என 99 இடங்களில் நிவாரண மையங்களை நாங்கள் திறந்து வைத்துள்ளோம். அங்கே 52,251 பேர் அங்கு தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை செய்து வருகிறோம். அடுத்து வர இருக்கும் மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இந்த மழையை நாங்கள் பேரிடராகப் பார்க்கவில்லை. மழை தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி பெறுவது குறித்து முதல்வர் வந்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in